தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் கலைஞரால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிய குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டன. அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் சென்னையில் கைலாசபுரம் திட்டப்பகுதியில் தூண் மற்றும் 14 தளங்களுடன் 63 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் 392 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்; காஞ்சிபுரம் மாவட்டம், சாலமங்கலம் பகுதி 1 திட்டப்பகுதியில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 51 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் 420 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 527 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4,978 குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 152 திட்டப் பகுதிகளில் 5,946.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 52,397 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில், 773.64 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3113 தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள், 841.70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1447 அடுக்குமாடி குடியிருப்புகள், 56.31 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 1603 மனை மேம்பாட்டு திட்டம், 117.17 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 10 வணிக வளாகங்கள், 67.32 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 7 வாரிய கோட்ட அலுவலகங்கள் மற்றும் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் நகர் ஊரமைப்பு இயக்ககத்திற்கு 10.88 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 3 கோட்ட அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டம், நெற்குன்றத்தில் 25 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், சி.ஐ.டி நகர் பகுதி 6-ல் 64 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம், சி.ஐ.டி நகர் பகுதி 7-ல் 66 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் மற்றும் மதுரை மாவட்டம், தோப்பூரில் 51 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் என மொத்தம் 207 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 4 வணிக வளாகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்கள் சு.முத்துசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.