ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் போர் மூண்டது. உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் படையெடுத்த ரஷியா, உக்ரைனின் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை முதலில் கைப்பற்றியது. எனினும், உக்ரைன் பதிலடி கொடுத்து அவற்றை மீட்டது. போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளித்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகள் ராணுவம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. ரஷியாவுக்கு, வடகொரியா ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. போரில் இரு தரப்பிலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று சந்தித்து பேசினார். புதினுடன் இரண்டரை மணிநேரம் ஆலோசனை மேற்கொண்டதில், உக்ரைன் பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றத்திற்கான விசயங்கள் நடந்துள்ளன என அவர் கூறினார். இதுபற்றி வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் அவர் பேசும்போது, ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்படுகிற பயங்கர சூழல் உள்ளது. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலருடனும் நாங்கள் பேசியுள்ளோம் என்று கூறியுள்ளார். ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகள் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவார்கள் என குறிப்பிட்டார். அதற்கேற்ப வாடிகன் தலைமையும், பேச்சுவார்த்தைகளை நடத்த விருப்பம் தெரிவித்து உள்ளது என்றார்.