அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி, சீனாவின் ‘பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ‘டிக்டாக்’ செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை இயற்றினார். அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால், ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ‘டிக்டாக்’ செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. இந்த சட்டத்திற்கு தடை கோரி ‘பைட் டான்ஸ்’ நிறுவனம் வாஷிங்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ‘பைட் டான்ஸ்’ நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ‘டிக்டாக்’ செயலி மீதான தடை சட்டத்தால் அமெரிக்க மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ‘டிக்டாக்’ செயலி அமெரிக்காவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்று கடந்த ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் ‘டிக்டாக்’ செயலி தொடர்ந்து இயங்குவதற்கான அவகாசத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். ‘டிக்டாக்’ செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் வெள்ளை மாளிகை தெரிவித்தது. தொடர்ந்து ஏப்ரல் மாதம் ‘டிக்டாக்’ செயலிக்கான அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க மக்கள் அந்த செயலியை தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது 3-வது முறையாக ‘டிக் டாக்’ செயலி தொடர்ந்து இயங்குவதற்கான அவகாசத்தை நீட்டித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
























