பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் குர்ஷ்தர் மாவட்டம் ராணுவ பள்ளிக்கூடம் உள்ளது. இதில் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பஸ் சென்றுகொண்டிருந்தது. மலைப்பகுதி அருகே உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பஸ் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 3 பள்ளிக்குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 38 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பாதுகாப்புப்படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பலூசிஸ்தான் விடுதலை அமைப்பு என்ற கிளர்ச்சிக்குழுவுக்கும், பாகிஸ்தான் அரசுப்படைகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிலவி வருகிறது. அந்த அமைப்பு இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, இந்த தாக்குதல் பின்னணியில் இந்தியா உள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.