மனமாற நான் போற்றிப் பின்பற்றிய பெருந்தலைவர் அவர்களின் நினைவுகள் குறித்து நூல் எழுதி அவரது நூற்றாண்டு விழாவின் போது 2002ஆம் ஆண்டில் வெளியிட வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். ஆனால், கொடிய கருப்புச் சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காரணத்தினால் அம்முயற்சி தடைப்பட்டது. சிறையில் நான் இருந்தபோது, எனது வீட்டை சோதனை செய்த காவல்துறையினர் பல ஆவணங்களை அள்ளிச் சென்றனர். பெருந்தலைவர் பற்றிய சில குறிப்புகளும் அவற்றில் அடங்கும். காவல்துறையினருக்கு அவற்றால் எந்தப் பயனும் இல்லை. ஆனாலும், அவை மறுபடியும் எனது கைக்குக் கிடைக்கவில்லை. எனவே, நினைவில் இருந்தவற்றைக் கொண்டு சில அத்தியாயங்களை எழுதவேண்டியிருந்தது. இதன் விளைவாக சில நிகழ்ச்சிகளும் அவற்றோடு தொடர்புகொண்ட காமராசர் தொண்டர்களைப் பற்றிய செய்திகளும் விடப்பட்டிருந்தால் பொறுத்தருள வேண்டுகிறேன்.
எந்தவொரு நாட்டின் வரலாற்றிலும் அந்த நாட்டு மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும், அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறவும் கொடுங்கோலாட்சிகளை வீழ்த்தவும் நடத்திய போராட்டங்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியத் துணைக் கண்டம் தனது தளைகளை உடைத்தெறிய அறவழியில் நடத்திய போராட்டம் ஈடு இணையற்றதாகும். அப்போராட்டம் குறித்தும், அதற்குத் தலைமை தாங்கியவர்கள் குறித்தும் ஏராளமான நூல்கள் வெளிவந்திருக்கின்றன.
காந்திய சகாப்தத்தின் தேச விடுதலைப் போரில் ஈடுபட்ட தியாகத் தலைவர்கள் பலரும் மேட்டுக்குடிகளில் பிறந்தவர்கள். மேனாட்டுக் கல்வி கற்றவர்கள். இவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் பெருந்தலைவர் காமராசர். எளிய குடியில் பிறந்த அவர் விருதுப்பட்டியில் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாத நிலையில் ஏழ்மையில் வாடியவர். ஆனாலும் தனது ஈடு இணையற்ற தொண்டினாலும், அளப்பரிய தியாகத்தினாலும் அகில இந்திய காங்கிரசுத் தலைவர் பதவி வரை உயர்ந்தவர்.
1903ஆம் ஆண்டு சூலை மாதம் 15ஆம் நாள் பிறந்த காமராசர் தனது 16ஆம் வயதில் அதாவது, 1919ஆம் ஆண்டில் காந்தியத் தொண்டராகத் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார். அந்நிய ஆட்சியில் 6 முறை சிறை சென்றார். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைகளில் வாடினார். 21 ஆண்டுகள் தொண்டராகத் திகழ்ந்து 1940ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக ஆனார். 12 ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியாத தலைவராக விளங்கி, தமிழக அரசியலில் என்றும் அழியாத முத்திரையைப் பொறித்தார்.
தமிழ்நாட்டில் காங்கிரசுக் கடசி, அந்த நாளில் மேல்சாதி ஆதிக்கப் பிடியில் கட்டுண்டு கிடந்தது. அதற்கு எதிராகப் போராடித்தான் பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்கள் காங்கிரசு கட்சியிலிருந்து வெளியேறினார். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது காமராசர் மிகப் பிற்பட்ட சாதியைச் சேர்ந்த இளம் தொண்டர். ஆனாலும், மனம் தளராமல் பெரியார் விட்டுச் சென்ற பணியினைத் தொடர்ந்தார். காங்கிரசுக் கட்சிக்குள்ளிருந்தே சாதி ஆணவத்தின் அவமதிப்பையும், புறக்கணிப்பையும் சந்தித்தார். அவரை அசைத்து விரட்ட சாதி ஆணவக்காரர்கள் எவ்வளவோ முயன்றனர். பொதிகை மலை போல காமராசர் கொஞ்சமும் அசைக்க முடியாதபடி உறுதி வாய்ந்த தலைவராகத் திகழ்ந்தார். ‘தமிழ்நாட்டில் அவர்தான் காங்கிரசு, காங்கிரசுதான் அவர்’ என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 தமிழ்ப் புத்தாண்டு நாளில் அவர் தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார்.
ஒன்பதாண்டுக் காலம் அப்பதவியில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் திகழ்ந்தார். அவரது ஆட்சிக் காலத்தைத் தமிழகத்தின் பொற்காலம் என மாற்றுக் கட்சியினரும் மதித்துப் போற்றினர். அவரது ஆட்சி கல்வி, தொழில், வேளாண்மை, மின் உற்பத்தி ஆகிய துறைகளில் ஆற்றிய சாதனைகள் இன்றுவரை எந்த ஆட்சியாளராலும் மிஞ்சப்படவில்லை. இவ்வளவுக்கும் அவர் முதல்வராக பொறுப்பேற்ற போது தமிழக அரசின் வரவு – செலவுத் திட்டத்தின் மொத்தத் தொகை ரூ. 47.18கோடி மட்டுமே. அவர் பதவி விலகிய போது வரவு – செலவுத் திட்டத்தின் மொத்தத் தொகை ரூ. 121.81 கோடி மட்டுமே. இந்த சிறிய தொகையைக் கொண்டு பெரும் சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார். இப்போது தமிழக அரசின் மொத்த வரவு – செலவுத் திட்டத் தொகை சுமார் ரூ. 2இலட்சம் கோடிகளாகும். ஆனாலும், காமராசரின் சாதனையை மிஞ்ச முடியவில்லை.
1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் நாளில் அவராகவே விரும்பிப் பதவியைத் துறந்து, கட்சிப் பணியில் ஈடுபட முன்வந்தபோது தலைமையமைச்சர் நேரு வியந்து போனார். காமராசரின் வழியைப் பின்பற்றி தாமும் பதவி விலகத் தீர்மானித்தார். ஆனால், காங்கிரசுச் செயற்குழு நேருவின் பதவி விலகலை ஏற்க மறுத்தது. காமராசர் காட்டிய வழியில் மேலும் பல முதலமைச்சர்களும் மத்திய அமைச்சர்களும் பதவிகளைத் துறந்தார்கள்.
காமராசரின் தொண்டு தமிழ்நாட்டிற்கு மட்டுமன்று, இந்தியா முழுமைக்குமே தேவை என்பதை அனைவரும் உணர்ந்தனர். அதன் விளைவாக, காமராசர் புவனேசுவரம் காங்கிரசு மாநாட்டில் அகில இந்தியக் காங்கிரசின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவர் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, காக்கும் கரங்களில் நாட்டை ஒப்படைத்துவிட்டோம் என்ற மனநிறைவுடன் நேருவும் மறைந்தார்.
இமயம் போன்ற தலைவர் நேருவின் மறைவுக்குப் பிறகு வாரிசு உரிமைப் போரில் இந்தியா சிதறுண்டு போகும், சனநாயகம் சீரழியும், சர்வாதிகாரம் தலைதூக்கும் எனப் பலர் ஆருடம் கூறியதுண்டு. ஆனால் அவ்வளவையும் பொய்யாக்கி நேருவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரியையும் அவரது திடீர் மறைவுக்குப் பிறகு இந்திராகாந்தியையும் சனநாயக முறையில் பிரதமர்களாகத் தேர்ந்தெடுக்க வழிவகுத்த பெருமை காமராசருக்கு மட்டுமே உண்டு. இந்தியாவின் முதலாவது பிரதமரான சவகர்லால் நேருவை காந்தியடிகள் தேர்ந்தெடுத்தார். நேருவுக்கு அடுத்த இரு பிரதமர்களைக் காலா காந்தியான காமராசர் தேர்ந்தெடுத்தார்.
இதைக் கண்டு உலகம் வியந்தது. பாமரன் போலக் காட்சி தரும் இந்த எளிய மனிதரிடம் இராசதந்திரமும் எஃகு போன்ற மனஉறுதியும் குடிகொண்டிருப்பதைப் பார்த்து அனைவருமே திகைத்துப் போனார்கள். உலக வல்லரசுகள் அவரைப் பற்றி அறிவதில் நாட்டம் கொண்டன. நேருவை மட்டுமே அறிந்திருந்த உலகம், அவருக்குப் பின் இந்தியாவை வழி நடத்திச் சென்ற மாபெரும் தலைவர் காமராசரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள வேண்டுமென்று துடித்தது இயல்பானதேயாகும். சோவியத் நாடு, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசுகள் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அழைப்பதில் போட்டியிட்டன. அவரும் அந்த அழைப்பினை ஏற்று சோவியத் நாடு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே சென்று வந்தார்.
உலகமறிந்த ஒரு தலைவராக உயர்ந்த நிலையில் 1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் சறுக்கல் ஏற்பட்டது. சோசலிசத்திற்கு எதிரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சக்திகள் கைகோர்த்து இதற்குப் பின்னணியில் நின்றன. இந்தியாவின் பிரதமர் பதவியிலிருந்து மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் பதவி வரை அவரால் முடிசூட்டப்பட்டவர்கள் ஏராளம். King Maker எனப் பாராட்டப்பட்ட காமராசர், விருதுநகரில் ஏற்பட்ட சறுக்கலின் விளைவாக மனம் தளர்ந்துவிடவில்லை. ‘மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன்’ என்று சொல்லக்கூடிய சனநாயகப் பேருள்ளம் அவருக்கு இருந்தது. வேறு யாராக இருந்திருந்தாலும் இத்தகைய சரிவு ஏற்பட்டபோது மனமுடைந்து அரசியல் வாழ்வையே துறந்திருப்பார்கள்.
தமிழ்நாடு காங்கிரசுத் தலைவர் பதவி, தமிழக முதலமைச்சர் பதவி, அகில இந்தியக் காங்கிரசுத் தலைவர் பதவி ஆகியவற்றை அவர் ஒருபோதும் நாடிச் செல்லவில்லை. அப்பதவிகள் அவரைத் தேடி வந்து பெருமைப் பெற்றன. இன்னும் சில ஆண்டுகள் பதவியில் அவர் நீடிக்கவேண்டும் என மக்களும், பல தலைவர்களும் வேண்டியபோது தானாகப் பதவியைத் துறந்து வெளியேறும் தன்னலமற்றத் துறவியாகத் திகழ்ந்தார். தலைமையமைச்சர் பதவி அவரைத் தேடி வந்தபோதும்கூட ஏற்க மறுத்தவர் அவர்.
இந்த மாபெரும் தலைவரின் நிழலில் அரசியல் குருகுலவாசம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது நான் பெற்ற பெரும்பேறாகும். அவரோடு மிக நெருங்கிப் பழகிய அந்த நாட்கள் மறக்க முடியாதவை. அவரது உயர்ந்த பண்பாடுகளையும், சிறந்த எண்ண ஓட்டங்களையும் அறிந்துகொள்ள நேர்ந்தபோதெல்லாம் நான் சிலிர்த்துப் போயிருக்கிறேன். அத்தகைய நிகழ்ச்சிகளை இந்நூலில் பதிவு செய்துள்ளேன்.
இந்நூல் அவரது வாழ்க்கை வரலாற்று நூல் அன்று. பல நண்பர்கள் பல கோணங்களில் அவரது வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதி மிகச்சிறந்த நூல்களைப் படைத்துள்ளனர். அவரின் அன்பிற்குரிய தொண்டனாக நான் பணியாற்றிய போது நேரில் கண்டு கேட்டுணர்ந்த நிகழ்ச்சிகளை இந்நூலில் பதவி தந்துள்ளேன்.
கானினும் பெரியர் ஓசைக் கடலினும் பெரியர் சீர்த்தி
வானினும் பெரியர் மேனி மலையினும் பெரியர் மாதோ. (சுந்தரகாண்டம் -758)
என கம்பன் தனது காவியத்தில் பாடியதைப் போல பெருந்தலைவரின் பேருருவமாண்பினை என் போன்ற எளியவனால் முழுமையாக எடுத்துரைக்க இயலாது. எனினும், விடுதலைப் போராட்டக் காலத்தில் அவரோடு தோள்கொடுத்துத் துணை நின்று, சிறைகளிலும் உடனிருந்த தோழர்கள், முதலமைச்சராக அவர் இருந்தபோது அவரின் கீழ் பணியாற்றிய உயர் அதிகாரிகள் நட்புணர்வோடு அவரோடு பழகிய தலைச்சிறந்த எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அவர் இட்டப் பணியினைச் செய்வதற்குக் காத்துக்கிடந்த செல்வர்கள் போன்ற பலர் என்னிடம் பகிர்ந்துகொண்ட நினைவுகளையும் இந்நூலில் பதிவு செய்து காலம் எனக்கு இட்ட வரலாற்றுக் கடமையினை ஓரளவு நிறைவு செய்துள்ளேன்.
(‘பெருந்தலைவரின் நிழலில்’ என்னும் தலைப்பில் பழ. நெடுமாறன் எழுதிய நூலின் முன்னுரை)
























