ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதும் ஒருபுறம் தமிழ் மக்கள் பெட்ரோல் வரிசையில் நின்றார்கள். இன்னொருபுறம் சமூகவலைத்தளங்களில் இரண்டு நாடுகளில் ஒன்றை எதிர்த்தும் ஆதரித்தும் கருத்துக்களை முன் வைத்தார்கள்.
தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்ரேலுக்கு எதிராகவே காணப்பட்டார்கள். அதற்கு பிரதான காரணம் காசாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்புதான். இந்த விடயத்தில் தமிழ் மக்கள் பெரும்பாலும் இன அழிப்புகளுக்கு எதிராகவே காணப்படுகிறார்கள்.காசாவில் நடப்பது ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன் வன்னி கிழக்கில்,முள்ளிவாய்க்காலில் என்ன நடந்ததோ அதுதான். ஆனால் சில வித்தியாசங்கள் உண்டு.
2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் ஏறக்குறைய உலகின் பெரும்பாலான நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தார்கள். பிராந்தியத்தில் ஒன்றுக்கொன்று முரணாக காணப்பட்ட நாடுகளும், உலக அளவில் ஒன்றுக்கொன்று போட்டியாக முரணாக காணப்பட்ட நாடுகளும் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தோடு அணி திரண்டு நின்றன.உதாரணமாக பாகிஸ்தானும் இந்தியாவும் எதிரிகள். ஆனால் இரண்டும் தமிழ் மக்களுக்கு எதிராக ஓரணியில் நின்றன. ஈரானும் இஸ்ரேலும் எதிரிகள். ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக மஹிந்தவோடு நின்றார்கள்.அரசுகளின் உலகம் அப்படித்தான் இருக்கும்.
அரசுகள் நலன்களின் அடிப்படையில்தான் இடையூடாடும்.ஏன் அதிகம் போவான்? பாலஸ்தீன சுயாட்சி பிரதேசத்தை ஆளும் பலஸ்தீன அதிகார சபை தமிழ் மக்களோடு நிக்கவில்லை. குறிப்பாக 2009க்கு பின்னர்தான் அவை மஹிந்தவை கூப்பிட்டு அவருக்கு நாட்டின் உயர் விருதை வழங்கி, அவருடைய பெயரில் ஒரு வீதி யையும் திறந்து வைத்தார்கள். அரசுகளின் உலகம் அத்தகையதுதான். அது அறம் சார்ந்ததோ அல்லது நீதி நியாயங்களின் அடிப்படையிலானதோ அல்ல. நலன்களின் அடிப்படையிலானதுதான்.
ஆனால் அரசு இல்லாத சிறிய மக்கள் கூட்டமாகிய தமிழ் மக்கள் அவ்வாறு சிந்திப்பதில்லை. அதனால்தான் காசாவில் நடப்பதற்கு எதிராக அவர்கள் இஸ்ரேலை ஒரு எதிரியாகப் பார்த்தார்கள்.ஈரானும் இஸ்ரேலும் மோதிக்கொண்ட பொழுது தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் ஈரானின் பக்கம்தான்.
இந்த முடிவு பூகோள அரசியல் தொடர்பான அறிவினால் ஏற்பட்டது அல்ல. ஒரு இன அழிப்புக்கு எதிராக ஏற்பட்ட கூட்டுணர்வு.அதனால் ஈரான் இஸ்ரேலுக்கு அடித்த பொழுது அதைக் கண்டு மகிழ்ந்த தமிழர்களே அதிகம். அது தொடர்பாக வெளிவந்த காணொளிகளை பகிர்ந்து மகிழ்ந்த தமிழர்களே அதிகம். தங்களுடைய பொது எதிரி அடி வாங்குகிறான் என்ற மனோநிலைதான் கணிசமான தமிழர்களிடம் காணப்பட்டது.
ஆனால் இப்படிப்பட்ட உணர்வு பூர்வமான, அறம் சார்ந்த,அப்பாவித்தனமான நிலைப்பாடுகளோடு தமிழ் மக்கள் உலக சமூகத்தை அணுக முடியாது என்பதுதான் இங்குள்ள குரூருமான ராணுவ, பொருளாதார,அரசியல் மற்றும் ராஜதந்திர யதார்த்தம் ஆகும்.
இக்கட்டுரை எழுதப்படும் நாளன்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகிறார். இங்கே அவர் செம்மணி புதை புதை குழியைப் பார்வையிட செல்வார் என்றும் என்றும் எதிர்பார்த்து அந்தப் பிரதேசத்தில் தமிழ் மக்கள் ஒரு போராட்டத்தை ஒழுங்குபடுத்தியிருக்கிறார்கள்.”அணையா விளக்கு“என்று அழைக்கப்படுகின்ற அந்த கவன ஈர்ப்பு போராட்டமானது மூன்று நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலகட்டத்தில் ஒன்றிணைந்த தன்னார்வலர்களைக் கொண்ட ஒரு சிறு அணி செம்மணி விவகாரத்திலும் அவ்வாறு தன்னார்வமாக ஒரு போராட்டத்தை ஒழுங்குபடுத்தியது.
செம்மணிச் சந்தியில் உள்ள சிவலிங்கத்துக்கு அருகே அவர்கள் தற்காலிக கொட்டைகளை நிறுவி அங்கே அமர்ந்திருக்கிறார்கள்.ஒரு தீபத்தை ஏற்றி அதை அணையாமல் பாதுகாத்தபடி ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வருகைக்காக காத்திருந்தார்கள்.
அது செம்மணி வெளியில் காணப்படும் ஒரு சந்தி. அந்த சந்தியில் கடல் காற்று பலமாக வீசிக் கொண்டே இருக்கும். அந்த தீபத்தை கடும் காற்றில் அணைய விடாமல் மூன்று நாட்களாக இரவும் பகலும் பாதுகாத்து வந்தார்கள். தமிழ் மக்கள் போராட்ட நெருப்பை அணையவிடாது தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்பதனை அது குறிக்கிறது. அது சரி. தமிழ் மக்கள் போராட வேண்டும். போராடினால்தான் இனமாக திரளலாம். அணையா விளக்கு போராட்டம் கட்சி கடந்து அரசியல் செயற்பாட்டாளர்களை ஊடகங்களை அந்த இடத்தை நோக்கி ஈர்த்துக் கொண்டு வந்தது.இவ்வாறான கட்சி கடந்த போராட்டங்கள் தமிழ் மக்களை இனமாகத் திரட்டும். எனவே தமிழ் மக்கள் போராட வேண்டும். ஆனால் தொடர்ந்து போராட வேண்டும்.
ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் ஒரு ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்திருக்கிறார்.அவர் இலங்கைக்கு வரக்கூடாது என்று தமிழ் சிவில் சமூகங்கள் இணைந்து கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி ஐநாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பின.அந்த கடிதத்தின் பின் ஐநா அலுவலர்கள் சிவில் சமூகங்களோடு ஒரு மெய் நிகர் சந்திப்பை ஒழுங்கு படுத்தினர். அதன்போது சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஐநா அலுவலகத்தோடு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க மறுப்பதையும் அந்த அலுவலர்கள் இலங்கைக்குள் வருவதற்கு விசா வழங்கப்படுவதில்லை என்பதையும் சிவில் சமூகங்கள் சுட்டிக்காட்டின. அந்த அலுவலகம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. அந்த அலுவலகத்தோடு ஒத்துழைக்க மறக்கும் ஒரு நாட்டுக்குள் வருவது அந்த நாட்டை அங்கீகரிப்பதாக அமையும் என்றும் சுட்டிக்காட்டினர்.அப்பொழுது ஐநா ஒரு காரணத்தை கூறியது.இந்த அரசாங்கத்தை எதிர் நிலையில் வைத்திருந்தால் அதனைக் கையாள முடியாது. எனவே இந்த அரசாங்கத்தை பொறுப்பு கூற வைப்பதென்றால் அதோடு ஏதோ ஒரு வகையில் என்கேஜ் பண்ண வேண்டும் என்று அவர்கள் விளக்கம் சொன்னார்கள்.
இது தமிழ் மக்களுக்கு ஒரு புதிய விளக்கமல்ல. கடந்த 15 ஆண்டுகளாக ஐநா அலுவலகங்களும் மேற்கத்திய தூதரகங்களும் தமிழ் சிவில் சமூகங்களுக்கு அப்படிப்பட்ட விளக்கங்களைத்தான் வழங்கி வருகின்றன. இந்த விளக்கங்கள் முழு அளவுக்கு உண்மையானவை அல்ல. இந்த விளக்கங்களின் பின்னால் வெளியில் சொல்லப்படாத ராஜதந்திர இலக்குகள் உண்டு.
இப்போதுள்ள இலங்கை அரசாங்கம் சீனச் சார்பு இடதுசாரி பாரம்பரியத்தில் வந்த ஜேவிபியை அடித்தளமாகக் கொண்டது. ஜேவிபியின் தீர்மானிக்கும் தலைவர் என்று அழைக்கப்படுகின்ற ரில்வின் சில்வா அண்மையில் சீனாவில் காணப்பட்டார். சீனாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் எளிதாக விழக்கூடிய ஒரு அரசாங்கம் இதுவென்று மேற்கு நாடுகளும் இந்தியாவும் ஐநாவும் அஞ்சுகின்றன. எனவே இந்த அரசாங்கத்தை பகை நிலைக்கு தள்ளினால் அது சீனாவை நோக்கிப் போய்விடும் என்றும் அவை அஞ்சுகின்றன. அதனால் இந்த அரசாங்கத்தோடு என்கேஜ் பண்ண வேண்டும் என்றும் அவை சிந்திக்கின்றன.நவீன ராஜதந்திரம் என்பது ஒரு என்கேஜ்மென்ட்தான். அரசுகளும், அரசுகளும் அரசுகளும் உலகப் பெரு நிறுவனங்களும் தங்களுக்கு இடையே என்கேஜ் பண்ணிக் கொள்கின்றன. அரசு இல்லாத தரப்பு ஆகிய தமிழ் மக்களைப் பொறுத்தவரை அதனால் என்ன கிடைத்திருக்கிறது?
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அதாவது 2022 இலிருந்து ஓர் அலுவலகம் ஐநா மனித உரிமைகள் ஆணையகத்துக்குள் இயங்கி வருகின்றது. ஸ்ரீலங்காவை பொறுப்புக்கூற வைப்பதற்கான அலுவலகம் என்று அது அழைக்கப்படுகிறது. போர்க்குற்றம் தொடர்பான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஓர் அலுவலகம் அது. அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு தொடர்ச்சியாக விசா மறுக்கப்பட்டு வருகிறது. இதைத்தான் முன்சொன்ன சிவில் சமூக கூட்டணிவு ஐநா அலுவலர்களுக்கு சுட்டிக்காட்டியது. இப்பொழுது ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்குள் வருவதால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது பொறுப்புக் கறலுக்கான.அந்த அலுவலகத்தின் அலுவலர்கள் நாட்டுக்குள் வருவதற்கு அனுமதி வழங்கி விடுமா?
ஆனால் கடந்த ஜெனிவா கூட்டத் தொடரின் போது, அங்கு பேசிய புதிய வெளிவகார அமைச்சராகிய விஜித ஹேரத் தமது அரசாங்கம் பொறுப்பு கூறல் தொடர்பில் உள்நாட்டு பொறிமுறையைத்தான் வலியுறுத்துவதாகவும் அனைத்துலக பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தெளிவாகச் சொல்லிவிட்டார். இதுதான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றால் அந்த அலுவலகம் நாட்டுக்குள் வந்து சான்றுகளையும் சாட்சிகளையும் விசாரிப்பதற்கும் சேகரிப்பதற்கும் அரசாங்கம் அனுமதிக்குமா? அவ்வாறு அனுமதிக்குமாறு அரசாங்கத்தை நிர்பந்திக்க ஐநாவால் முடியுமா?
காசாவில் நடப்பதில் இருந்து தமிழ் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். 15 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மக்களின் விடயத்தில் ஐநா கையாலாகாத ஒரு சாட்சியாக இருந்தது. அதுதொடர்பாக ஐநா நடத்திய உள்ளக விசாரணை அறிக்கையின்படி ஐநா, முள்ளிவாய்க்கால் பொறுத்து கையாலாகாத ஒரு சாட்சியாக இருந்தது என்பது தெரிய வந்தது. முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல, காசாவில் மட்டுமல்ல, அரசற்ற இனங்கள் நசுக்கப்படுகையில் ஐநா தொடர்ந்து கையாலாகாத ஒரு சாட்சியாகவே இருந்து வந்துள்ளது. இப்படிப்பட்டது ஒரு பின்னணிக்குள், தமிழ் மக்கள் ஐநாவிடம் நீதியை கேட்பது சரியா என்ற கேள்வி எழும்.
உலகப் பெரு மன்றம் என்ற அடிப்படையில் ஐநாவிடம்தான் முறைப்பாடு செய்ய வேண்டும். அரசுகள் ஐநாவுக்குள்தான் என்கேஜ் பண்ணுவது போல அரசு இல்லாத தரப்பாகிய தமிழ் மக்களும் என்கேஜ் பண்ண வேண்டும்.ஆனால் ஐநாவை நம்பி, ஐநா தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தரும் என்று நம்பி காத்திருக்க தேவையில்லை. மாறாக தமிழ் மக்கள் போராட வேண்டும். போராடினால் தான் இனமாக திரள்வார்கள். இனமாக திரண்டால்தான் பேரபலம் அதிகரிக்கும். பேரபலம் அதிகரித்தால் தான் அரசுகளும் உலக பொது நிறுவனங்களும் தமிழ் மக்களுக்கு செவி கொடுக்கும். எனவே தமிழ் மக்கள் போராட வேண்டும். விடாது போராட வேண்டும். போராட்ட நெருப்பை அணையாது பாதுகாக்க வேண்டும்.
அதன் பொருள் ஐநா நீதியை பெற்று தரும் என்று நம்பி ஏமாறுவது அல்ல. மாறாக தமிழ் மக்கள் தங்களுடைய பேர பலத்தைத் திரட்டுவதற்காக போராட வேண்டும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அம்பலப்படுத்துவதற்காகப் போராட வேண்டும். உலக சமூகத்தின் கவனத்தை தங்களை நோக்கி ஈர்த்து வைத்திருப்பதற்காக போராட வேண்டும். அதைவிட முக்கியமாக தமிழ் மக்கள் தாங்கள் ஒரு தேசமாகத் திரண்டால்தான் உலக சமூகத்தில் தங்களுக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டலாம். தங்களுக்கு ஆதரவாக நாடுகளையும் நிறுவனங்களையும் திரட்டினால்தான் நீதிக்கான போராட்டத்துக்கான அனைத்துலக அழுத்தத்தை அதிகப்படுத்தலாம்.
எனவே உலகத்தை திரட்டிக் கொள்வதென்றால் தமிழ் மக்கள் முதலில் தங்களைத் திரட்டிக் கொள்ள வேண்டும்.செம்மணியில் அணையா விளக்குப் போராட்டத்தின் கடைசி நாளன்று சில தமிழ் அரசியல்வாதிகளை அவமதித்தது போன்ற செயல்கள் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்ட உதவப் போவதில்லை. தம்மைத் தாமே ஒரு தேசமாகத் திரட்டிக் கொண்டால்தான் உலகத்தை வெற்றிகரமாகத் திரட்டிக் கொள்ளலாம்.
























