(ஈழத் தாய்மண்ணில் வீரச்சாவைத் தழுவிய தமிழீழ விடுதலைப் போராளர்களுக்கு)
தமிழரின் விடுதலைக்காய் எழுந்த ஒவ்வொரு உருவமும்
தமக்கென வாழவில்லை –
தமக்குள்ள கனவுகளையல்ல;
மக்களின் கனவுகளையே சுமந்தனர்.
மனம் தீண்டா வலிகளுக்குள்
மனிதமாய் மீண்ட வீரங்கள்.
நமக்காக…
அவர்கள் தமிழருக்கான சுயநிர்ணயக் கனவுக்காய்,
தம்மையே தியாகமாக மாற்றி,
அந்த மண்ணிலேதான் எமது விடுதலைக்காக
வீரவணக்கமாக மடிந்தார்கள்.
அவர்கள் எமக்காகவே வாழ்ந்தார்கள்,
எமக்காகவே போராடினார்கள் –
புயல்கெஞ்சாத அந்தக் கனலான இதயங்களாய்.
தெய்வங்கள் எங்கே என்று தேட வேண்டாம்,
மண்ணைத் தாங்கிய அந்தக் கருந்தூண்கள் தான்,
தீயில் சுடப்பட்ட நம் வீரங்கள் தான் –
தியாகத்தின் உயிர்புள்ளிகள்.
வெறுப்பும் வலியும் வாதைகளை மீறி,
விடுதலை என்ற கனவுக்காக
தொட்டு எழுந்த வெம்மையான சத்தம் –
அவர்கள் தேகம் கிடந்த இடமே
இன்று நம் நம்பிக்கையின் கோயில்.
நான் பேசும் ஒவ்வொரு சொல்லிலும்,
நீ நடக்கும் ஒவ்வொரு பாதையிலும்,
அவர்கள் ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறுகள்
அழியாத அரிச்சுவடி.
நம் கண்ணீர் அவர்களின் பூஜை,
நம் போராட்டம் அவர்களின் தொடர்ச்சி.
தமிழரின் விடுதலைக்காய் வாழ்ந்தார்கள்,
வீரச்சுடராக எமக்குள் நிலைத்திருக்கின்றார்கள் –
அவர்கள் நமக்காக மட்டுமே மடிந்தார்கள்!
□ ஈழத்து நிலவன் □
23/05/2025