மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு விமானம் வந்தது. அந்த விமானத்தில் மலேசியாவை சேர்ந்த பெண் பயணித்தார். அவர் இந்தியாவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்துள்ளார். இந்நிலையில், விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பெண் பயணி சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் செயல்பட்டதால் அவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவர் கொண்டு வந்த பையில் இ-சிகரெட்டுகள், அமெரிக்க டாலர்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பெண் பயணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தான் இடைத்தரகர் என்றும் இந்த பொருட்களை வாங்க விமான நிலையத்திற்கு வெளியே ஒரு நபர் நிற்பதாகவும் கூறினார். இதையடுத்து விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் விமான நிலையத்திற்கு அருகே நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், மலேசியாவில் இருந்து இ-சிகரெட், அமெரிக்க டாலர்களை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட இ-சிகரெட், அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ரூ. 70 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
