அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பாலியல் கொடுமை செய்தார். இதுகுறித்து மறுநாள் கோட்டூர்புரம் போலீசில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். ஞானசேகரன் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் வரலட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஐ.பி.எஸ். அதிகாரிகள் சினேகபிரியா, பிருந்தா, ஐமான் ஜமால் ஆகியோர் கொண்ட சிறப்பு புலன் விசாரணைக்குழுவை அமைத்து உயர்நிதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில் ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடந்த 28-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, ஞானசேகரன் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார். மேலும் ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தும், 30 ஆண்டுகள் எந்த தண்டனையும் குறைப்பும் இன்றி ஆயுள் தண்டனையை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.