திருமதி. வசந்தா நடராசன் B.A.,
416 332 0269
“அன்னை தந்தை இல்லா யார்க்கும் அன்னை ராமஜெயம்
கண்ணை இமைபோல் காவல் செய்யும் வேதம் ராமஜெயம்
அல்லும்பகலும் துன்பம் வந்தால் தீர்க்கும் ராமஜெயம்
அங்கும் இங்கும் துள்ளும் மனதை வெல்லும் ராமஜெயம்”
லௌகீக வாழ்க்கயிைன் அத்தனை வாழ்க்கைத் தத்துவங்களையும், எடுத்தியம்புபவையாக இதிகாசங்கள் விளங்கியுள்ளன. பெருங்கதைகளும், அவற்றுள் உபகதைகளுமாக இதிகாசங்களின் பாத்திரப் படைப்புகள் மேலோங்கிக் காணப்படுகின்றன. இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலே படைக்கப்பட்ட சீதையும், திரௌபதையும் காலத்தை வென்ற பெண்பாத்திரங்களாகப் படைக்கபட்டனர். அவ்வாறே சிலப்பதிகாரத்திலே படைக்கப்பட்ட பெண்பாத்திரமான கண்ணகியும், மக்கள் மனதிலே நீங்கா இடம்பெற்றார். கற்பின் தெய்வங்களாக விளங்கிய சீதை, திரௌபதை, கண்ணகி ஆகியோருக்கு கோயில் எழுப்பி, தெய்வங்களாகப் போற்றுகின்றனர். இவர்கள் வாழுங்காலத்தில் எல்லையற்ற இல்னல்களை அனுபவித்து வெற்றிகொண்டவர்களாகக் காணப்பட்டனர்.
இராமஇராவணயுத்தத்தின் பின்னர், சீதையின் வாழ்விலே மீண்டும் புயல்விசியது. ராமனைக்காணும் ஆவலோடு சென்ற சீதையை, பிரிவின் துயரில் இருந்த இராமன் அதனை வெளிக்காட்டவில்லை. மாறாக, சுக்கிரீவனோடும், விபீஷணனோடும் நான் உறவு கொண்டது ராவண சம்காரத்தின் பொருட்டேயாகும். காமவெறிபிடித்தவனைக் கொல்வது என் கடமையாக இருந்தது. அத்தகைய தண்டனை தர்மத்தின்பொருட்டு இராவணனுக்குக் கொடுக்கப்பட்டது. சீதையே, அதே தர்மத்தின்பொருட்டு உன்மீதும் நடவடிக்கை எடுக்கப்போகிறேன். இராவணன் உன்னைத் தூக்கிச் சென்றான். பலமாதங்களாக அவன் தனது இராச்சியத்தில் உன்னை அடைத்து வைத்திருந்தான். உன்னுடைய புனிதத்தன்மையை உலகறிய நிரூபித்தபின்பே உன்னைச் சேர்வேன்” என்றுரைத்தான்.
இராமனின் கடுஞ்சொற்கள் சீதையை, வீரம் ததும்பும் விவேக மூர்த்தியாக உருவெடுக்கச் செய்தது. நான் தூய சீதாபிராட்டி. இந்தச் சடலத்தை நான் தீக்கு இரையாக்குவேன். என்னுடைய நிஐ சொரூபமாகிய ஆத்மாவை பரமாத்மாவிடம் சேர்ப்பேன். லக்ஷ்மணா எரிகின்ற அக்கினியை எனக்காக ஆயத்தப்படுத்து” என்று வேண்டினாள். பின்னர், அமைதியோடு இராமனை வலம்வந்த சீதாப்பிராட்டி, இராமனை உபாசித்தவண்ணம் பெருநெருப்பாக எரிந்துகொண்டிருந்த நெருப்பினுள், நிறைபிறழாத மாதரசியாக நடந்து சென்று மறைந்தாள்.
அப்பொழுது அக்னிபகவான் “சீதாதேவி தூய்மைக்கு உறைவிடம். அந்தத் தூய்மையைத் தகிக்க நான் வல்லவன் அல்லேன்” என அசரீரி ஒலித்தது. மேனி அமைப்பிலும், புதுப்பிக்கப்படவளாக, பிரகாசமும்
பிரகாசமும் அமைதியும் வாய்க்கப்பெற்றவளாக தீக்குண்டத்தினின்று சீதாதேவி வெளிப்பட்டாள். உயிர்கள் அனைத்திற்கும் அவள் இரக்கம் காட்டுபவள். அவளை மோகித்தவனுக்கும், சோதித்தவனுக்கு இரக்கம் காட்டும் கருணாகரத் தெய்வமாக சீதை போற்றப்படுகின்றாள். இலக்குமிதேவியின் அவதாரமான சீதைக்கு, பாரதநாட்டிலும், ஈழத்திலும் கோயில் எடுத்து வணங்கி வருகின்றனர்.
சீதாஎலிய சீதையம்மன் ஆலயம் காலத்தால் முந்தியதெனக் கருதப்படுகின்றது. இராவணேஸ்வரனின் ஆட்சிக்குப் பின் இங்கு இவ்வாலயம் எழுப்பப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர் கருத்தாகும். இவ்வாலயம் 1998 ஆம் ஆண்டு பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. தென்னிந்திய கட்டிடக் கலைஞர்களால் ஆகமமுறைப்படி, வடநாட்டுக்கோயில் அமைப்புடன் கட்டப்பட்டு கும்பாபிஷேகப்பெருவிழா நிறைவேற்றப்பட்டது. இவ்வாலயம், இயற்கையாகப் பாய்ந்துவரும் இயற்கையாற்றுத் தீருத்தத்தோடு, காலத்தால் அழியாத தொன்மையான மரவகைகளும், செடிகொடிகளும் சூழப்பட்ட இயற்கை எழில் கொண்ட சூழலிலே அமைந்துள்ளது.
சரித்திரப்பிரசித்திபெற்ற இவ்வாலயத்திலே சீதையம்மன், இராமர், இலக்குமணன், ஆகியோர் கற்சிலையாகக் காட்சி கொடுத்தனர். பின்னாளில் இச்சிலைகள் வடநாட்டுப்பாணியில் பளிங்குப்படிவமாகக் காட்சியளிக்கின்றன. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சீதையம்மன் ஆலயத்திலே, ஆஞ்சநேயருக்கான தனிக்கோயில் காணப்படுகின்றது.
சீதையம்மன் ஆலய கோபுரத்தில் திருமாலின் அவதாரங்கள் வைணவகோயிலின் அமைப்பையொத்து, அவயசுத்தியுடன் விக்கிரகங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. அத்தோடு இங்குள்ள தூண்கள்தோறும் இராமாயணக்காட்சிகள் அழகிய சிற்பங்களாகச் காட்சியளிக்கின்றன. சுவரின் மேற்பகுதியிலே இராமாயணக்காட்சிகள் பல ஓவியங்களாக மனதைக்கவரும்வகையில் தீட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, இராவணன் சீதையைத் தூக்கி வருதல், சடாயு இறகுவெட்டப்பட்ட நிலையில் காணப்படுதல், இலங்கையில் அசோகவனத்தில் அரக்கியர் மத்தியில் சீதை இருந்தமை, போன்ற ஓவியங்கள் இராமாயண காலத்தையும், அக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களையும் நினைவூட்டுபவையாக அமைந்துள்ளன. சக்திவழிபாட்டின் அம்சமாகப் போற்றப்படும் சீதையம்மன் வழிபாடு, ஈழவரலாற்றோடு பின்னிப்பிணைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மையுண் டாகப் பெறின்”
தொடரும்
























