”மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்த, அந்த ஒப்பந்தத்தின் பயனாக இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரித்த, மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படக் கூடாது என்ற கொள்கையை வரித்த இந்த அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி. – தே .ம.ச.ஆட்சியாளர்கள் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எந்தளவுக்கு ஆர்வம் காட்டுவார்கள்?”
கே.பாலா
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத்தேர்தல், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் என 3 தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்து முடிந்துள்ள நிலையில் பல வருடங்களாக நடத்தப்படாதுள்ள நாட்டிலுள்ள 9 மாகாணசபைகளுக்கான தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டுமென்ற வலியுறுத்தல்கள் அண்மைய நாட்களாக மேலெழுந்து வருகின்றன.
இலங்கையில் தமிழர்களின் தனி நாடு கோரிய ஆயுதப் போராட்டமே மாகாண சபை ஆட்சி முறைக்கு வித்திட்டது. இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29 ஆம் திகதி கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய இலக்கு இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகவே இருந்தது. இதன் படி 1987 நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.
1988 பெப்ரவரி 3 ஆம் திகதி இலங்கையில் மத்திய மாகாணம் , கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம்,வடக்கு மாகாணம், வடமேற்கு மாகாணம், சப்ரகமுவ மாகாணம், தென் மாகாணம், ஊவா மாகாணம், மேல் மாகாணம் என 9 மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. மாகாணசபைகளுக்கான முதலாவது தேர்தல் 1988 ஏப்ரல் 28 ஆம் திகதி வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களுக்கு இடம்பெற்றது. இதன் தொடர்ச்சியாக 1988 ஜூன் 2 ஆம் திகதி மத்திய, தென், மற்றும் மேல் மாகாணங்களுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதன்பின்னர் இணைந்த வடக்கு,கிழக்கு மாகாணத்திற்கான தேர்தல் 1988 நவம்பர் 19 ஆம் திகதி நடத்தப்பட்டது.
மாகாண சபையின் பதவிக் காலம் 5 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 1993 ஆம் ஆண்டில் இரண்டாவது மாகாணசபைத்தேர்தலும் 2004 ஆம் ஆண்டில் மூன்றாவது மாகாணசபைத் தேர்தலும் முதலில் ஒரே தடவையில் நடத்தப்பட்ட நிலையில் பின்னர் தேர்தல்கள் பிரித்து பிரித்து நடத்தப்பட்டதால் 2008 -2009 ஆம் ஆண்டுகளில் நான்காவது மாகாணசபைத் தேர்தலும் 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்த மாகாண சபைத்தேர்தல்களும் இடம்பெற்றன .
இறுதியாக இடம்பெற்ற மாகாணசபைக்கான தேர்தல்களை பார்ப்போமானால் 27-06-2012 இல் கிழக்கு, சப்ரகமுவ, மற்றும் வடமத்தி ஆகிய மூன்று மாகாணசபைகளும் கலைக்கப்பட்ட நிலையில் 08-09-2012 இல் இவற்றுக்கு தேர்தல் நடைபெற்றது . மூன்று மாகாணங்களிலும் 108 பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்காக நடத்தப்பட்ட இத்தேர்தலில் மூன்று மாகாணங்களில் சப்ரகமுவ, மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. கிழக்கு மாகாணத்தில் மொத்தமுள்ள 37 உறுப்பினர்களில் இம்முன்னணி 14 உறுப்பினர்களுடன் முதலாவதாக வந்தது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 உறுப்பினர்களுடன் இரண்டாவதாக வந்தது. எனினும் கிழக்கு மாகாணத்தில் 7 இடங்களைக் கைப்பற்றிய முஸ்லிம் காங்கிரஸ் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
மத்திய, மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாண சபைகளும் 2012 ஜூ லை மாதத்தில் கலைக்கப்பட்ட நிலையில் 21-09 2013 இல் தேர்தல் நடைபெற்றது. வடக்கு மாகாண சபைக்கும் இதே தினத்தில் முதற் தடவையாகத் தேர்தல் இடம்பெற்றது. 3 மாகாணசபைகளுக்கும் 148 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் வடக்கிலிருந்து 38 உறுப்பினர்களும், மத்திய மாகாணத்திலிருந்து 58 பேரும், வடமேல் மாகாணத்திலிருந்து 52 பேரும் தெரிவாகினர். வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்தது.மத்திய, வடமேல்மாகாண சபைகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி கைப்பற்றியது.
மேற்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டு மாகாண சபைகளும் 2014 ஜனவரி மாதத்தில் கலைக்கப்பட்ட நிலையில் 2014 மார்ச் 29 இல் தேர்தல் நடைபெற்றது. 159 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தெற்கு, மற்றும் மேற்கு மாகாண சபைகளைக் கைப்பற்றியது. ஊவா மாகாணசபை 2014 ஜூலை 11 இல் கலைக்கப்பட்டநிலையில் 2014 செப்டம்பர் 20 இல் தேர்தல் நடைபெற்றது. 34 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 19 ஆசனங்களை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இவ்வாறான நிலையில் மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்த போதும் இதுவரையில் இந்த மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை. மாகாணசபைத் தேர்தல்கள் சட்டத்தின் பத்தாம் சரத்து மற்றும் அரசமைப்பின் 154 ஈ உறுப்புரை ஆகியனவற்றின்படி,மாகாண சபையொன்றின் பதவிக்காலம் நிறைவடைந்து, அந்த மாகாணசபை கலைந்த நாளிலிருந்து, நான்கு வார காலத்துக்குள், குறித்த மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவித்தலை, தேர்தல் ஆணைக்குழு விடுக்க வேண்டும். ஆனால், மாகாண சபைகள் கலைந்து பல வருடங்களுக்கு மேலாகியும் இன்றுவரை மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவித்தல் விடுக்கப்படவில்லை
இவ்வாறு எந்தவொரு மாகாண சபைகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்படாத நிலையில் மாகாணசபைகள் ஆளுநர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன. இதனைப் பயன் படுத்தி ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் தமக்கு விசுவாசிகளான ஆளுநர்களை ஒவ்வொரு மாகாணங்களுக்கும் நியமித்து தமது நோக்கங்கள், தேவைகள், திட்டங்கள், இலக்குகளை இலகுவாக அடைந்து கொள்ளும் நிலையே கடந்த பல வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வருகின்றன.
இதற்கிடையில் கடந்த கோத்தபாய ராஜபக்ச அரசிலும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியதையடுத்து கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டு அமைச்சரவை கூட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான யோசனை, அப்போதைய பொதுநிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனால் முன்வைக்கப்பட்டு ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.
இவ்வாறு ஒருபுறம் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் கோத்தபாய ராஜபக்ச அரசு அக்கறை கொண்டுள்ளதாகக் காட்டிக்கொண்டு மறுபுறம் மாகாணசபைகளுக்கான மூலாதாரமான 13 ஆவது திருத்தம் ஒழிக்கப்படவேண்டும், மாகாணசபைக்கான தேர்தல்கள் நடத்தப்படக்கூடாதென்ற இனவாதக் கருத்துக்களையும் கோத்தபாய அரசு தட்டி எழுப்பிவிட்டது.மாகாண சபைகள் வெள்ளை யானைகளாக இருப்பதாக அரச தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டனர். கோத்தபாய அரசின் அமைச்சரவைக் கூட்டத்திலும் அப்போதைய முக்கிய அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோர் மாகாணசபைகளுக்கான தேர்தல்கலை நடத்த கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன் மாகாணசபை முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர் .
புதிய அரசியலமைப்பை கொண்டு வருவோம், மாகாணசபை முறைமையை ஒழிப்போம் என்று வாக்குறுதி கொடுத்துத்தான் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத்தேர்தலில் வெற்றி பெற்றோம். எனவே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தி [சிங்கள] மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நாம் மீறக்கூடாது எனவும் அவர்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கு சுட்டிக்காட்டினர். இந் நிலையில் கோத்தபாய ராஜபக்ச அரசு மக்கள் போராட்டத்தினால் விரட்டப்பட்டதனால் மாகாணசபைகளுக்கான தேர்தல் முயற்சிகளும் காணாமல் போய்விட்டன.
இவ்வாறான நிலையில் மீண்டும் தற்போது மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த வேண்டுமென்ற வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. மாகாணசபை முறைமையை முற்றாக இல்லாமல் செய்வதற்கே சிங்கள தேசியக் கட்சிகள் விரும்புவதாகச் சுட்டிக்காட்டிய தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதற்கு இடமளிக்காமல் மாகாண சபைத்தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கத் தொடங்கியுள்ளன. அதுமாத்திரமன்றி தற்போது தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மாகாணசபைத்தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பான தனிநபர் பிரேரணையானது ஏற்கனவே 2023 இல் தேசிய மக்கள் சக்தி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட அதே தனிநபர் பிரேரணை தான் எனச் சுட்டிக்காட்டிய அவர்கள், ஆகவே சாணக்கியனின் தனிநபர் பிரேரணை குறித்து ஆராயவேண்டும் என காலத்தை இழுத்தடிக்காமல் அரசாங்கம் அதனை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன .
இவ்வாறான நிலையில்தான் மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாகாணசபைத்தேர்தல் விவகாரத்தில் சட்ட ரீதியான சில தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளது. அதன்படி அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் 2017 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட மாகாணசபைத்தேர்தல் திருத்தச்சட்டமூலம் மற்றும் மாகாணசபைத்தேர்தல் சட்டத்திருத்தம் தொடர்பில் 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் தமிழரசுக்கட்சியின் எம்.பி. சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை என்பன தொடர்பில் விசேட அவதானம்செலுத்தி ஆராய்ந்து வருகிறோம். இதுகுறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என தற்போதைய மாகாணசபைகள், உள்ளுராட்சி சபைகள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
ஆனால் மாகாணசபைத்தேர்தல் சட்டத்திருத்தம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு தான் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை, பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் விளைவாக வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை .இருப்பினும் 2023 ஆம் ஆண்டில் மீண்டும் அதனையே தனிநபர் பிரேரணையாக சமர்ப்பித்ததாகவும் கூறிய சுமந்திரன்,’2023 இல் சமர்ப்பித்த மாகாணசபைத்தேர்தல் சட்டத்திருத்தம் குறித்த தனிநபர் பிரேரணை முதலாம் வாசிப்பைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. அதனையடுத்து உயர் நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் அப்பிரேரணை தேசிய மக்கள் சக்தி உள்ளடங்கலாக சகல தரப்பினரதும் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் மூன்றாம் வாசிப்பு நிகழ்ச்சிநிரலில் இருந்து நீக்கப்பட்டதன் விளைவாகவே அப்போதும் அப்பிரேரணையை நிறைவேற்றமுடியவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் அந்தப் பிரேரணையே தற்போது இரா.சாணக்கியனால் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அதுகுறித்து மீண்டும் புதிதாக ஆராயவேண்டிய அவசியமில்லை. மாறாக அதனை உடனடியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றார்.
ஆனால் இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்ட, அந்த ஒப்பந்தத்தின் பயனாக இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பை நீதிமன்றத்தை நாடி துண்டித்த ,மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது என்ற கொள்கையை வரித்துக்கொண்ட இந்த அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சியாளர்கள் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எந்தளவுக்கு ஆர்வம் காட்டுவார்கள் அல்லது நடவடிக்கை எடுப்பார்கள் என்பதே இன்றுள்ள கேள்வி. மைத்திரி-ரணில் நல்லாட்சியில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த நடவடிக்கைகள் எடுக்க முற்பட்டபோது எதிர்த்தவர்கள், கோத்தபாய ஆட்சியில் மாகாணசபைகளுக்கு தேர்தலுக்கான முயற்சிகள் என்ற நாடகம் நடத்தப்பட்டபோதுகூட அந்த நாடகத்தையே முழு மூச்சாக எதிர்த்தவர்கள் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருக்கும்போது அதனை நடத்த விரும்புவார்களா? அல்லது தமது இனவாத அரசியலை முன்னெடுக்க சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கும் விமல் வீரவன்ச,உதய கம்மன்பில , சரத் வீரசேகர மற்றும் மகாசங்கத்தினர் தான் விடுவார்களா.? மாகாணசபைகளுக்கான தேர்தலை வைத்தே அநுரகுமார அரசுக்கு அவர்கள் புதைகுழி தோண்டி விடுவார்கள்.
அதுமட்டுமல்ல ஜனாதிபதித்தேர்தலிலும் பாராளுமன்றத்தேர்தலிலும் பெரு வெற்றி பெற்ற அநுரகுமார தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தியினர் சில மாதங்களில் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மக்களின் ஆதரவை கணிசமானளவு இழந்து தோல்விப் பாதையில் சென்றுகொண்டிருக்கும் நிலையில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தி மீண்டுமொரு படுதோல்வியை சந்திக்க விரும்பமாட்டார்கள்.ஆகவே மாகாண சபைக்களுக்கான தேர்தல் சட்டத் திருத்தத்தை ”துருப்பு சீட்டாக” பயன்படுத்தி மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாது இழுத்தடிக்கவே முடிந்தளவுக்கு முயற்சிப்பார்கள். எனவே தற்போதைய இலங்கையின் அரசியல் களத்தில் ”மாகாணசபைகளுக்கான தேர்தல் நடக்கும்,,, ஆனால் நடக்காது ”என்ற நிலையே உள்ளது.
























