பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 5-ந்தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. 24 மணி நேரத்திற்குள் டிரெய்லர் யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தில் வைரலானது இந்நிலையில், தக் லைஃப்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்கு 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் படம் வெளியாகும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “தக் லைஃப்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டுக்கு 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் படம் வெளியிடப்படும். இந்த முடிவை எந்த தயக்கமும் இல்லாமல் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இது ஒரு சோதனை முயற்சி அல்ல. நன்கு ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம். இதுதான் திரைத்துறைக்கு ஆரோக்கியமான போக்கு” என்று தெரிவித்தார்.
