பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது சினிமா தயாரிப்பாளர் மோசடி புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மீது ரூ.25 லட்சம் மோசடி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ் பையன் இந்தி பொண்ணு என்ற படத்திற்கு இசை அமைப்பதற்காக இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.-க்கு ரூ.25 லட்சம் முன்பணம் கொடுத்தேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் அப்படத்தின் பணிகள் பாதியிலேயே நின்றது. தற்போது அப்படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. ஆனால் இப்படத்திற்கு இசை அமைக்காமலும் கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் சாம் சி.எஸ் ஏமாற்றி வருகிறார்” என்று சமீர் அலிகான் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
