ஏழு சாதனையாளர்களுக்கு. அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் மேடையில் சூழ்ந்து நிற்க அளிக்கப்பெற்ற உயர் கௌரவம்
கனடா உதயன் பத்திரிகை ஆரம்பிக்கப்பெற்று 10வது வெற்றிகரமான ஆண்டில் ( 1996 ) ஆரம்பிக்கப்பெற்ற நடைபெற்ற உதயன் சர்வதேச விருது விழாவின் 19வது ஆண்டாக இவ்வாண்டின் விழா கடந்த 14ம் திகதி சனிக்கிழமையன்று ஸ்காபுறோ நகரில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் சிறப்பாக நடைபெற்றது..
கனடாவில் பல வர்த்தக முயற்சிகளில் ஈடுபாடு கொண்டு வெற்றிகரமாக இயங்கிவரும் வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் நிறுவனங்களின் ஆதரவிலும் அரசியல் மற்றும் சமூகத்தலைவர்களின் ஆசிகளோடும் மேற்படி விழா சிறப்பாக அரங்கேறியது.

இவ்வருடம் ஏழு சாதனையாளர்களுக்கு. அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள் மேடையில் சூழ்ந்து நிற்க அளிக்கப்பெற்ற உயர் கௌரவத்தை கண்டு களித்த பார்வையாளர்கள் கரகோசம் செய்து தங்கள் பாராட்டுக்களையும் ஒப்புதல்களையும் அங்கீகாரத்தையும் வழங்கினார்.
இவ்வருடத்தின் விழாவில் உதயன் கலை இலக்கிய மேன்மை விருது திருமதி வசந்தா டேனியல் அவர்களுக்கும்-உதயன் வர்த்தக வெற்றியாளர் விருது -ஒன்றாரியோ- திரு தாமோதரம்பிள்ளை யோகநாதன் அவர்களுக்கும்-உதயன் தலைமைத்துவ விருது திருமதி இந்திராணி நாகேந்திரம் அவர்களுக்கும்-உதயன் வாழ்நாள் சாதனையாளர் விருது-இலங்கை – பத்திரிகையாளர் ‘வீரகேசரி- சந்திரலிங்கம் ஶ்ரீகஜன் அவர்களுக்கும்-உதயன் வர்த்தக வெற்றியாளர் விருது கியுபெக்- திரு தங்கா இளையதம்பிஅவர்களுக்கும்-உதயன் இனங்களுக்கிடையிலான சமூக நல்லுறவு விருது மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் அரிஸ் பாபிகியன் ( MPP ARIS BABIKIAN ) அவர்களுக்கும் உதயன் இளையோர் அடையாள விருது திருமதி தசா குகன் அவர்களுக்கும் பெற்றன.
விழாவின் ஆரம்பத்திலிருந்து திருமதி ஜனனி ஜெயரட்ணராஜா மற்றும் பிரான்ஸ் தேசத்திலிருந்து வருகை தந்திருந்த திரு நாகேஸ்வரன் குருபரன் ஆகியோர் முறையே ஆங்கிலத்திலும் தமிழிலும் தொகுத்து வழங்கினார்கள்.
வரவேற்புரையை உதயன் விருது விழாக் குழு உறுப்பினர் மரியாம்பிள்ளை மரியராசா வழங்கினார்.
சிறப்புரைகளை சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள்- பாஸ்டர் ஜெயானந்தசோதி- கலாநிதி பகாத் ஏ. மஜீத் ஆகியோர் நிகழ்த்தினர்.

அழைக்கப்பெற்றிருந்த மத்திய மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் என பத்துக்கும் மேற்படி அரசியல் தலைவர்களும் வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகளாகவும் விழாவிற்கு அணுசரனை வழங்கியவர்களாகவும் அழைக்கப்பட்டவர்கள் மற்றும் கவிஞர்கள் எழுத்தாளர்கள் என அனைத்து தரப்பினரும் விழாவில் கலந்து கொண்டும் விருதாளர்களைப் பாராட்டியும் விருந்துண்டு மகிழ்ந்து இறுதியில் மகிழ்ச்சியோடு விடைபெற்றுச் சென்றனர்.
அத்துடன் சபையோரை மகிழ்விக்க நடனங்கள்- பாடல் நிகழ்ச்சி- கர்நாடக இசைக் கச்சேரி- மற்றும் உடல் நலம் குன்றிய இளைய தலைமுறையினரின் பாடல் நிகழ்ச்சிகள் என பலவும் சபையோரை மகிழ்வித்தன.
உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் உதயன் சர்வதேச விருது விழாவின் ஸ்தாபகருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்கள் தனது உரையில் தமது உதயன் பத்திரிகையை வாராவாரம் அச்சில் கொண்டு வரும் பணி என்பது சவால்கள் நிறைந்ததாக உள்ளதாகவும் அதை தொடர்ச்சியாக மேற்கொள்ள மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்கள் தரும் ஆதரவிற்கு நன்றி தெவித்தார். அத்துடன் உதயன் பத்திரிகை நிறுத்தப்பட்டால் சாதனையாளர்களை கௌரவிக்கும் விருது விழாவையும் தொடர்ந்து நடத்த இயலாமல் போய்விடும் என்ற தனது ஆதங்கத்தையும் வெளியிட்டார்.
மேற்படி உதயன் சர்வதேச விருது விழா மேடையில் உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களின் சேவைகளைப் பாராட்டும் வகையிலும் கௌரவிக்கும் வகையிலும் பிரிட்டிஸ் மன்னரின் முடிசூட்டு விழாப் பதக்கமும் சான்றிதழும் கெளரவ ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சர் றேமண்ட் சோ அவர்களால் வழங்கப்பெற்றது.
அத்துடன், கனடாவில் அமையவிருக்கும் தமிழர் சமூக மையத்தின் கட்டட நிதிக்காக பலரும் வழங்கியது போன்று லோகேந்திரலிங்கத்தின் குடும்பம் மற்றும் அவரது பிள்ளைகள் மருமக்கள் ஆகியோர் சார்பில் பத்தாயிரம் டாலர்களுக்குரிய காசோலையும் தமிழர் சமூக மையத்தின் நிதிக்குழுத் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பெற்றது.
செய்தி:- சத்தியன்- படங்கள் ரகு மற்றும் ஜரிஏ கெங்கா- சைலோன் பாலன் மற்றும் BEHIND ME MEDIA GROUP INC ஆகியோர்











































