அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார். அதன்பின் வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக அறிவித்த அவர், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு வருகிற 1-ந்தேதி அமலுக்கு வரும். இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் டிரம்ப் தனது ஸ்காட்லாந்து பயணத்தை முடித்து கொண்டு அமெரிக்காவுக்கு விமானத்தில் திரும்பியபோது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த வர்த்தக ஒப்பந்தத்துக்கு முடிவு எட்டப்படவில்லை என்றால் 20 முதல் 25 சதவீதம் வரை இறக்குமதி வரியை இந்தியா எதிர்கொள்ளக்கூடும். இந்தியா நல்ல நண்பராக இருந்து வந்தாலும், வேறு எந்த நாடும் வசூலிக்காத அளவிற்கு அமெரிக்காவிடம் வரி வசூலித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
























