உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், செவ்வாய் கோளில் மனிதர்களை குடியமர்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அவருடைய ஸ்பேஸ்எக்ஸ் என்ற பெயரிலான வர்த்தக விண்கல நிறுவனத்தின் உதவியுடன் ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு ஏவி சோதனை செய்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் விண்கலம் காலை ஏவுவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், விண்ணில் ஏவப்பட்டு 30 நிமிடங்களில் அந்த விண்கலம் இலக்கை எட்டுவதற்கு பதிலாக வெடித்து சிதறியது. இதுபற்றி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், 403 அடி (123 மீட்டர்) உயரம் கொண்ட அந்த விண்கலம், கட்டுப்பாட்டை இழப்பதற்கு முன்பு, கடந்த 2 முறை தோல்வியடைந்த புள்ளியை கடந்து சென்றது. எனினும், அது வெடித்து சிதறியுள்ளது. இதுபோன்ற பரிசோதனையில், நாம் என்ன கற்று கொள்கிறோம் என்பதிலேயே வெற்றி வருகிறது. இன்றைய பரிசோதனையானது, ஸ்டார்ஷிப்பின் நம்பக தன்மையை மேம்படுத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில், பல்வேறு கோள்களிலும் மனிதர்களின் வாழ்க்கையை உருவாக்கும் நோக்கில் ஸ்பேஸ்எக்ஸ் செயல்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சமீபத்திய விண்கல ஏவுதலுக்கு முன்பு, எட்டு முறை விண்கல ஏவுதல் முயற்சி நடந்துள்ளது. இதில் 4 வெற்றிகள் கிடைத்துள்ளன. 4 முறை தோல்வி கண்டு அவை வெடித்து சிதறியுள்ளன. இந்நிலையில், இன்றைய முயற்சியில் புறப்பட்ட 30-வது நிமிடத்தில், நடுவானில் பறந்து செல்லும்போது, கதவுகள் திறப்பதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டை இழந்த விண்கலம் மீண்டும் வளிமண்டலத்திற்குள் திரும்பி வந்துள்ளது. எனினும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த விண்கலம் இந்திய பெருங்கடலில் விழுந்தது.
