தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த 2021-ம் ஆண்டு சர்வதேச அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் வியட்நாமைச் சேர்ந்த நுயென் துக் வெற்றி பெற்று அழகி பட்டத்தைத் தட்டிச் சென்றார். இதனையடுத்து முன்னணி நிறுவனங்கள் பலவும் அவரை தங்களது விளம்பர தூதராக நியமித்தது. அதன்படி வியட்நாமில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்தின் ஊட்டசத்து மருந்தை நுயென் விளம்பரப்படுத்தினார். இதனை உண்மையென நம்பி 1 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த மருந்துகளை வாங்கி பயன்படுத்தினர். முன்னதாக அந்த மருந்தில் 200 மி.கி நார்ச்சத்து இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஆய்வகத்தில் நடத்திய சோதனையில் வெறும் 16 மி.கி. நார்ச்சத்து மட்டுமே இருப்பது உறுதியானது. இது பொதுமக்களிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியது. இதனையடுத்து அந்த மருந்துகளின் விற்பனைக்கு அங்கு தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது போலி விளம்பரத்தில் நடித்ததற்காக அழகி நுயென் துக் உள்பட 3 பேரை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
