– ஐங்கரன் விக்கினேஸ்வரா
உணவு மற்றும் மனிதாபிமான பொருட்களை கொண்டு செல்லும் அனைத்து வழித்தடங்களையும் காஸாவில் அடைத்துவிட்டு 77 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காஸா மீது மூர்க்கத்தனமான தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் நடத்தி வருகிறது.
இன்னுமோர் ‘நக்பா’ ?
கையில் இருந்தவற்றை எல்லாம் இழந்துவிட்டு பாலஸ்தீனிய மக்கள், பசி கொடுமையால் இப்படி கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். காஸாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணை கைதிகள் அனைவரையும் விடுவிக்கும் வரை போர் ஓயாது என்று சூளுரைத்துள்ள இஸ்ரேல், அகதிகள் முகாம், மருத்துவமனைகள், குடியிருப்புகள் என அனைத்து பகுதிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி கொண்டு இருக்கிறது.
காஸாவில் இருக்கும் முப்பது வீதமான குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டில் இருக்கின்றன. ஐந்து வயதுக்குட்பட்ட 71,000 குழந்தைகள், பட்டினியால் நலிவடைந்து கொண்டு இருப்பதாக ஐ.நா. கூறுகிறது. கர்ப்பிணிகளும் பிறந்த சில மாதங்களே ஆன குழந்தைகளும் உணவு கிடைக்காமல் மரணத்தின் விளிம்பில் இருக்கின்றனர்.
காஸாவுக்கு உணவுப் பொருட்களை அனுப்பாவிட்டால் 48 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் உலக நாடுகளுக்கு ஐ.நா. சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்னும் ஓர் ‘நக்பா’ போன்று பட்டினியால் பாலஸ்தீன மக்களை படுகொலை செய்ய இஸ்ரேல் முயன்றுள்ளது. இதற்காகவே காஸாவில் அத்தியாவசிய, மனிதாபிமான பொருட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பசியால் இருபது இலட்சம் மக்கள் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
இஸ்ரேலுக்கு உலகளாவிய கண்டனம்:
இஸ்ரேலின் கொடூரமான நடவடிக்கைகளுக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காஸா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள புதிய நில அடிப்படையிலான போர் நடவடிக்கைகள் உலகளவில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
கடந்த சில நாட்களில் மட்டும் பல நூறு பாலஸ்தீனிகள் உயிரிழந்துள்ளனர். கனடா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளின் பிரதமர்கள் இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில், இஸ்ரேல் தனது போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், இலக்கிடப்பட்ட தடைகள் உள்ளிட்ட “திடமான நடவடிக்கைகள்” எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
இஸ்ரேல் “கிடியனின் ரதங்கள்” (Gideon’s Chariots) என்ற பெயரில் ஒரு புதிய நில போர் நடவடிக்கையை காஸாவில் துவக்கியது. வடகாசா மற்றும் தெற்குக் காஸா பகுதிகளில் இஸ்ரேலிய படைகள் நுழைந்துள்ளன என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு முன்பு, பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட கடும் விமானத் தாக்குதல்களில், பல குடும்பங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸாவுக்குள் ஒரு அடிப்படை அளவிலான உணவுப் பொருட்கள் அனுமதிக்கப்படும் என இஸ்ரேல் அறிவித்திருந்தாலும், ஐ.நா. உதவித் தலைவர் டோம் ஃப்ளெச்சர் இதனை “கடலிலொரு துளி” என விவரித்தார். மேலும் வட காஸாவின் கடைசி செயல்பாட்டிலிருந்த மருத்துவமனையும் மூடப்பட்டுள்ளது.
உள்நாட்டிலேயே போருக்கு எதிர்ப்பு:
உள்நாட்டிலேயே போருக்கு எதிராக யூத மக்கள் எழுந்துள்ளமையால், இஸ்ரேல் அரசு ஆட்டம் கண்டுள்ளது. காஸாவில் இஸ்ரேலின் போர் ஒரு புதிய, வன்முறை கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலுக்குள்ளேயே இந்தப் போருக்கு எதிராகவும், அது நடத்தப்படும் விதம் குறித்தும் உள் நாட்டிலேயே குரல்கள் வலுத்து வருகின்றன. இந்த அதிர்ச்சி தரும் விமர்சனங்கள், உள்நாட்டில் ஒரு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.
குறிப்பாக இஸ்ரேலிய முன்னாள் தளபதியின் ஆவேச உரையானது உலகின் பல நாடுகளிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இடதுசாரி அரசியல்வாதியும், இஸ்ரேல் தற்காப்புப் படையின் முன்னாள் துணைத் தளபதியுமான யாயிர் கோலன் வெளியிட்ட கருத்துகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
“நாம் ஒரு புத்திசாலித்தனமான நாடாக செயல்படத் திரும்பவில்லை என்றால், இஸ்ரேல் தென்னாப்பிரிக்கா போல ஒரு ஒதுக்கப்பட்ட நாடாக மாறிவிடும். ஒரு புத்திசாலித்தனமான நாடு பொதுமக்கள் மீது போர் தொடுக்காது, பொழுது போக்கிற்காக குழந்தைகளைக் கொல்லாது, மேலும் மக்களை இடம்பெயரச் செய்வதை தனது நோக்கமாகக் கொள்ளாது” என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
ஆயினும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கோலனின் இந்தக் கருத்துக்களை “இரத்தப் பழி” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் அதிரடி குற்றச்சாட்டு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், இன் முன்னாள் தலைமைப் பணியாளருமான மோஷே “போகி” யாலோன் மேலும் ஒரு படி சென்று தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், இது ஒரு பொழுதுபோக்கு அல்ல. இது ஒரு அரசாங்கக் கொள்கை, அதன் இறுதி நோக்கம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதே. இது நம்மை அழிவை நோக்கி இட்டுச் செல்கிறது என்று அவர் பகிரங்கமாகப் பதிவிட்டுள்ளார்.
தற்போது உள்நாட்டிலேயே போர் குறித்த விமர்சனங்களும், அதன் நடத்தப்படும் விதம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. இது, இஸ்ரேலிய சமூகத்தில் போரின் தாக்கம் மற்றும் அதன் எதிர்காலம் குறித்து ஆழமான கவலைகள் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது. இந்தப் புதிய குரல்கள், இஸ்ரேலிய அரசியல் மற்றும் சமூகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.