கே. ஆனந்தநாதன்- கனடா
கவியரசு கண்ணதாசன் “கவிஞன் நான் ஓர் காலக்கணிதம்” என்னும் அவரது தனிப்பாடல்மூலம் தனது வாழ்வைக் கூறுகின்றார். ஓர் அழகியல் மெய்யியல் நோக்கு.
அண்மையில் ஜுன் 24, 2025இல் தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் கவியரசு கண்ணதாசனின் 98வது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறது. இத்தனிக்கவிதை அவரது வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகிறது. அதாவது ‘தான்’ எப்படிப்பட்டவர் என்பதை இத்தனிக்கவிதையில் தெளிவுபடுத்துகிறார். அதுபற்றிய தெளிவான தரிசனத்தைப் பெறுவதே இக்கட்டுரையின் நோக்காகும். கவிதையை முதலில் முழுமையாகப் பார்த்து பின்பு வரிக்குவரி அவர்தரும் விளக்கத்தை விபரமாகப் பார்ப்போம். இக்கட்டுரை அழகியல் மெய்யியல் நோக்கில் அவரது கவிதையைப் பார்க்க முயல்கின்றது.
‘கவிஞன் யான் ஓர் காலக்கணிதம்’
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்
இவை சரி யென்றால் இயம்புவ தென்தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை
ஆக்கல் அளித்தல் அழித்தலிம் மூன்றும்
அவனும் நானுமே அறிந்தவை அறிக
செல்வர்தன் கையிற் சிறைப்பட மாட்டேன்
பதவிவா ளுக்கும் பயப்பட மாட்டேன்
பாசம் மிகுத்தேன் பற்றுதல் மிகுத்தேன்
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்
இல்லா யினெமர் இல்லந் தட்டுவேன்
வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்
பண்டோர் கம்பன் பாரதி தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது
வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுங்கள் தீர்ப்பு
கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்
மாற்றம் எனது மானிட தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்தே ஏகுமென் சாலை
தலைவர் மாறுவர் தர்பார் மாறும்
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்
கொள்வோர் கொள்க குரைப்போர் குரைக்க
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது
நானே தொடக்கம் நானே முடிவு
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்.
– கவிஞர் கண்ணதாசன்
இவ்விரண்டு கவியரசின் தனிக் கவிதைகளும் அவரது “நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு” என்னும் அழகியல் தத்துவத்தோடு தொடர்புடையவை. அதாவது அனுபவம் என்றாலென்னும் கவிதையும் கவியரசு கண்ணதாசன் தனது வாழ்வியல் அனுபவத்தைத்தான் கவிதைகளாகத் தந்தவர்.
கவியரசு கண்ணதாசன் அனுபவம் என்றால் என்ன என்பதற்கான பதில்:
“பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்துபாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப்பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்தபாரென இறைவன் பணித்தான்
அன்பெனப்படுவது என்னவெனக் கேட்டேன்
அளித்துப்பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்துபாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்துபாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப்பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்துபாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது யாதெனக் கேட்டேன்
வாடிப்பாடிரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்துபாரென இறைவன் பணித்தான்!
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவன் நீ ஏன் எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே நெருங்கிவந்து
அனுபவம் என்பதே நான்தான் என்றான்!”
கவியரசு கண்ணதாசனின் தனிக்கவிதைகள் –
மேலே குறிப்பிட்ட கவிதைகளின் விளக்கத்தைப் பின்வரும்பத்திகளில் பார்ப்போம்.
விளக்கம்/சாராம்சம்
“கவிஞன் யானோர் காலக்கணிதம்”
கருப்படுபொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!
இவை சரியென்றால் இயம்புவதென் தொழில்
இவை தவறாயின் எதிர்ப்பதென் வேலை!
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை அறிக!
“கவிஞர் யானோர் காலக்கணிதம்” என்றாலென்ன என்றால் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் அறிந்திருப்பதால் காலத்தைக் கணித்துச் சொல்லக்கூடிய ஒரு காலக்கணிதம். இவர்களைத்தான் காலக்கணிதர்கள் என்று அழைப்பர். இத்தொழில் அல்லது இக்குலத்தில் பிறந்தவர்களைத்தான் கணியன் என்று அழைப்பர். கவிஞனாக இருப்பதாலேயே ‘நான் ஓர் காலக் கணிதம்’ என்கிறார் கவியரசு கண்ணதாசன்.
கருப்பொருளை உருப்பட வைப்பேன் – என்மனதில் கருப்பொருளாகத் தோன்றிய கருத்துகளை (எண்ணக் கருத்துகளை) உருப்பொருளாக, கவிதைகளாக அல்லது பாடல்களாக கதையாக கட்டுரையாக இலக்கியமாக மாற்றித் தருபவன்.
“புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்”. புகழ்பெற்றிருப்பதனாலேயே பூமியில் இருக்கின்ற பல தெய்வங்களைப்போல நானும் ஒரு தெய்வம்.
“பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்! இவை சரியென்றால் இயம்புவதென் தொழில்” – இவை சரிஎன்று என்மனதில் தோன்றியவற்றைக் கவிகளில் எடுத்தியம்புவது என் தொழில். இவை தவறு என்று மனதிற்குத் தோன்றியவற்றை எதிர்ப்பதும் என்வேலை.
“ஆக்கல், அளித்தல், அழித்தல் இம்மூன்றும் (இறைவனும் நானும்) அவனும் யானுமே அறிந்தவை” – ஆக்கல் – படைத்தல் அளித்தல் – கொடுத்தல்/காத்தல். அழித்தல் – நீக்குதல்/ஒடுக்குதல். இறைவனுக்கும் எனக்கும்தான் இம்மூன்றும் தெரியுமென்கிறார். இம்மூன்றையும் தான் நானும் அவனும் (இறைவனும்) செய்கின்றோம். அதாவது இலக்கியங்களைப் படைக்கிறேன். படைத்தவற்றை மக்கள் இன்புறக் கொடுக்கிறேன். தீய கருத்துகளை ஓடுக்குகிறேன்.
“செல்வர்கள் கையில் சிறைப்பட மாட்டேன்!” பதவிவாளுக்கும் பயப்படமாட்டேன்! பாசம் மிகுத்தேன்! பற்றுதல் மிகுத்தேன்!” ஆசை தருவன அனைத்தம் பற்றுவேன்! உண்டாயின் பிறர் உண்ணத் தருவேன்! இல்லாயின் (எமர்) நண்பர்கள் இல்லம் தட்டுவேன். வண்டாயெழுந்து மலர்களில் அமர்வேன்! வாய்ப்புறத்தேனை ஊர்புறத் தருவேன்!” “செல்வர் தங்கையில் சிறைப்பட மாட்டேன்.” (இதன் அர்த்தம்) செல்வந்தர்களின் செல்வத்துக்கு மயங்கி அவர்களிடம் சிறைப்பட்டு அவர்களைப் புகழ்ந்து உரைக்கமாட்டேன் என்பதாகும்.
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்” பதவியாகிய வாளுக்கும் (அதிகாரத்திற்கும்) பயப்படமாட்டேன்.
“பாசம் மிகுத்தேன்” – பற்றுதல் மிகுத்தேன்!” – பாசம் மிகுதியாகக் கொண்டவன் நான் (3 மனைவிகள் 15 பிள்ளைகள்) கவியரசிற்கு உண்டு. அத்தனைபேர்மேலும் பாசம் மிகுதியாகக் கொண்டவர் கவியரசு. பாசம் மிகுதியாகக் கொண்டவன் நான். பற்றுதலும் (ஆசையும்) மிகுதியாகக் கொண்டவன் நான்.
“ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்!” – நான் ஆசைப்படுபவை எவையோ அல்லது ஆசையைத் தருவன (குறிப்பாகப் பெண்கள் மீது) எவையோ அவை அனைத்தையும் கைப்பற்றுவேன்!
“உண்டாயின் உண்ணத்தருவேன்” – என்னிடம் பொருள் உள்ளது எனில் பிறர்பசி அகற்ற உண்ணத் தருவேன். உண்மையில் கவியரசு எத்தனை பேர்களுக்கு உதவினாரென்பதை எண்ணிட முடியாதெனக் கூறுவர் (காந்தி கண்ணதாசன் மகன் கூறுவார்).
“இல்லையாயின் எமர் இல்லம் தட்டுவேன்” – என்னிடம் பொருள் இல்லையாயின் (எமர் – நண்பர்) எம் நண்பர் இல்லம் சென்று கேட்கத் தயங்கமாட்டேன். சொந்தக்காரர்களிடம் அல்ல – முக்தா சீனிவாசனிடம் பட்ட கசப்பான அனுபவம்)
“அண்ணன் என்னடா தம்பி என்னடா” – ‘பழநி’ சினிமாப் பாட்டு மூலம் இக்கசப்பான அனுபவத்தை கவியரசு விளக்குவதை இவ்விடத்தில் குறிப்பிடல் வேண்டும். கவியரசின் சகோதரர் முக்தா சீனிவாசன்).
“வண்டாயெழுந்து மலர்களில் அமர்வேன்” – வண்டு மலர்களில் அமர்வதுபோல் பெண்களை நாடிச்சென்று சுவைப்பேன். இதனைப் பொறுத்தவரை மக்கள் மத்தியில் ஒரு தவறான புரிதல் உண்டு. அதனை விளக்குதல் – விளங்குதல் வேண்டும்.
“என்னைப் பின்பற்றாதீர்கள் – என் கவிதைகளைப் பின்பற்றுங்கள்” என்கிறார் கவியரசு. (“ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” என்ற பாடலை இவ்விடத்தில் குறிப்பிடுதல் வேண்டும்.) என்னுடைய தத்துவப் பாடல்களை, அறக்கருத்துகளைப் பாருங்கள். பின்பற்றுங்கள் என்று கவியரசு கூறுகிறார்.
“வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந்தருவேன்” – நான் அறிந்த இன்பங்களை, சுவைகளை, ஊர் அறியுமாறு இலக்கியங்களில் தருவேன்.
“பண்டோர் கம்பன், பாரதி, பாரதிதாசன் சொல்லாதன சில சொல்லிவிட முனைவேன்” – ஒழுக்கத்தை ஓம்பிய கம்பனும் விடுதலையைப் பாடிய மகாகவி பாரதியும் சமூகத்தைப் பாடிய பாரதிதாசனும் சொல்லாத சில கருத்துதகளை என் கவிதைகளில் சொல்ல முயல்வேன்.
“புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது” “இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது! – வளமார் கவிகள் வாக்குமூலங்கள் இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு.” புகழ்ச்சிகளைக் கண்டு பெருமிதத்தால் என் உடல் புல்லரிக்காது. என்னை இகழ்ந்தால் அதற்காக என் மனம் சோர்ந்து இறந்துவிடாது. நான் சொல்கின்ற கருத்துகள் (கவிதைகள்) எல்லாமே என் வாக்குமூலங்கள். ஒரு குற்றவாளி தன் வாக்குமூலத்தால் எவ்வாறு தன்னுடைய குற்றங்களை ஒப்புக்கொள்கிறானோ அவ்வாறு தான் என்னுடைய குற்றங்களை அனுபவங்களை ஒப்புக்கொள்கிறேன் என்கிறார்.
“இறந்த பின்னாலேயே எழுதுக தீர்ப்பு! – அவற்றைக் கொண்டு என் இறப்பின் பின்னால் நல்லவனா? தீயவனா? சான்றோனா? கயவனா? என்பது குறித்துத் தீர்ப்பு எழுதிக்கொள்ளுங்கள்.
“கல்லாய் மரமாய் காடுமேடாக மாறாதிருக்க யான் வனவிலங்கல்லன்!” “மாற்றம் எனது மானிடத்தன்மை.” தத்துவம் மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!” – கல்லைப்போல, மரத்தைப்போல, காட்டைப்போல மலையைப் போல என்றும் மாறாது நிலையாய் இருக்க நான் வனவிலங்கு அல்லன். (மனித மனமென்பது ஆசையின் வழி ஒன்றைவிட்டு ஒன்று தாவித்திரியும் என்கிறார் கவிஞர். “மனிதமனம் ஒரு குரங்கு” என்னும் கவிஞரின் பாடலோடு ஒப்பிடுதல் வேண்டும். (குரங்குபோல மனிதமனம் அலையக்கூடியது என்கிறார்.) (தனது கட்சி மாறுதலை கவியரசு குறிப்பிட்டாரோ தெரியவில்லை.)
“மாற்றம் எனது மானுட தத்துவம்” – மாற்றம் ஏன்? ஒன்றைத் தவிர மற்ற அனைத்துமே மாறக்கூடியது என்பதே என்னுடைய வாழ்க்கைத் தத்துவம்” “மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!” மாற்றத்தால் உயிர்த்திருக்கின்ற இந்த உலகத்தின் மகத்துவம் அறிவேன்.”
“எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்பதறிந்து ஏகுமென்சாலை” எவை எவை தீமை, எவை எவை நன்மை என்பவற்றை அறிந்து ஒழுகுவது என் வாழ்க்கைப் பயணம்.
“தலைவர் மாறுவர் தர்பார் மாறும். தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்.” இவ்வுலகில் தலைவர்கள் மாறுவர், ஆட்சியும் (தர்பார்) அரசுகளும் மாறும் இயல்புடையவை என்கிறார். தத்துவம் மட்டுமே அட்சயபாத்திமாய் என்றும் வீற்றிருக்கும்.
(அட்சயபாத்திரமென்பது அள்ள அள்ளக் குறையாத அமுதத்தைக் கொடுக்கும் பாத்திரம் என்கிறார் கவியரசு – மணிமேகலை)
எனவே இவ்வுலகில் தலைவர்கள் மாறுவர், ஆட்சியும் மாறும் இயல்புடையது. என் தத்துவங்கள் மட்டுமே அட்சயபாத்திரமாய் என்றும் வீற்றிருக்கும் என்கிறார் கவியரசு. அரசியல் அறத் தத்துவங்கள் என்றும் எம்மை வழிப்படுத்த இருந்துகொண்டே இருக்கும் என்கிறார்.
கடைசியாக என்ன கூறுகிறாரென்றால் “ கொள்வார் கொள்க – குரைப்போர் குரைக்க!” என் கருத்துக்களை ஏற்றுக்கொள்வோர் ஏற்றுக்கொள்க. (குரைப்போர் – தூற்றுதல்). என்னைக் குறைகூறுவோர் குறைகூறுக. சுருக்கமாக என்ன கவியரசு கூறுகிறார் என்றால் போற்றுவோர் போற்றுக – தூற்றுவோர் தூற்றுக – நான் துணிந்து என் கருத்துகளைக் கூறுவேன் என்கிறார்.
“உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது” – ஒருவேளை நீங்கள் என்னை இகழ்ந்தால் உங்களுடைய வாய் வார்த்தைகள் என் உடலைத் தொடாது.
“நானே தொடக்கம். நானே முடிவு – நானுரைப்பது தான் நாட்டின் சட்டம்”. என்னுடைய இலக்கியப் பயணத்தில் என் கவியரசில் நானே தொடக்கம், நானே முடிவு, நான் சொன்ன கருத்துகள்தான் நாட்டின் சட்டம்” இப்பாடல் கவியரசு கண்ணதாசனின் வாழ்க்கையைக் கிட்டத்தட்ட சொல்வதையே நாம் கண்டோம்.
பாட்டாளிகளுக்காகவும் பஞ்சணையில் தூங்கும் காதலர்களுக்காகவும் கவிதை இயற்றியவர் கவியரசர். அர்த்தமுள்ள இந்துமதம், யேசு காவியம் எழுதிய மத சமத்துவவாதி. பதவிவரும்போது பணிவும் வரவேண்டும் கொள்கையைப் பாடியவர். கவியரசின் கருத்துகளை மதிப்போம். கவிதைகளை இரசிப்போம். அவரது தத்துவக்கருத்துக்களை பின்பற்ற முயல்வோம்.
மேலே நான் குறிப்பிட்ட கவியரசின் இரண்டு தனிப்பாடல்களும் அதாவது “கவிஞன் யானோர் காலக்கணிதம்” என்பதும் ‘அனுபவம்’ என்றால் என்ன என்பதும் “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” என்னும் சினிமாப்பாடலும் கவியரசின் முழுவாழ்வையையுமே பிரதிபலிக்கும் பாடல்களாகும்.
(இக்கட்டுரை கவியரசின் 98வது பிறந்தநாள் சிறப்புக் கட்டுரையாகும்).
























