திருமதி. வசந்தா நடராசன் B.A.,
416 332 0269
“நோயும் நொடியும் பேயும் பிணியும் நீக்கும் ராமஜெயம்
நோக்கம் இல்லா வாழ்வை கூட மாற்றும் ராமஜெயம்
தீயும் உன்னைத் தீண்டும்போது சொல்வாய் ராமஜெயம்
தேகம் எங்கும் பன்னீர் தூவி காக்கும் ராமஜெயம்'”
பூவுலகில் பண்பாடே வடிவெடுத்துள்ள இலக்கியங்களுள், இராமாயணம் தலைசிறந்ததாகத் திகழ்கின்றது. இது உருவெடுத்தது இந்தியாவில் எனினும், மானுடவர்க்கம் முழுவதின் மனதைக் கவரவல்லதாகக் காணப்படுகின்றது. நலம், கேடு இரண்டையும் உள்ளடக்கியதே வாழ்க்கை. இவ்விரண்டிற்கும்மிடையேயான போராட்டமே இராமயணமெங்கும் பரவிக்கிடக்கின்றது. எதிரி இல்லாத ஜெந்து உலகிலே இல்லை. எதிரியைச் சமாளிப்பது பலகோணங்களிலும் வாழ்க்கைப் பிரச்சினையாகவே இருக்கின்றது. அதேவேளை எதிரியைச் சமாளிப்பது வாழ்க்கைப் பயிற்சியாகவும் காணப்படுகின்றது. வலிவு படைத்ததே வாழ்க்குரிய தகுதியாகக் காணப்படுகின்றது. வலிவைப் பெறுவதும் எதிரியைச் சமாளிப்பதும் இராமாயணம் புகட்டும் பாடங்கள்.
அறநெறி காப்பவனுக்கு வாழ்க்கையில் சோதனைகள் அதிகம். இவற்றை தர்மநெறியில் நின்று சமாளிப்பவன் வெற்றியடைகின்றான். இதுவும் இராமாயணம் புகட்டும் பாடம். காமமும் பொருளாசையும் மனிதனைத் தீயவழியிலே செல்லத் தூண்டுகின்றன. இவற்றுள் காமத்தை அடிப்படையாகக் கொண்டு அழிந்தவனின் வாழ்க்கையை இராமாயணம் வெளிக்காட்டுகின்றது.
காலச்சக்கரம் சதா சுழன்றுகொண்டிருக்கின்றது. அதில் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கின்றன. இப்பொழுது நடப்பது கலியுகம். பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் திரேதா யுகத்தில் இராமாயணம் நிகழ்ந்தது. இதன் வரலாற்றையே வால்மீகி, இராமாயணமாக எடுத்துரைத்தார்.
அழிவற்ற இந்நூல் ஸ்ரீராமன் என்னும் மூர்த்தியை நடுநாயகமாகக் கொண்டுள்ளது. ஆகையினால் இது இராமாயணம் எனப் பெயர் பெற்றது. ராமசரிதம் என்பது இதன்பொருள்.
இளைஞர்களுக்கும், முதியோர்களுக்கும் உலக வாழ்வில் ஈடுபட்டுள்ளோருக்கும், ஆத்மஞானத்தில் திளைத்திருப்போருக்கும் ஸ்ரீராமன் முன்மாதிரியாகத் திகழ்கின்றான். அறநெறியே வடிவெடுத்தவன். எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அறத்தைக் கடைப்பிடிப்பவனாகக் காணப்படுகின்றான். இராமன் ஏகபத்தினிவிரதம் பூண்டிருந்தான். இராமனும் சீதையும் நெடுங்காலம் தவத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இராமனுக்கேற்ற கற்பு வாய்ந்த மனைவி சீதை. சீதை என்னும் சொல் படைசால் எனப் பொருள்படும். இச்சிறுமிக்குப் பெற்றோர் இல்லை. பூமகளின் செல்வியாக படைசாலில் இவள் கண்டெடுக்கப்பட்டு, ஜனக மகாராஜாவினால் வளர்க்கப்பட்டாள். சீதை புனிதத்திற்கும், பெண்மைக்கும் உறைவிடமாக உள்ளாள். சகிப்புத்தன்மைகாரணமாக அவள் தனக்கு ஏற்பட்ட மலைபோல்வந்த துன்பங்களை வென்றவளாக விளங்கினாள். பெண்மையின் பண்புகளுக்குச் சிகரமாகச் சீதை காணப்பட்டாள்.
இராமன் பதின்நான்கு வருடங்கள் காடேகவேண்டும் என்ற தசரதன் பணிப்பிற்கேற்ப, இராமனுடன் லக்ஷ்மணனும், சீதையும் செல்கின்றார்கள். பல ஆச்சிரமங்களைத் தரிசித்து இறுதியில் பஞ்சவடிக்குப் போய் சேர்கிறார்கள். விதியின்பயனாக பொய்மானிடம் மனதைப் பறிகொடுத்த சீதை, அதனைப்பிடித்துத்தரும்படி இராமனிடம் வேண்ட, இராமன் அதன் பின்னால் சென்றதும், அதனைத் தொடர்ந்து இலக்குமணன் சென்றதும் விதிவசத்தால் ஏற்பட்டவை.
இந்நிலையில் இராவணனின் தங்கை சூர்ப்பனகைக்கு ஏற்பட்ட அவமானமும், சீதையின் அழகும், இராவணன் சீதையைக் கவரக் காரணமாயிற்று. சீதையைக் கவர்ந்து சென்ற இலங்கை வேந்தனாகிய இராவணன், சீதையை அசோகவனத்திலே சிறைவைக்கின்றான். சீதையைக் கவர இராவணன்கூறிய சொற்களோ, அவனுடைய ஆடம்பரவ வாழ்க்கை வசதிகளோ சீதை மனம்மாற உதவவில்லை. இந்நிலையிலே என்றோ ஒருநாள் இராமன் தன்னைத் தேடி வருவான் என்ற உணர்வோடு பத்தினிவிரதம் காத்து, அசோகவனத்திலே சீதை சிறை இருந்தாள்.
இவ்வாறான நிலையிலே இராமபக்த அனுமானால் சீதையின் இருப்பிடம் காணப்பட்டு, சீதையை மீட்க இராம இராவணயுத்தம் நடைபெறுகின்றது. வரலாறுகளில் நடப்பதுபோல இராவணன் தம்பி விபீடணன், இராமனுடன் இணைந்து கொள்கின்றான். பலநாள் நடைபெற்ற யுத்தத்தின்பின் இராவணனும், அவனது வம்சமும் இராமனால் அடியோடு அழிக்கப்பட்டு இலங்கை இராச்சியம் விபீடணனிடம் கொடுக்கப்படுகின்றது.
இவ்வாறான சம்பவங்களின் பின் சீதை சிறைமீட்கப்பட்டு இராமனின் சந்நிதானத்திற்கு அழைத்துச் செல்கின்றார்கள். எந்த மாதரசியால் யுத்தம் ஏற்பட்டதோ, அந்த யுத்தத்தின் வெற்றி, அந்த மாதரசியைமீட்டபின்பும் இராமன் முகத்திலே காணப்படவில்லை. இதன்பின் நிகழ்ந்த நிகழ்வுகளே சீதாபிராட்டியாரைத் தெய்வநிலைக்கு உயர்த்தியது. இலங்கையிலே நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்ற சீதாஎலிய என்ற இடத்திலே சீதையம்மன் என்ற பெயரில் கோயில் எழுப்பி, மக்கள் அவரைத் தெய்வமாக வழிபட வகை செய்தது.
வளரும்
























