தென் ஆப்பிரிக்காவின் சுரங்கத்துறையில் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இதற்காக அங்கு ஏராளமான நிலக்கரி, தங்கச்சுரங்கங்கள் செயல்படுகின்றன. அவற்றில் பல சுரங்கங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்துவது அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. அதன்படி தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் தங்கச்சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் தங்கத்தைத் தோண்டும் பணியில் சுமார் 260 பேர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் லிப்ட் திடீரென செயலிழந்தது. இதனால் சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். தகவலின்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் பல மணி நேரம் போராடி தொழிலாளர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். இதற்கிடையே சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களின் உறவினர்கள் பலரும் அங்கு குவிந்தனர். அவர்கள் மீட்கப்பட்ட பிறகே அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பல மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
