தி.மு.க. பொதுக்குழுவுக்கு பங்கேற்க வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரோடு ஷோ நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. அந்த வகையில், ஆளுங்கட்சியான தி.மு.க., மீண்டும் வெற்றிக்கனியை பறித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் காய்களை நகர்த்தி வருகிறது. பொதுமக்களிடம் நன்மதிப்பை பெறுவதுடன், கட்சியினரையும் உற்சாகப்படுத்த தி.மு.க. தலைமை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மதுரை உத்தங்குடியில் வருகின்ற ஜூன் 1-ந்தேதி தி.மு.க. பொதுக்குழு நடைபெற இருக்கிறது. தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 3 ஆயிரம் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
மேலும், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், முக்கிய பிரமுகர்கள் என 10 ஆயிரம் பேர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்ற வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மேடை மட்டும் சுமார் 100 பேர் அமரும் வகையில் தயாராகி வருகிறது. பொதுக்குழு நிகழ்வு நடைபெறும் இடத்தின் நுழைவு வாயிலில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் போல் அமைக்கப்பட்டு வருகிறது. கூட்டம் தொடங்குவதற்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. ஏனைய பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மேலும், தேர்தல் நெருங்கும் சமயத்தில் தி.மு.க. பொதுக்குழு கூடுவதால், அதில் பங்கேற்க வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரோடு ஷோ நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 31-ந்தேதி சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, விமான நிலையத்தில் இருந்து நகரத்தின் முக்கிய பகுதிக்கு அதாவது 20 கி.மீ. தூரத்துக்கு ரோடு ஷோவாக அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.