மல்லிபட்டினத்தில் ஆறு மாவட்ட மீனவர்கள் இணைந்து ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.
(13-06-2025)
தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் வரும் திங்கட்கிழமை (16) அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல போவதாக முடிவு செய்துள்ளனர்.
மேலும் கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீனவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன் பிடிக்க செல்ல வேண்டும் எனவும், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் சென்று இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் படி மீன் பிடிக்க வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட 61 நாள் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி தொடங்கி ஜூன் 14ஆம் தேதி வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேஸ்வரம், சோளியாக்குடி, புதுக்கோட்டை மாவட்டம் மல்லிபட்டிணம், ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்து விட்டு கரை திரும்பும் நாள் என்பதால் தடை காலம் முடிந்து எப்போது கடலுக்கு மீன் பிடிக்க செல்வது என்பது குறித்து நேற்று (12) வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் மல்லிபட்டினத்தில் ஆறு மாவட்ட மீனவர்கள் இணைந்து ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தி திங்கட்கிழமை அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்க செல்வது என முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மல்லிப்பட்டினத்தில் நடந்த ஆறு மாவட்ட மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து இன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் என்று நடத்தினர்.
அந்த கூட்டத்தில் வரும் 16 ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை மீன்பிடி மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டும், தடையை மீறி மீன்பிடி அனுமதி சீட்டு பெறாமல் மீன்பிடிக்க சொல்லும் மீன்பிடி படகுகள் மீது மீன்வளத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும், எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் படி மீன் பிடிக்க வேண்டாம், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் இருப்பதால் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.