டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வா்மா பதவி வகித்தபோது அவரது அரசு இல்லத்தில் கடந்த மாா்ச் 14-ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட 3 நீதிபதிகள் அடங்கிய குழு யஷ்வந்த் வா்மா வீட்டில் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமா்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்து அதிபர் திரவுபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினாா். இந்த சா்ச்சையை தொடா்ந்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவியில் இருந்து நீக்க 208 எம்.பி.க்கள் சாா்பில் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் சமா்ப்பிக்கப்பட்டது. இதற்கிடையே, உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை செல்லுபடியாகாது என்று அறிவித்து தன்னை பதவி நீக்கம் செய்வதற்கான பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, ஏ.ஜி.மாஷி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில் நீதிபதி யஷ்வந்த் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அப்போதைய தலைமை நீதிபதியும் விசாரணைக் குழுவும் செயல்முறையை கவனமாகப் பின்பற்றினர். புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவேற்றுவது அவசியமில்லை என்று கருதப்பட்டது, குறிப்பாக அந்த நேரத்தில் எந்த ஆட்சேபனையும் மனுதாரரால் எழுப்பப்படவில்லை. அதிபர், பிரதமருக்கு விசாரணை அறிக்கையை அனுப்புவது அரசியலமைப்புக்கு விரோதமானது அல்ல. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
























