கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,” 3 ஆண்டுகள் தொடர்ந்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தவர் முதலமைச்சர். 3 ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால் நிதியை பெற்றிருக்கலாம். அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றுள்ளார்” என்றார். இந்நிலையில், டில்லி பயணம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”எனது டில்லி பயணம் குறித்து ஏதேதோ அளந்து விட்டதை ரசித்தபடியே டில்லிக்கு புறப்பட்டேன். பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களையும் வரவேற்றிட, முதல்வர்களும் பிரதமருடன் இயல்பாக அளவளாவினார். ஆதரவு, எதிர்ப்பு என எதுவாயினும் தன் நிலையில் உறுதியாக இருக்கும் இயக்கம் திமுக என இந்திரா காந்தியே சொல்லியுள்ளார்.
டில்லி பயணம் பற்றி கற்பனைச் சிறகுகளைப் பறக்கவிட்டு அரசியல் எதிரிகள் அலாதி இன்பம் கண்டனர். யாருக்கும் தெரியாமல் அவசரமாக டில்லிக்குப் பறந்து சென்றவர் இபிஎஸ். டில்லியில் மீடியாக்கள் சூழ்ந்ததும் கட்சி அலுவலகம் வந்ததாக கூறியவர் இபிஎஸ். கட்சியை அடமானம் வைத்து கூட்டணி வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. அரசியல் நிலைப்பாடு என்பது வேறு, அரசுடன் நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பது என்பது வேறு. மாநில உரிமைகளை திமுக ஒரு போதும் விட்டுக்கொடுக்காது. இவ்வாறு அவர் கூறினார்.