பணம், நகைக்காக அப்பாவி ஆண்கள் மற்றும் மனைவிகளை இழந்த ஆண்களை குறி வைத்து திருமணம் செய்து ஏமாற்றும் பெண்களை அறிந்திருக்கிறோம். கோவையைச் சேர்ந்த மடோனா என்ற பெண் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓய்வுபெற்ற மற்றும் கணவரை இழந்த அரசு ஊழியர்களை வலையில் வீழ்த்தி திருமணம் செய்து நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பெண் 25 பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த அந்த இளம்பெண்ணின் பெயர் அனுராதா ஹேக். இவர் தன்னை ஒரு மணப்பெண்ணாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆண்களை ஏமாற்றியுள்ளார். திருமணத்திற்காக தீவிரமாக பெண் தேடும் நபர்களை குறிவைத்து திருமணம் செய்து, குறுகிய காலத்திலேயே அவர்களிடம் உள்ள நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார். இதற்காக சில திருமண தரகர்களையும் கையில் வைத்திருந்தார்.
மிகவும் அதிநவீன முறையில் திருமண மோசடியில் ஈடுபட்ட இவர் சிலரை குறிவைத்து, திருமணத்துக்குப் பெண் நகை பணத்தை திருடிக் கொண்டு மாயமாகி உள்ளார். ராஜஸ்தானின் சவாய் மாதோப்ப்பூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு சர்மா எனும் நபர் கடந்த மே 3-ந் தேதி காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில், “வரன் பார்த்து தரும்படி திருமண ஏஜெண்ட்களான சுனிதா மற்றும் பப்பு மீனா ஆகியோரிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்தேன். அவர்கள் அனுராதாவை மணமகளாக எனக்கு அறிமுகம் செய்தனர். தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 20ம் தேதி உள்ளூரில் உள்ள நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டோம். ஆனால், மே 2ம் தேதியன்று வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களுடன் தப்பிச் சென்று விட்டார்” என விஷ்ணு சர்மா புகாரளித்துள்ளார். இது குறித்த தொடர் விசாரணையில்தான் அனுராதா ஹேக்கின் திருமண மோசடி அம்பலமானது. சர்மாவின் வீட்டிலிருந்து அனுராதா காணாமல் போன பிறகு, போபாலில் கப்பர் என்ற மற்றொரு நபரை அனுராதா திருமணம் செய்து கொண்டு அவரிடமிருந்து ரூ.2 லட்சம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வருங்கால மணமகனாக காட்டிக் கொண்டு அனுராதாவை காவல்துறை மடக்கி கைது செய்துள்ளனர். அனுராதா ஹேக் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 7 மாதத்தில் 25 பேரை அவர் திருமணம் செய்து பணம், நகைகளை சுருட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கன்ஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த அனுராதா, குடும்ப பிரச்சனை காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து போபாலில் குடியேறியுள்ளார். அங்கு தான், உள்ளூர் திருமண ஏஜெண்டுகளுடன் சேர்ந்து திருமண மோசடிகளில் ஈடுபடும் நபர்களுடன் அனுராதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏஜெண்டுகள் வாட்ஸ்அப் வாயிலாக மணமகள்களை அறிமுகப்படுத்தி, தங்களது சேவைக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்துள்ளனர். அதன்படி, திருமணம் நடந்தும் ஒரே வாரத்தில் மணமகள் மணமகனை விட்டு ஓடிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.