ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசும் அறிவித்துவிட்டது. ஆனால் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒன்றிய அரசு நிறைவேற்றிய கல்வி உரிமைச் சட்டப்படி, தனியார் சுயநிதி பள்ளிகள் முதல், ஒன்றிய அரசின் கேந்திரிய வித்யாலயா வரை அனைத்துப் பள்ளிகளிலும் 25 சதவீதம் கட்டணம் செலுத்த இயலாத, உழைக்கும் மக்களின் குடும்ப குழந்தைகள் சேர்க்கப்பட வேண்டும் என்பது சட்டப்படியான கடமையாகும். வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசும் அறிவித்துவிட்டது. ஆனால் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை. பிஎம் ஸ்ரீ திட்டத்ததை ஏற்றுக் கொண்டால் தான் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்துக்கான நிதியை வழங்க முடியும் என்று பாஜக ஒன்றிய அரசு நிபந்தனை விதித்து மறுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடந்துள்ளது. இந்த நிலையில் தனியார் கல்வி நிறுவனங்கள், கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.