பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ராஜேஷ். அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். மேலும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியுள்ளார்.வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்துள்ளார் நடிகர் ராஜேஷ். நடிகர், பின்னணி குரல் கலைஞர், எழுத்தாளர், சின்னத்திரை நடிகர் என அனைத்திலுமே தனது முத்திரையைப் பதித்த ராஜேஷ் இதுவரை ஒன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். இவர் கடைசியாக ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், 47 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வந்த நடிகர் ராஜேஷுக்கு காலை தீடிரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். நடிகர் ராஜேஷின் உடல் சென்னை, ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ராமாபுரத்திலுள்ள இல்லத்தில் நடிகர் ராஜேஷ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு உள்ளிட்டோரும் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.