கதிரோட்டம்- 20-06-2025

உலகில் இலத்திரனியல் ஊடகங்களுக்கு முன்னரேயே தோன்றியவை பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளான அச்ச ஊடகங்கள் என்பதை அறியாதவர்கள் சிலரே. அதுவும் வாசிப்பு பழக்கம் மற்றும் உலக அரசியல் செய்திகளில் நாட்டம் கொண்டவர்களுக்கு அச்சு ஊடகங்கள் மீது உள்ள நேசம் சொல்லில் அடங்காதவை.
தமிழ்ப் பத்திரிகைகள எடுத்துக் கொண்டால் இலங்கை, இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பத்திரிகை வாசிப்பதில் உயர் கல்வி கற்றவர்களை விட தொழிலாளர்களும் விவசாயிகளும், மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் உள்ளார்கள் என்பதை தரவுகளிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். எனினும் கல்வியறிவில் உயர்ந்தவர்களும் தனவந்தர்களும் வாசிப்பு பழக்கம் அற்றவர்கள் என்பதை அழுத்திச் சொல்லுவது எமது நோக்கமும் அல்ல.
சாதாரணமானவர்கள் வாசிப்பு பழக்கத்தை தினந்தோறும் கடைப்பிடிக்கின்றனர் என்பதற்கு ஒரு நல்ல உதாரணத்தை யாழ்ப்பாணத்திலிருந்து நாம் எடுத்து வருகின்றோம். ‘திருநெல்வேலி சந்தை’யை பற்றி கேள்விப்படாதவர்கள் வட இலங்கை யாருமே இருக்கமாட்டார்கள். அந்த சந்தை நல்லூர் பிரதேசச் சபையினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. அங்கு பணியாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளி ஒருவர் தினமும் பத்திரிகைகளை வாசிக்கும் கொண்டவர் அதிகாலையிலேயே சந்தைக்கு செல்லும் தனது சுத்திகரிப்பு பணியை சீராகச் செய்த பின்னர் தனது உணவருந்தும் வேளையில் அங்குள்ள கடைகளிலிருந்து தமிழ்ப் பத்திரிகைகளை ஒவ்வொன்றாக எடுத்து வாசித்துவிட்டு அப்படியே திரும்பவும் அந்த தட்டுக்களில் வைத்துவிடுவார்களாம்.
கடைக்காரர்கள் கூட அவரது வாசிப்புக்கு தடையாக இருக்க மாட்டார்களாம். தேநீர்க் கடைக்காரர்கள் அவருக்கு இலவசமாக தேநீரும் சிற்றூண்டிகளும் வழங்குவார்களாம்.
இவ்வாறு தனது பணிகளையும் பத்திரிகை வாசிப்பையும் நிறைவு செய்த பின்னர் அவர் நல்லூர் பிரதேச சபை அலுவலகத்திற்குச் சென்று ஓரமாக ஒரு இடத்தில் நிற்பாராம். அங்கு பணியாற்றும் கற்றவர்களான உத்தியோகத்தர்கள் அவரிடம் கேட்பார்களாம். ‘இன்று என்ன செய்தி? சொல்லப்பா! என்று.
அவரும் தான் வாசித்த உலக மற்றும் உள்ளூர்ச் செய்திகளையும் அரசியல் செய்திகளையும் விபரங்களுடன் எடுத்துச் சொல்வாராம். இந்த விடயம் அங்கு வாரத்தில் ஐந்து நாட்களும் நடைபெறும் ஒன்றாகும். வுhசிப்பு பழக்கம் கொண்ட அந்த தொழிலாளிக்காக காத்திருந்த கற்றவர்கள் இருந்த காலம் இன்றிலிருந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர். இப்போது எப்படி இருக்கும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். அலுவலகத்தில் பணி செய்யும் உத்தியோகத்தர்கள் தங்கள் பணிகளை சரியாகச் செய்யாமல் தொலைபேசியைத் தட்டிக் கொண்டிருப்பார்கள்.
இப்போது இவ்வார ‘கதிரோட்டத்தின்’ தலைப்பிற்கு வருவோம். கனடாவில் சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் பத்துக்குக் குறையாத பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருந்தன. அவற்றில் வாராந்த மற்றும் மாதாந்த பத்திரிகைகள் அடங்குவன. ஆனால் காலப்போக்கில் தற்போது வாராந்தம் வெளிவருகின்ற தமிழ்ப் பத்திரிகைகள் இரண்டாக ‘சுருங்கிக்’; கொண்டன. இந்த ‘சுருக்கம்’ என்பது எண்ணிக்கையில் மாத்திரமல்ல பத்திரிகைகளின் பக்கங்களிலும் தங்கியிருக்கின்றது.
எனினும் எமது ‘உதயன்’ மற்றும் ‘உலகத் தமிழர்’ ஆகியவற்றின் வாராந்த வெளியீடுகள் தவறாமல் வெளிவந்தாலும் ஒவ்வொரு வாரமும் அவை ‘சுகமான பிரசவமாக’ இல்லை என்பதை இரண்டினதும் வெளியீட்டாளர்களும் பத்திரிகை ஆசிரியர்களும் நன்கு உணர்ந்து சவால்களுடன் தங்கள் ஊடகப் பணிகளை தொடர்ந்த வருகின்றார்கள்.
சவால்களுக்கு மத்தியில் எமது சமூகத்தின் வர்த்தகர்கள் சிலரும் மத்திய மற்றும் மாகாண அரசில் உள்ள உறுப்பினர்கள் சிலரும் அச்சு ஊடகங்களை காப்பாற்றும் வகையில் விளம்பரங்களை அவ்வப்போது தந்த வண்ணம் உள்ளார்கள்.
கனடாவில் வெளிவரும் நூற்றுக்கணக்கான பல்லினப் பத்திரிகைகளும் மத்திய அரசின் சிறிய உதவிகள் வருடத்திற்கு ஒரு தடவை வழங்கப்பெறுகின்றன. அதற்கு மேலாக பல் மொழிப்; பத்திரிகைகளின் அவசியமும் அவற்றின் தேவையும் பற்றி பல வருடங்களாக கனடாவின் சில மாகாண முதல்வர்களும் பிரதமர்களும் பல்லினப் பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்த ஆரோக்கியமான கருத்துக்களையும் பத்திகைகளை இன்னும் நேசிக்கும் இதயங்களுக்காக இங்கு பதிவு செய்கின்றோம்.
அந்த அரசியல் தலைவர்கள் தெரிவித்த அல்லது உணர்ந்து பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இவைதான். ‘ஒரு இனம் சார்ந்த பத்திரிகை ஒன்று குறிப்பிட்ட அந்த இனத்தின் அல்லது மொழியின் அடையாளமாகவே திகழ்கின்றது’ என்பதை அவர்கள் பகிரங்கமாக வெளியிட்டு வருகின்றனர். அதன் காரணமாகவே அச்சு ஊடகங்களுக்கு தங்கள் ஆகக்குறைந்த ஆதரவை அவர்கள் வழங்கி வருகின்றார்கள். எனவே நாம் மேற்கூறிய கருத்துக்களின் முடிவுரையாக எமது சமூகத்தின் ஆதரவும் நேசிப்பும் எமது அச்சு ஊடகங்களுக்கு தொடர்ந்தும் இருக்க வேண்டிய ஒன்றே என்ற நம்பிக்கையுடன் நாம் காத்திருக்கின்றோம் என்பதை வெளிப்படையாகவே நாம் பதிவு செய்கின்றோம்.!























