சசிகுமார், சிம்ரன் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் படக்குழுவை பாராட்டி பதிவிட்டனர். இந்நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை நேரில் அழைத்து பாராட்டினார். இதுகுறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் அபிஷன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “நான் சினிமாவில் காலடி எடுத்து வைத்தற்கான காரணம் இன்று நிறைவடைந்தது. அவர் என் பெயரை கூறி என்னை கட்டிபிடித்தது எனக்குள் கூஸ்பம்ஸ் ஆனது. மிக அருமையான மனிதர்” என பதிவிட்டுள்ளார்.
