எத்தனை முறை எரித்தாலும் எரிந்தாலும்
சாம்பலாவது என்னவோ எம்மினம் தான்,
சாம்பலுக்குள்ளிருந்து இனி எழப்போவது
பீனிக்ஸ் பறவைகள் அல்ல!.
எழுந்த பீனிக்ஸ் அத்தனையும்
மீண்டும் தங்களை ஆகுதியாக்கி
மண்ணுக்கான விதைகளாகி
இன்று உறங்கு நிலையில்…..
இனியும் எரிந்து சாம்பலாகாதே
இனி நம் இருப்பைக் காக்க
எரியும் நெருப்பாகி உருக்கு,
உருகும் இரும்பாகி உருமாறு.
வதை முகாம்களுக்குள்ளே – நம்
சதையைத் தின்றுவிட்டு ஓநாய்கள்
சிதைத்த நம்மவர் எச்சங்கள்
புதை குழிக்குள்ளே இன்னும் சிதையாமல்
விதைகளாய் தெரிந்தன செம்மணியில்.
பதைக்க வைக்குது பகைவரையும்.
திறந்த வெளிச் சிறைக்குள்
திரிந்தன நம் உறவுகள் அன்று,
கிரிசாந்தியை தேடிய போதுதான்
சோம ரத்தின ராணுவ கொடியவரின்
காம வெறியாட்டமும்
செம்மணியின் உண்மைகளும்
அம்மணமானது.
ஊருக்கு ஒரு இடுகாடு இது நியதி
ஊரே இடுகாடுகளாய் ஈழத்து நியதி.
முற்றங்களிலும் மல்லிகை வைக்க
இனி மண்ணைத் தோண்டாதீர்கள்,
கண்ணில் படலாம் காணாமல் போன
உறவுகளின் மண்டை ஓடுகள்.
மண்டை கழண்டு போய்
சொத்தைச் சேர்க்க இனத்தை விற்கும்
சொத்தை அரசியல் தலைமைகளை
இனியும் நம்பினால்,
இனப்படுகொலைக்கு ஆதாரமான
இந்தப் புதைகுழிகளே இனவாத அரசால்
புதைகுழிக்குள்ளே நாமாகலாம்.
கண்முன்னே இன்று சாகும் காசாவையே
கண்டுகொள்ளாத சர்வதேசம்
நம் எலும்புகளை எண்ணி! எண்ணி!!
என்ன செய்யப் போகிறது.
ஐக்கிய நாடுகள் சபை கூட
வக்கில்லாத,உலகின் யுத்தங்களின்
உக்கிப்போன எலும்புகள் மீது
கட்டப்பட்டது தான் வரலாறு.
கவியாக்கம்: போல் ஜோசேப் (கனடா)
























