அ.தி.மு.க.வில் உள்ள 2 இடங்களுக்கு அக்கட்சியின் உள்ளேயே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த ஆண்டு (2024) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.வுடன் கைகோர்த்த தே.மு.தி.க. 5 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெற முடியவில்லை. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் குறைந்த வாக்கு வித்தியாசத்தில், அதாவது 4,500 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார். அந்த தேர்தலில் தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் 2.58 ஆக இருந்தது. தொடர்ந்து, அ.தி.மு.க. கூட்டணியிலேயே தே.மு.தி.க. நீடித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி தே.மு.தி.க. கொடிநாள் விழாவின்போது பேட்டியளித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “அ.தி.மு.க. கூட்டணியில் ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டது. யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும்” என்று அறிவித்தார். இதுகுறித்து, சேலம் மாவட்டம் ஆத்தூரில் பேட்டியளித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியபோது, “அப்படி எதுவும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை” என்று கூறினார்.
இதனால், தே.மு.தி.க.வினர் அதிர்ச்சி அடைந்த நிலையில், மறைந்த விஜயகாந்தின் ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில், “சத்தியம் வெல்லும்; நாளை நமதே” என்று பதிவிடப்பட்டது. பின்னர், சற்று நேரத்தில் அந்த பதிவும் நீக்கப்பட்டது. இந்த பரபரப்புக்கு இடையே தமிழகத்தில் உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இந்த காலியிடத்திற்கு தி.மு.க. சார்பில் 4 உறுப்பினர்களும், அ.தி.மு.க. சார்பில் 2 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க.வில் உள்ள 2 இடங்களுக்கு அக்கட்சியின் உள்ளேயே கடும் போட்டி நிலவுகிறது. இந்த நேரத்தில், தே.மு.தி.க.வும் தங்களுக்கான ஒரு இடம் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் பதிலும் அமைந்திருந்தது. அவர் அளித்த பேட்டியில், “தற்போதுதான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். பொறுமை கடலினும் பெரிது” என்று கருத்து தெரிவித்தார். இனி அ.தி.மு.க. தலைமை என்ன முடிவெடுக்கப்போகிறது? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.