– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பு நீண்ட வரிசைகள். ஒருவரிசையில் மோட்டார் சைக்கிள்கள். இன்னொரு வரிசையில் நான்கு சில்லு வாகனங்கள். சில இடங்களில் கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டருக்கும் அதிகமான வரிசைகள். ஏனென்று கேட்டால், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு வரலாம் என்ற பயம்; ஊகம்.
அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள மிகப்பெரிய மரக்கறிச் சந்தையாகிய திருநெல்வேலி சந்தையில் இஞ்சி வாங்கினேன். 100 கிராம் 300 ரூபாய் என்று சொன்னார் வியாபாரி. ஏன் அவ்வளவு விலை? என்று கேட்டேன். சண்டை தொடங்கிவிட்டதாம் அதனால் இஞ்சி விலை ஏறிவிட்டது என்றார். இஞ்சிக்கும் மேற்கு ஆசியாவில் நடக்கும் சண்டைக்கு என்ன உறவு? என்று கேட்டேன். இஞ்சி தமக்கு ஈரானில் இருந்து வருகிறதா? அல்லது மேற்காசியாவில் இருந்து வருகிறதா? என்று கேட்டேன். “தெரியாது. ஆனால் சண்டை தொடங்கி விட்டதால் விலை ஏறிவிட்டது என்று மொத்த வியாபாரிகள் கூறுகிறார்கள்” என்று சொன்னார்.
இலங்கைக்கு எரிபொருள் தரும் நாடுகளில் ஈரான் உண்டா என்று கேட்டால்,எரிபொருள் விற்பனை நிலையத்தின் முதலாளிகளிடம் பதில் இருக்கவில்லை. வரிசையில் நிற்கும் படித்தவர்களிடம் கேட்டால் அவர்களிடமும் பதில் இல்லை. இஞ்சி மேற்காசியாவில் இருந்து வருகிறதா என்று கேட்டால் வியாபாரிகளிடம் பதில் இல்லை. அப்படி என்றால் எதற்காக விலை ஏற்றங்கள்? எதற்காக நீண்ட வரிசைகள்?
கடந்த திங்கட்கிழமை மட்டுமல்ல இதற்கு முன்னரும் மேற்கு ஆசியாவில் போர்ப் பதற்றம் ஏற்படும் போது இவ்வாறு நீண்ட வரிசைகளை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னர் காணக்கூடியதாக இருந்தது. யாழ்ப்பாணத்தவரின் முன்னெச்சரிக்கை உணர்வும் அவர்களுடைய ரத்தத்தில் ஊறிய சேமிப்பு கலாச்சாரமும்தான் அதற்குக் காரணமா? முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஒரு சமூகம் அவ்வாறு முன்னெச்சரிக்கையோடு சில விடயங்களை ஊகித்து, அந்த ஊகங்கள் பிழையாக இருந்தாலும் பரவாயில்லை, தற்காப்பு உணர்வோடு சிந்திப்பது நல்லது. ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால், இவ்வளவு முன்னெச்சரிக்கை உணர்வுடைய ஒரு மக்கள் ஏன் அரசியலில் மட்டும் முன்னெச்சரிக்கை உணர்வின்றி ஏனோ தானோ என்று வாக்களிக்கிறார்கள்?
அல்லது இது வெறுமனே சேமிப்பு கலாச்சாரத்தின் ஒரு பகுதி தானா? அப்படியென்றாலும் கூட திரும்பக் கேள்வி கேட்கலாம். சேமிப்புக் கலாச்சாரம் என்பதே தற்காப்பு உணர்வின் விளைவுதான். எதிர்காலத்தில் வரக்கூடிய தட்டுப்பாடுகளை முன் ஊகித்து பொருட்களை வாங்கி சேமிக்கும் பண்புடைய ஒரு மக்கள் கூட்டம் தனது எதிர்கால அரசியலை குறித்து எவ்வளவு தற்காப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்? தமது அடுத்த சந்ததிக்காக தமிழ் தேசிய அரசியலில் தமிழ் மக்கள் சேமித்து வைத்திருப்பவை எவை ? இந்த கேள்விகளுக்கு விடை வேண்டும்.
அனைத்துலக அளவில் நிகழும் ஒரு மோதலை வைத்து முன்னெச்சரிக்கை உணர்வோடு அல்லது ஊகத்தின் அடிப்படையில் பொருட்களைச் சேமிக்க முற்படும் ஒரு சமூகம், தன் உள்நாட்டு அரசியலைப் பொறுத்து அவ்வாறு முன் யோசனை இன்றியும் மந்தத்தனமாகவும் இருப்பதற்கு காரணம் என்ன? எது அவர்களுடைய எதிர்கால சந்ததியினரின் வாழ்வை தீர்மானிக்க கூடியதோ, அந்த விடயத்தில் மட்டும் ஏன் விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் ?
விழிப்புணர்வு கொண்ட மக்களாக இருந்திருந்தால் அரசியலில் வரக்கூடியவற்றை முன்னுணர்ந்து முன்யோசனையோடு தலைவர்களை தெரிவு செய்யும் ஒரு கலாச்சாரத்தை கொண்ட மக்களாக இருந்திருந்தால், உள்ளூராட்சி மன்றங்களில் தமிழ் மக்கள் யார் யாரைத் தெரிவு செய்திருக்கிறார்கள் என்பதைத் தொகுத்துப் பார்த்தால் தெரியவரும் தானே?
அண்மையில் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடந்த மக்கள் சந்திப்பின்போது உள்ளூராட்சி சபைகளில் நீங்கள் யார் யாருக்கு வாக்களித்தீர்கள்? உள்ளூர் உணர்வுகளை மதித்து வாக்களித்தீர்களா? அல்லது தமிழ்த் தேசிய பண்புடைய ஒரு உள்ளூர் தலைவரை கட்டியெழுப்ப போகிறோம் என்று கருதி வாக்களித்தீர்களா? உங்களுடைய ஊரவர்; உங்களுடைய சமயத்தவர்; உங்களுடைய சாதி ஆள்; உங்களுடைய குறிச்சியைச் சேர்ந்தவர்; உங்கள் கண்ணுக்கு முன் தினமும் நடமாடுகின்றவர்; உங்களுக்கு தொண்டு செய்பவர்; உங்களுக்கு ஏதும் தேவையென்றால் ஆபத்தில் உதவுகிறவர்; என்று பார்த்து வாக்களித்தீர்களா? என்று கேட்டபோது, அங்கிருந்த பெரும்பாலானவர்கள் சொன்னார்கள்.” உள்ளூர் உணர்வுகளின் அடிப்படையில் தான் வாக்களித்தோம்” என்று.
அதேசமயம் கட்சிகள் வாக்காளர்களை எவ்வாறு தெரிவு செய்கின்றன? கட்சித் தலைமைக்கு யார் விசுவாசமோ, கட்சித் தலைமைக்கு யார் வேண்டியவரோ, அவரைத்தான் பெரும்பாலான கட்சிகள் வேட்பாளராக நிறுத்தின. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்பாளர்களைத் தெரியும் பொழுது கட்சிகளிடம் பெரும்பாலும் பின்வரும் மூன்று அளவுகோல்கள் இருந்தன.
முதலாவது அளவுகோல்,அவர் உள்ளூரில் வெல்லக்கூடியவராக இருக்க வேண்டும்.இரண்டாவது அளவுகோல், அவர் கட்சித் தலைமைக்கு விசுவாசமானவராக, கீழ்ப்படிவு உள்ளவராக இருக்கவேண்டும். மூன்றாவது அளவுகோல்– அது சட்டத்தின் அடிப்படையிலானது – குறிப்பிட்டளவு விகிதம் பெண் வேட்பாளராக இருக்கவேண்டும். இந்த மூன்று அளவுகோல்களின் அடிப்படையில்தான் கட்சிகள் பெரும்பாலும் தமது வேட்பாளர்களைத் தேர்வு செய்கின்றன. அந்த வேட்பாளர்களுக்குத் தமிழ் மக்கள் இக் கட்டுரையில் முன்பு சொன்னபடி உள்ளூர் உணர்வுகளின் அடிப்படையில் வாக்களிக்கின்றார்கள்.
இப்பொழுது தெளிவான ஒரு சித்திரம் கிடைக்கிறது.வாக்களிப்பவர்களும் பெரிய அளவில் தமிழ் தேசிய நோக்கு நிலையை கொண்டவர்கள் அல்ல. வாக்களிக்கப்பட்டவர்களும் பெருமளவுக்கு உள்ளூர்ப் பண்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்தான்.இப்படிப்பட்ட தகுதிகளை கொண்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எவ்வாறு உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிக்க போகின்றார்கள்? இந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை கீழிருந்து மேல் நோக்கிய தேசியப் பண்புமிக்க உள்ளூர்த் தலைவர்களாகக் கட்டியெழுப்புவதற்கு அவர்களுடைய கட்சிகளிடம் எப்படிப்பட்ட தூர நோக்குடைய திட்டங்கள் உண்டு ?
இல்லை.அப்படிப்பட்ட நீண்டகால நோக்கிலான திட்டங்கள் எதுவும் கட்சிகளிடம் இருப்பதாக தெரியவில்லை. நான் பார்த்த சில எரிபொருள் வரிசைகளில் கட்சி ஆட்களே நின்றார்கள். அவர்கள் நிற்பதில் தவறில்லை. அவர்கள் எரிபொருளை சேமிக்கட்டும். ஆனால் பிரச்சனை என்னவென்றால், எரிபொருளை சேமிப்பது போல தமது அரசியல் வாழ்வுக்கு அடிப்படையான அறிவுபூர்வமான விடயங்களை மூளைக்குள் சேமித்து வைத்திருக்கிறார்களா? அல்லது கட்சித் தலைமைகள் அதற்கு வேண்டிய அறிவூட்டல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனவா?
கனடாவில் இனஅழிப்பு அறிவூட்டல் வாரம் ஒரு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதை தாயகத்தில் உள்ள தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் பெரிய வெற்றியாக,அடைவாகக் கொண்டாடினார்கள். அது வெற்றிதான். சந்தேகம் இல்லை. ஆனால் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஒன்று அடுத்த தலைமுறைக்கு வரலாறு கடத்தப்பட வேண்டும் என்று சிந்திப்பதைப் போல தாயகத்திலும் குறிப்பாக வாக்காளர்கள் மத்தியிலும் வேட்பாளர்கள் மத்தியிலும் அவ்வாறான அறிவூட்டல் செய்முறைகள் தேவையா? இல்லையா ?
ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் எல்லா இயக்கங்களிலும் அரசியல் பாசறைகளும் இருந்தன; ஆயுதப் பயிற்சி பாசறைகளும் இருந்தன. புதிய போராளிகளுக்கு அரசியல் பயிற்சிகளை வழங்கவென்று இயக்கங்களுக்கு வெளியில் இருந்து வளவாளர்கள் அழைத்துக் கொண்டு வரப்பட்டார்கள். எல்லாத் துறைகளிலும் போராளிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.ஏன் அதிகம் போவான்? அண்மையில் உள்ளூராட்சி சபைகளில் தெரிவு செய்யப்பட்ட சிலரோடு உரையாடியபொழுது அவர்கள் சொன்னார்கள், தேசிய மக்கள் சக்தியானது தனது உறுப்பினர்களுக்கு குறிப்பிட்ட கால ஒழுங்கில் கிரமமாக கூட்டங்களை ஒழுங்குபடுத்துகிறது. அந்தக் கட்சியின் பிரதான உழைப்பாளிகள் கிரமமாக சந்தித்துக் கொள்கிறார்கள்.மக்கள் மத்தியில் தாங்கள் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட ஏற்பாடுகள் எத்தனை தமிழ்க் கட்சிகளிடம் உண்டு? தமது கட்சிப் பிரதானிகளுக்கும் தமது கட்சித் தொண்டர்களுக்கும் குறிப்பாக தமது விசுவாசப் பக்த கோடிகளுக்கும் அறிவூட்டுவதற்கும் தெளிவூட்டுவதற்கும் உரிய கட்டமைப்புகளை எத்தனை கட்சிகள் வைத்திருக்கின்றன?
முகநூலைப் பார்த்தால்,குறிப்பாக முகநூலில் கட்சித் தலைவர்களின் விசுவாசிகள் மோதிக் கொள்ளும் விதத்தையும் அதில் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளையும் நக்கல் நையாண்டிகளையும் தொகுத்துப் பார்த்தால், யாரிடமும் எந்த அறிவும் தூரநோக்கும் தெளிவும் முதிர்ச்சியும் மாண்பும் இருப்பதாகத் தெரியவில்லை. பொதுவெளியில் எப்படிப் பேச வேண்டும்? அரசியல் எதிரியை எப்படி மதிக்க வேண்டும்? அரசியல் எதிரியை எப்படி விமர்சிக்க வேண்டும்? விமர்சிப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட விடயத்தில் எந்தெந்த துறைகளில் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்? என்ற விழிப்பு இல்லாத குருட்டு விசுவாசிகளின் கூட்டம் முகநூலிலும் சமூகவலைத்தளங்களிலும் படுகேவலமாக மோதிக் கொண்டிருக்கிறது. அவர்கள் எல்லாரும் குறிப்பிட்ட கட்சித் தலைமைக்கு விசுவாசிகள்தான். அல்லது குறிப்பிட்ட ஓர் அரசியல்வாதிக்கு விசுவாசிகள்தான். அங்கே கொள்கையெல்லாம் கிடையாது. ஏனென்றால் எல்லாருக்கும் பொதுவான ஒரு கொள்கை தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டி வைத்திருப்பதுதான். ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாகத் திரட்ட வேண்டும் என்ற தரிசனத்தைக் கொண்ட எந்த ஒரு அரசியல்வாதியும் அல்லது கட்சித் தொண்டரும் அதற்குரிய பக்குவத்தோடுதான் விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்.
இப்பொழுது உள்ளதில் பெரிய கூட்டாக எழுச்சி பெற்றிருக்கும் தமிழ்த் தேசியப் பேரவைக்குள் காணப்படும் கட்சிகள் முன்பு ஒருவர் மற்றவருக்கு எதிராகத் தெரிவித்த கருத்துக்களை சுமந்திரன் அணி தேடியெடுத்துப் பிரசுரித்து வருகிறது, தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கிய காலத்தில் இருந்து இந்த எதிர்ப் பிரச்சாரம் நடந்துவருகிறது. இங்கே ஒன்றைக் காணக்கூடியதாக உள்ளது.தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்கள் கடந்த 15 ஆண்டுகளிலும் உதிர்த்த வார்த்தைகளில் பல அவர்களுக்கு எதிராகவே திரும்பி வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளாக அவர்கள் ஏனைய தமிழ்க் கட்சிகளை நோக்கி வீசியவை “பூமராங்குகள்”தான். இப்பொழுது தாங்கள் திட்டித் தீர்த்த வார்த்தைகளுக்கு, தாங்கள் கொட்டித் தீர்த்த வசைகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய ஒரு நிலை. ஏன் இந்த நிலை ஏற்படுகிறது? அரசியல் நாகரிகத்தோடு எதிர்த் தரப்பை அணுகியிருந்திருந்தால், அல்லது விமர்சித்து இருந்திருந்தால், இன்றைக்கு அந்த விமர்சனங்கள் பூமராங்குகளாக திரும்பி வராது அல்லவா ?
எனவே தொகுத்துப் பார்த்தால் தெளிவாகத் தெரியும் சித்திரம் என்னவென்றால், தமிழ்த் தேசியக் கட்சிகள் தலைமைக்கு விசுவாசமான குருட்டு விசுவாசிகளை உற்பத்தி செய்த அளவுக்கு அரசியல் விழிப்புடைய, அரசியல் தெளிவுடைய கட்சித் தொண்டர்களை பெரிய அளவில் உருவாக்கத் தவறியிருக்கின்றன. அதன் விளைவுகளைத்தான் இப்பொழுது ஒட்டுமொத்தமாக க அறுவடை செய்ய வேண்டியிருக்கிறது. எனவே இனிமேலாவது தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுடைய கட்சி முக்கியஸ்தர்களுக்கும் தொண்டர்களுக்கும் விசுவாசிகளுக்கும் அரசியல் விழிப்பூட்ட வேண்டும். அரசியல் தெளிவூட்ட வேண்டும்.ஒரு சிறிய அரசற்ற தேசத்தை வார்த்தைகளால் குலைக்கக் கூடாது; முகநூலில் சிதறடிக்கக்கூடாது என்று கற்பிக்க வேண்டும்.அடுத்த தலைமுறைக்கு,அதிலும் குறிப்பாக “ரிக் ரொக்” தலைமுறைக்கு வழிகாட்டும் தகுதிமிக்க தலைமைகளை, உள்ளூர்த் தலைமைகளைக் கட்டியெழுப்ப வேண்டும். எல்லாவற்றையும் நீண்ட கால நோக்கில் சிந்தித்துத் திட்டமிட வேண்டும். தேவையான வளங்களை, தேவையான உறவுகளை உள்ளூரிலும் அனைத்துலக அளவிலும் சேமிக்க வேண்டும்.எரிபொருள் வரிசையில் மணித்தியாலக் கணக்காக நின்று எரிபொருளை சேமிப்பது போல.
























