இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனிடையே, இஸ்ரேலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று 7 ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திணா. இந்த ஏவுகணை, டிரோன்கள் இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பால் நடு வானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள சனா விமான நிலையம் மீது இஸ்ரேல் இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள சனா விமான நிலையத்தில் மொத்தம் 4 உள்நாட்டு விமானங்கள் இருந்தன. இதில் 3 விமானங்கள் கடந்த 7ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முற்றிலும் அழிக்கப்பட்டன. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எஞ்சிய ஒரு விமானமும் முற்றிலும் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
