– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

செம்மணிப் போராட்டக் களத்தில் சிவஞானம்,சாணக்கியன் ஆகிய இரண்டு தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளையும் சந்திரசேகரன் உள்ளிட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அங்கிருந்த இனங்காணப்பட்ட சில நபர்கள் அவமதித்திருக்கிறார்கள். சிவஞானம் சொல்கிறார், யாரும் எங்களைத் துரத்தவில்லை நாங்களாக வெளியே வந்தோம் என்று. அவர்கள் வெளியேறிய பொழுது அவர்கள் அங்கிருக்கக்கூடாது என்று கருதியவர்கள் அவர்களைத் துரத்தி துரத்தி அவமதித்தார்கள்.அதை காணொளி ஊடகங்கள் மற்றும் யூடியூபர்கள் தொடர்ந்து படம் பிடித்தார்கள்.சிலர் அதை “லைவ்விலும்” விட்டார்கள்.
தமிழ்த் தேசிய அரசியலில் இவ்வாறு மூத்த தலைவர்களை அல்லது அரசியல்வாதிகளை போராட்டக் களங்களில் இருந்து அகற்றுவது அல்லது உணர்ச்சிகரமான அரசியல் களங்களில் இருந்து அகற்றுவது என்பது ஒரு புதிய போக்கு அல்ல.இது சில தசாப்தங்களுக்கு முன்னுக்கே தொடங்கிவிட்டது.
குறிப்பாக ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் தியாகி சிவகுமாரனின் இறுதி நிகழ்வின்போது அப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கதிரவேற்பிள்ளை அவ்வாறு அவமதித்துத் துரத்தப்பட்டார். அதற்குக் காரணமும் உண்டு. சிவகுமாரன் தேடப்படும் ஒரு நிலைமை வந்து தலைமறைவாகிய போது அவர் இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயற்சிதார். அதற்கு கதிரவேற்பிள்ளையிடம் உதவி கேட்டுச் சென்றார்கள். அவர் உதவவில்லை. பின்னர் சிவகுமாரன் ஈழப் போரின் முதலாவது சயனைட் போராளியாக உயிர் நீத்தார்.அவருடைய இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள வந்த கதிரவேற்பிள்ளையை அங்கிருந்து மக்கள் துரத்தி விட்டார்கள்.
அதுபோன்ற மற்றொரு சம்பவம், 1981இல் அமிர்தலிங்கம் யாழ். பல்கலைக்கழகத்துக்குள் வரும்பொழுது இடம்பெற்றது.அப்பொழுது ஆயுதப் போராட்டம் வளர்ச்சியடையத் தொடங்கிவிட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஆயுதப் போராட்டத்தோடு தொடர்புடையவர்கள் இருந்தார்கள். அமிர்தலிங்கம் தன்னுடைய மெய்க்காவலரோடு பல்கலைக்கழகத்துக்குள் வந்தார். உணர்ச்சி வசப்பட்ட மாணவர்கள் அவரை அங்கிருந்து துரத்தியது மட்டுமல்ல, அந்த மாணவர்களில் ஒருவர் அவருடைய மெய்க்காவலரின் கைத் துப்பாக்கியை பறித்துவிட்டார். எனினும் பின்னர் மாணவர் தலைவர்கள் சமரசம் செய்து அந்த துப்பாக்கியை மீண்டும் அமரலிங்கத்திடம் கொடுத்தார்கள். அதன்பின் அமிர்தலிங்கம் அதுபோன்ற உணர்ச்சிகரமான இடங்களுக்கு வருவதைத் தவிர்த்துக் கொண்டார்.
எனினும்,சில ஆண்டுகளின் பின், ஆயுதப் போராட்டம் நிலத்தைக் கட்டுப்படுத்தும் வளர்ச்சியைப் பெற்றிருந்த ஒரு பின்னணிக்குள் அமிர்தலிங்கம் மீண்டும் வீரமாகாளி அம்மன் கோயிலில் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்பொழுது போராளிகளும் உட்பட இளையவர்கள் அவரைச் சூழ்ந்து நின்று கேள்வி கேட்டார்கள். அவருடைய உண்ணாவிரதத்தைக் குழப்பும் விதத்தில் அவருக்கு முன் உணவுப் பார்சல்களைக் கொண்டு வந்து வைத்துச் சாப்பிட்டார்கள். அமிர்தலிங்கம் தன் போராட்டத்தைத் தொடர முடியாதவராக அங்கிருந்து அகற்றப்பட்டார்.
பின்னர், சம்பந்தர். 2015 க்குப் பின் நடந்த ஒரு முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் கலந்து கொள்வதற்காக சம்பந்தர் வந்திருந்தார். அங்கே அவரை சூழ்ந்து கொண்ட ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டார்கள். நிலைமை உணர்ச்சிக் கொதிப்புடையதாக மாறியது. ஒரு கட்டத்தில் ஒரு பெண் ஆவேசமடைந்தவராக சம்பந்தரை நோக்கி உரத்த குரலில் கேள்விகள் கேட்டார். சம்பந்தர் பதில் சொல்லவில்லை.அதற்குப்பின் சம்பந்தர் முள்ளிவாய்க்கால் நினைவு நாட்களுக்கு வருவதில்லை.
இந்த நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாகத்தான் செம்மணி வளைவில் அணையா விளக்கு போராட்டத்திலிருந்து தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் அகற்றப்பட்டதையும் பார்க்க வேண்டும்; விளங்கிக் கொள்ள வேண்டும். காலத்துக்குகாலம் தமிழ்மக்கள் தமிழ்த் தலைவர்களை அவ்வாறு அவமதித்திருக்கிறார்கள். அல்லது வெளித் தள்ளியிருக்கிறார்கள். இது புதியது அல்ல. அதிலும் குறிப்பாக இங்கே கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், குறிப்பிட்ட தலைவர்களை தமிழ் மக்களே ஒரு காலகட்டத்தில் தெரிவு செய்திருந்தார்கள்.
சிவஞானம் வடமாகாண சபையின் அவைத் தலைவராக இருந்தவர். இப்பொழுதும் அவைத் தலைவருக்குரிய வளங்களையும் சலுகைகளையும் அனுபவிப்பவர். தமிழ்த் தேசிய அரசியலில் உள்ள ஒரு மூத்த தலைவர். சாணக்கியன், கிழக்கில் தமிழரசுக் கட்சியை கட்டியெழுப்பியதற்காகக் கொண்டாடப்படுகிறார். ஆனால் அவர்கள் இருவரும் சுமந்திரன் அணியைச் செய்தவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். தமிழரசு கட்சிக்குள் காணப்படும் இரண்டு அணிகளுக்கு இடையிலான மோதல்தான் செம்மணி வளைவில் பிரதிபலித்தது என்று கருதப்படுகின்றது.அன்றைக்கு சம்பவம் நடந்த நாளன்று கிளிநொச்சியிலிருந்து ஆறுக்கும் குறையாத பேருந்துகளில் மக்கள் கொண்டுவரப்பட்டார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் தமிழரசுக் கட்சியோடு நெருக்கமாகக் காணப்பட்டவர்கள். சிறீதரன் அணியைச் சேர்ந்தவர்கள்.அவர்களின் ஒருவர் அண்மையில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட கிளிநொச்சி பிரதேச சபையின் தவிசாளரோடு வடமாகாண ஆளுநரைச் சந்திக்க வந்திருந்தார்.அந்த ஒளிப்படம் ஊடகங்களில் வெளிவந்தது. அவர்தான் சிவஞானத்தை அவமதித்த நபர்களில் முக்கியமானவர்,அல்லது அந்த சம்பவத்தை ஒழுங்கமைத்தவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அது போலவே தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகளை அவமதித்த இடத்தில் கிடைத்த காணொளிகளில், தமிழ்த் தேசியப் பேரவையைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளைக் காணக்கூடியதாக உள்ளது.
அணியா விளக்கு போராட்டமானது, இறுக்கமான ஒரு மக்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது உருவாக்கப்பட்ட தன்னார்வ அமைப்பு ஒன்றின் அடுத்த கட்ட வளர்ச்சிதான் அது.அரசியல் போராட்டங்களுக்கு ஒப்பீட்டளவில் புதிய அமைப்பு அது. எனவே அந்தப் போராட்டத்தை நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து தத்தெடுப்பதற்கு பல்வேறு சக்திகளும் முயற்சி செய்ததாகத் தகவல்கள் உண்டு. எல்லாவற்றையும் முறியடித்து அந்தப் போராட்டத்தை அதன் இறுதி இலக்குவரை நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக அது கட்சி சாராப் போராட்டம் என்றபடியால் எல்லாக் கட்சிக்காரர்களும் அங்கே வந்திருந்தார்கள். ஆனந்த சங்கரியும் உட்பட. ஆனந்தசங்கரி முதல் நாள் போராட்டத்திலேயே அங்கே கதிரையில் அமர்ந்திருக்கக் காணப்பட்டார்.
அது கட்சிகடந்த ஒரு போராட்டமாக பரிணமித்தது.அதன் அடுத்தகட்ட வளர்ச்சியாகத்தான் அங்கே ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் வருகை தர வேண்டி வந்தது. இவ்வாறு எல்லாக் கட்சிக்காரர்களையும் அந்த அணையாத நெருப்பு தன்னை நோக்கி ஈர்த்தது. எனவே அங்கு வந்தவர்கள் எல்லாரும் அந்த நெருப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து வந்தவர்கள். அதாவது அங்கே அவர்கள் தங்களுடைய வருகைப் பதிவை உறுதிப்படுத்த வேண்டிய ஒரு அரசியல் நிர்பந்தத்தை அந்த போராட்டம் ஏற்படுத்தியது. எனவே அங்கே வந்தவர்களுக்கு வெவ்வேறு அரசியல் உள்நோக்கங்கள் இருந்திருந்தாலும், அவர்கள் அந்தப் போராட்டம் தவிர்க்க முடியாதது என்பதை ஏற்றுக் கொண்டு, அந்தப் போராட்ட களத்தில் தாங்களும் நிற்க வேண்டும், படம் எடுக்க வேண்டும்,என்று தீர்மானித்து வந்திருந்தார்கள.இது அந்தப் போராட்டத்தின் வெற்றி.
அவ்வாறு வந்த வெவ்வேறு அரசியல் நம்பிக்கைகளைக் கொண்டவர்களை அந்தப் போராட்டத்தின் நீதியை ஏற்கவைத்து, அந்தப் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களைக் கூறவைப்பது அதன் அடுத்த கட்ட வெற்றியாக அமைந்திருக்கும்.
உதாரணமாக, சந்திரசேகரன் கபினட் அந்தஸ்துள்ள ஒரு அமைச்சர். அரச பிரதிநிதியாக வடபகுதியில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்பவர். அவர் அங்கே வந்தார்.அவர் சார்ந்த அரசாங்கம், அந்த அரசாங்கத்தின் அடித்தளமாக இருக்கும் ஜேவிபி என்பன இனப்பிரச்சினையில் அனைத்துலக ஈடுபாட்டை ஏற்றுக்கொள்ளாதவை. குறிப்பாக இறுதிக்கட்டப் போரில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை ஜேவிபி பலப்படுத்தியது. எனவே இன அழிப்புக்கு எதிரான நீதியைக் கேட்கும் ஒரு போராட்டத்தில் அவர்களை அனுமதிக்க முடியாது என்ற ஒரு விளக்கம் கூறப்படுகிறது. குறிப்பாக காலி முகத்திடலில் “அரகலய” போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தமிழ்ச் செயற்பாட்டாளர் அவ்வாறு விளக்கம் கொடுப்பதை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக உள்ளது. இன அழிப்பின் பங்காளிகளாக இருந்துவிட்டு இன அழிப்புக்கு எதிரான நீதியைக் கேட்டு அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் ஒரு போராட்டத்தில் ஆளுங்கட்சிக்கு இடமில்லை என்று கூறப்படுகின்றது. அதில் உண்மை உண்டு.
ஆனால் தமிழ் மக்கள் நீதிமான்களிடம்தான் நீதி கேட்கலாம் என்றால், இந்தப் பூமியிலே யாரிடமும் நீதி கேட்க முடியாது. ஏனென்றால் போர்த்துக்கீசரில் தொடங்கி ஆங்கிலேயர் வரை இலங்கையை ஆட்சி செய்த எல்லா புறத்தியாரும் தமிழ் மக்களிடம் ஏற்கனவே இருந்த அரசுகளை அழித்தவர்கள்தான். எனவே அவர்களுடைய கைகளில் தமிழ் ரத்தம் உண்டு. பிரித்தானியர் தமது ஆட்சித் தேவைகளுக்காக, ஆட்சித் தந்திரமாக தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பிரித்து ஆண்டார்கள்.முடிவில் சிங்கள மக்களிடமே அரசைக் கொடுத்து விட்டுச் சென்றார்கள்.
எனவே இனப்பிரச்சினைக்கு அவர்களும் காரணம்.அதன்பின் ஜெயவர்த்தனாவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக பிரித்தானியா உட்பட பெரும்பாலான மேற்கு நாடுகள் அரசை ஆதரித்து ஆயுதங்களை வழங்கின. எனவே அவர்களுடைய கைகளில் ரத்தம் உண்டு. அதே சமயம் அக்கால கட்டத்தில் தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதமும் வழங்கியது இந்தியா. ஆனால் அதே இந்தியா இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு பின் மோதலில் ஈடுபடும் ஒரு தரப்பாக மாறியது. எனவே தமிழ் மக்களோடு சம்பந்தப்பட்ட அனேகருடைய கைகளில் ரத்தம் உண்டு. அதன் பின் 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்டப் போரில் உலகின் பெரும்பாலான நாடுகள் தமிழ் மக்களுக்கு எதிராக மஹிந்த அரசை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரித்தன.
குறிப்பாக ஐநா தனது கிளிநொச்சி அலுவலகத்தை மூடிவிட்டு வெளியேறியது. சாட்சியமற்ற யுத்தம் என்று எல்லாரும் வாய்கிழிய கத்துகிறார்கள். ஆனால் அவ்வாறு சாட்சிகளை அகற்றியதில், அந்த யுத்த களத்தை சாட்சிகள் இல்லாத களமாக மாற்றியதில் ஐநாவுக்குப் பொறுப்புண்டு. கடந்த வாரம் இலங்கைக்கு வந்த மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்தித்த மனோகணேசன் இந்த விடயத்தை அவருக்குச் சுட்டிக் காட்டியிருந்தார்.
அன்றைக்கு ஐநா அந்தப் பொறுப்பை ஏற்கவில்லை. ஆனால் இப்பொழுது பொறுப்புக்கூறல் தொடர்பாக ஐநா தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறது. எனவே இந்தப் பூமியில் எல்லா பேரரசுகளும் ஒரு தொகுதி சிறிய அரசுகளும் தமிழ் மக்களுக்கு எதிராக ஏதோ ஒரு காலகட்டத்தில் செயற்பட்டிருக்கின்றன. எல்லாருடைய கைகளிலும் தமிழ் இரத்தம் உண்டு. ஐநாவின் கைகளிலுந்தான்.
இப்படிப் பார்த்தால் தமிழ் மக்கள் யாரிடம் நீதி கேட்கலாம்? இன அழிப்பின் நேரடிப் பங்காளிகள், மறைமுகப் பங்காளிகள் என்று பார்க்கும் பொழுது தமிழ் மக்கள் யாரிடமும் நீதி கேட்க முடியாது. எனவே இந்த விடயத்தில் தமிழ் மக்கள் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். உலகில் தூய நீதி கிடையாது. அது நிலைமாறு கால நீதியாக இருந்தாலும் சரி, பரிகார நீதியாக இருந்தாலும் சரி அவை அரசுகளின் நீதிகள்தான். அரசுகள்தான் இந்த உலகத்தில் எது நீதி என்பதை இறுதியிலும் இறுதியாகத் தீர்மானிக்கின்றன. அமுல்படுத்துகின்றன.
எனவே தமிழ் மக்கள் அரசுகளைக் கையாள வேண்டும்.அரசுகளைக் கையாள்வது என்றால் முதலில் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகப் பலப்படுத்த வேண்டும். அதாவது தமிழ் மக்கள் முதலில் தங்களைத் தாங்களே வலிமையான தேசமாகத் திரட்டிக் கொண்டால்தான், உலகத்தைத் திரட்டிக் கொள்ளலாம். அவ்வாறு நண்பர்களைத் திரட்டிக் கொண்டால்தான் நீதிக்கான போராட்டத்தில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறலாம்.
எனவே முதலில் தமிழ்மக்கள் தங்களைத் தாங்களே திரட்டிக் கொள்ள வேண்டும். கட்சி சாராப் போராட்டத்தில் “நீ வா; நீ வராதே” என்று நியாயத் தராசை வைத்துக் கொண்டு ஒருவர் மற்றவரை நிறுக்க முற்பட்டால் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகத் திரட்டி கொள்ள முடியாது.
























