பெண்கள் பணிபுரியும் இடங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் என்ன ஆனது? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது: `திமுக-வின் அவல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி!’ பெண்கள் மரியாதையுடனும், கவுரவத்துடனும், பாதுகாப்புடனும் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டதற்கு மற்றும் ஒரு சம்பவம் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.அப்பாவி பெண்களை ‘சார்’-களுக்கு இரையாக்கும் ஒரு சில திமுக நிர்வாகிகளின் லீலைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், மறுபுறம் கல்வியைக் கற்பிக்கும் ஒருசில ஆசிரியர்கள் தங்கள் வரம்புகளை மீறி உளவியல் ரீதியாக பெண்களை, குறிப்பாக உடன் பணியாற்றும் ஆசிரியைகளையும், மாணவிகளையும் தகாத வார்த்தைகளில் பேசுவதும், வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுவதும் இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
‘சென்னை பல் மருத்துவக் கல்லூரியில்’ பணிபுரியும் ஒரு துறையின் தலைவர், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் கல்வி கற்கும் மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளைப் பேசுவது, உடல் உருவ அமைப்பை கேலி செய்வது,அவர்களை வீடியோ படங்கள் எடுப்பது, பேசுவதை ரெக்கார்டு செய்வது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருவதால், அக்கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியைகளும், மாணவிகளும் தினம் தினம் மன உளைச்சலைச் சந்தித்து அவதியுற்று வருகின்றனர். ஒரு துறையின் தலைவர் இவ்வாறு நடந்துகொள்வதை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டியும், பாதிக்கப்பட்ட பெண்கள் கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதமே கல்லூரி நிர்வாகத்திடம், தகாத செயல்களில் ஈடுபடும் பேராசிரியரைப் பற்றி புகார் அளித்தும், பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது செயல்களைக் கண்டிக்கவும் இல்லை.
இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட ஒரு பேராசிரியை இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. பெண்கள் பணிபுரியும் இடங்களில் `விசாகா கமிட்டி’ அமைக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல் என்ன ஆனது? மாணவிகள் புகார் கொடுத்தும் ஒருவருட காலமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு எந்த அரசியல் தலைவரின் தலையீடு, யாருடைய அழுத்தம்? போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. “வேலியே பயிரை மேய்வது போல்”” இன்று கல்வியை கற்றுக்கொடுக்கும் கல்வி வளாகங்களிலேயே பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நடைபெறுவதற்கு, எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நிர்வாகத் திறமையற்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், இனியாவது பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், தமிழ் நாட்டில் எந்த இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும், மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க அதிமுக தயங்காது என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.