யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
“ஹர்த்தாலுக்கான காரணங்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதற்கு நாம் ஆதரவாக இருக்கின்றோம். இன்று மட்டுமல்ல மன்னார் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் காலத்திலும் மன்னார் மறை மாவட்டத் திருச்சபை குறிப்பாக மன்னார் குருக்கள் ஆயரோடு இணைந்து தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்துள்ளனர்.தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அனைத்து வகையான அநீதிகளுக்கு எதிராகவும் போராடியுள்ளனர். இதை முழு உலகமும் அறியும். இந்த நிலையில் மடுத்திருப்பதியின் ஆவணித் திருவிழாவை கவனத்தில் கொள்ளாமல் இலங்கைவாழ் கத்தோலிக்க மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் எடுக்கப்பட்ட இந்த தீர்மானம் எமக்கு மிகுந்த கவலை அளிப்பதாகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது.
இவ்வேளையில் வரலாற்றுரீதியான சில விடயங்களையும் சுட்டிக்காட்ட விழைகின்றோம். யுத்தம்உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் கூட மடுத் திருப்பதியின் திருவிழாக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அன்றைய அரசாங்கங்களும்சரி, தமிழீழ விடுதலைப் புலிகளும் சரி இத்திருவிழாக்களை எந்த இடையூறும் இல்லாமல் நடத்துவதற்கு தமது பூரண ஆதரவை, ஒத்துழைப்பை வழங்கிவந்தனர் என்பதை இவ்வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் குறிப்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த ஹர்த்தாலை திருவிழாவுக்குப் பின்னர் வேறொரு நாளுக்கு பின்போடுமாறு வினயமாக வேண்டுகோள் விடுக்கின்றோம். புதிய திகதிக்கு இந்தக் ஹர்த்தால் மாற்றப்படும்போது வழக்கம்போல மன்னார் மறைமாவட்டடத் திருச்சபை இதற்கான பூரண ஆதரவை வழங்கும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்எமது இந்தக் கோரிக்கையை ஏற்று உடனடியாக புதிய திகதியை அறிவிக்குமாறு திரு. சுமந்திரன் அவர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.”
இது மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு.தமிழ்நேசன் அடிகளார் வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி. முத்தையன்கட்டில் ஒரு தமிழர் படைத்தரப்பினால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுமந்திரன் ஒரு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். எனினும் பின்னர் நல்லூர் திருவிழா,மடுப் பெருநாள் என்பவற்றைக் கவனத்தில் எடுத்து கடையடைப்பை மூன்று நாட்களுக்கு ஒத்தி வைத்திருக்கிறார்.
சுமந்திரன் ஒரு கிறிஸ்தவர். அவரைச் சுற்றி இருப்பவர்கள் யாருமே அவர் முதலில் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்த நாள் மடுமாதாவின் பெருநாள் என்பதனைச் சொல்லவில்லைப் போலும். அவரைச் சுற்றி இருந்த எந்த ஒரு இந்துவும் இது நல்லூர் திருவிழாக் காலம் என்பதனை அவருக்குச் சுட்டிக்காட்டி இருக்கவில்லை போலும். வடக்கில் இரண்டு பெரும் உற்சவங்கள்.இந்த இரண்டுக்குமாக பல இடங்களிலிருந்தும் பேருந்துகள் பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும். குறிப்பாக மடுத் திருவிழா என்பது இனம் கடந்து, மதம் கடந்து அனுஷ்டிக்கப்படுவது. நல்லூரும்தான்.
குறிப்பாக மடுவில் இந்து கிறிஸ்தவம் என்ற பேதம் இன்றி தமிழ் மக்கள் கூடுவார்கள். அங்கே திருவிழாவை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்னரே மடுவுக்கு போய் தங்கியிருக்கும் யாத்திரிகர்களும் உண்டு. எனவே மடுத் திருவிழா என்றால் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வடக்கிலிருந்து பெரிய மடுவை நோக்கி வரும். இந்தச் சிறிய விடயத்தை ஏன் சுமந்திரன் கவனத்திற் கொள்ளத் தவறினார்?
அப்படித்தான் நல்லூர்த் திருவிழாக் காலங்களிலும் பேருந்துகளில் ஜனத்தொகை பெருக்கமாக இருக்கும்.திருவிழாக் காலங்களில் கடையை அடைக்குமாறு கேட்டால், பொதுப் போக்குவரத்தை நிறுத்தினால் என்ன நடக்கும்? இந்தச் சிறிய விடயங்களையெல்லாம் சுமந்திரனைச் சுற்றியிருப்பவர்கள் அவருக்குச்சொல்வதில்லையா? அல்லது யாரிடம் கேட்டு சுமந்திரன் இந்த முடிவுகளை எடுக்கின்றார்? அல்லது அவர் முடிவெடுக்கும் போது யாரிடமும் எதையும் கேட்பது இல்லையா?
அவர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி அல்ல.அவருடைய வார்த்தைகளில் சொன்னால் மக்களின் ஆணை அவருக்கு இல்லை. கட்சிக்குள்ளும் அவர் பதில் செயலாளர்தான். பதில்தான். ஆனால் அவர்தான் கட்சியின் முகமாக, கட்சியின் எல்லாமமாகத் தோன்றுகிறார். அண்மையில் அவர் லண்டனுக்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் போயிருந்தார். அங்கே அவர் அந்தந்த நாடுகளில் ராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசியதாக அவருடைய அரசியலெதிரிகள் கூறுகிறார்கள்..வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஜெனிவா கூட்டத் தொடரை முன்னிட்டு அவர் அவ்வாறு மேற்கத்திய ராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
அது தனிப்பட்ட பயணம் என்று சுமந்திரன் கூறியிருக்கிறார். ஆனால் அவர் ஐரோப்பிய நாடுகளில் ராஜதந்திரிகளைச் சந்தித்ததாகப் புலம்பெயர்ந்த தமிழர் தரப்புகள் கூறுகின்றன. அவை கூறுவது உண்மையாக இருந்தால் அவர் கட்சியின் அனுமதியோடுதான் அச்சந்திப்புகளில் ஈடுபட்டாரா? அங்கே என்ன கதைக்கவேண்டும் என்பதனை கட்சி ஏற்கனவே கூடி முடிவெடுத்திருந்ததா? அவ்வாறான சந்திப்புகளில் என்ன கதைக்கப்பட்டது என்பதனை அவர் கட்சிக்குத் தெரிவித்தவரா? அதை அவர் மக்களுக்குக் கூறத் தேவையில்லையா?
கடந்த 20 மாதங்களாக சுமந்திரனின் நகர்வுகளைத் தொகுத்துக் கவனிக்கும் எவரும் அவர் எல்லாவற்றையும் ஒரு நோக்கத்தோடுதான் செய்கிறார் என்பதனைக் கண்டுபிடிக்கலாம். கட்சிக்குள் தன்னைப் பலப்படுத்துவது; கட்சியின் முகமாகத் தொடர்ந்தும் பலம்பெறுவது; கட்சியின் தீர்மானங்களைத் தானே எடுப்பது;மத்திய குழுவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது; எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கத்தக்கதாக கட்சி தொடர்பான ராஜதந்திர நகர்வுகளை தானே முன்னெடுப்பது…. இதைத்தான் கடந்த 20 மாதங்களாக அவர் செய்து வருகிறார். கட்சிக்குள் யாரும் அதை எதிர்ப்பதாகத் தெரியவில்லை.
அவர் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தது சரியானது. அதை மனோ கணேசனும் ஆதரித்திருந்தார்.படையின் முகாம்கள் மக்கள் குடியிருப்புகள் மத்தியில் இருப்பதினால்தான் கடந்த வாரம் முல்லைதீவில் இடம்பெற்றது போன்ற சம்பவங்கள் நிகழ்வதாக சுமந்திரன் கூறுகிறார். எனவே படைமயக் குறைப்பை வலியுறுத்தி அவர் ஒரு கடையடைப்புக்கு அறிவித்தல் விடுத்திருக்கிறார்.
முதலாவதாக படைமயக் குறைப்புக்காக ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும் என்று முடிவு எடுத்தது சரியானது.படை மய நீக்கம் அவசியம். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கடந்த 16 ஆண்டுகளாக படைமய நீக்கம் முழுமையாக நிகழவில்லை. இலங்கையின் மொத்தப் படைக் கட்டமைப்பில் ஏறக்குறைய மூன்றில்இரண்டு பகுதி தமிழ் பகுதிகளில்தான் நிலை கொண்டிருக்கிறது என்று உத்தியோகப்பற்றற்ற புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே படைமய நீக்கம் அவசியம். அதை வலியுறுத்தி தமிழ் மக்கள் போராட வேண்டியதும் அவசியம். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
ஆனால் பிரச்சினை எங்கே வருகிறது என்றால், அதற்காக கடையடைப்பு ஒரு பொருத்தமான போராட்டமா என்பதுதான். அந்த கடை அடைப்பை எப்பொழுது நடத்துவது என்பதுதான்.அந்த முடிவை கட்சிக்குள் யார் யார் எடுத்தார்கள் என்பதுதான்.அந்த முடிவை எடுக்கும் பொழுது தான் வாழும் மக்கள் மத்தியில் உள்ள பெருவிழாக்கள் திருவிழாக்கள் தொடர்பாக கவனத்தில் எடுக்க முடியாத அளவுக்கு தங்கள் மக்களுடைய பண்பாட்டு உணர்வுகளிலிருந்து அவர்கள் விலகி இருந்தார்களா என்பதுதான்.
சுமந்திரனை எதிர்த்த பலரும் கடையடைப்பையும் எதிர்க்கிறார்கள். அது தவறு. அரசியலில் சில சமயம் பிழையான ஆட்கள் சரியான செயல்களைச் செய்வது உண்டு. கடையடைப்பு என்ற போராட்ட வடிவம் குறித்து கேள்விகளை எழுப்பலாம்.வேறு போராட்ட வடிவங்களைக் குறித்துச் சிந்திக்கலாம். அரசாங்கத்துக்கு நோகக்கூடிய விதத்தில் அரசாங்கத்தை ஆதரிக்கும் நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் குறிப்பாக, ஐநாவின் கவனத்தை ஈர்க்கும்விதத்தில் அதைவிடக் குறிப்பாக ஐநாவில் தமிழ் மக்கள் தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவர இருக்கும் “கோ குரூப்” நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அழுத்தங்களைப் பிரயோகிக்கத்தக்க போராட்ட வடிவங்களைச் சிந்திக்கலாம்.
அரசாங்கத்துக்கு நோகத்தக்க விதத்தில் போராடுவது என்று சொன்னால் மக்களைத் திரட்டி சம்பவம் நடந்த மாவட்டத்தில் ஒரு மக்கள் பேரெழுச்சியை ஒழுங்குபடுத்தலாம். அதை ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தலாம். இது முதலாவது. இரண்டாவதாக, அரசு அலுவலகங்களை முடக்கக்கூடிய விதத்தில் அரசு அலுவலகங்களைச் சுற்றி வளைக்கலாம்.மூன்றாவதாக, ஐநாவில் முடிவெடுக்கும் நாடுகளின் தூதரகங்களின் முன்னாள் கவன ஈர்ப்புப் போராட்டங்களை ஒழுங்கு செய்யலாம். அந்தக் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் படைப்புத்திறன் மிக்கவைகளாக இருக்க வேண்டும்.மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வந்த பொழுது நிகழ்த்தப்பட்ட அணையா விளக்கு போராட்டத்தைப் போல.
எனவே இதுபோன்ற பல வழிகளிலும் அரசாங்கத்துக்கு நோகக்கூடிய விதத்தில் போராடலாம். கடை அடைப்பு அழைப்பவருக்கு இலகுவான ஒரு போராட்டம். மாறாக,கடைகளை மூடும் வியாபாரிகளுக்கும் பொதுப் போக்குவரத்தை நிறுத்தும் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் அன்றாடம் காய்சிகளுக்கும் அன்றாடம் வேலை செய்பவர்களுக்கும் அதனால் இழப்பு ஏற்படும். அந்த இழப்பைக்கூட நாட்டுக்காக ஒருநாள் செய்யும் தியாகம் என்று நியாயப்படுத்த முடியும். ஆனால் கடை அடைப்போ அல்லது பொது முடக்கமோ எதுவாக இருந்தாலும் அது அரசாங்கத்துக்கு நோக வேண்டும். அரசாங்கத்துக்கு நோகக் கூடிய விதத்தில் அழுத்தமாகப் போராட வேண்டும்.
அப்படிப் பார்த்தால் கடையடைப்பு அரசு அலுவலகங்களுக்கு நோகாது. ஏனென்றால் கடையை அடைத்தாலும் பொதுப் போக்குவரத்தை முடக்கினாலும் அரச அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கும். ஏன் பாடசாலைகளே இயங்கும். ஆசிரியர்கள் வருவார்கள்; அதிபர்கள் வருவார்கள்; மாணவர்கள் மட்டும் வர மாட்டார்கள். எனவே கடையடைப்பைவிட அழுத்தமான, கூர்மையான படைப்புத்திறன்மிக்க அறவழிப் போராட்டங்களை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அதற்குக் கூடிக் கதைக்க வேண்டும். அதைவிட முக்கியமாக தமது சொந்த மக்களை நேசிக்க வேண்டும்.உண்மையாக நேசிக்க வேண்டும். தனது மக்களை விசுவாசிக்கும் எந்த ஒரு செயற்பாட்டாளருக்கும் போராட்டத்தின் வழி தானாகத் திறக்கும்.
ஆனால் சுமந்திரனின் போராட்டத்தை அவரை விமர்சிப்பவர்கள் அவ்வாறு பார்க்கவில்லை. அவர் மக்களுக்காகப் போராடவில்லை. அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்துக்காகப் போராடவில்லை. அல்லது படை மய நீக்கத்துக்காக உண்மையாகப்போராடவில்லை. மாறாக கட்சிக்குள் தன் முதன்மையைப் பலப்படுத்தவும் தமிழ்த் தேசிய அரசியலில் தன்னுடைய இன்றியமையாமையை நிருபிப்பதற்கும் அவர் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்துகிறார் என்றுதான் அவர்கள் விமர்சிக்கின்றார்கள்.
அவ்வாறு விமர்சிக்கத்தக்க விதத்தில்தான் அவருடைய நடவடிக்கைகளும் காணப்படுகின்றன. கடந்த வாரம் ஐநாவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிவில் சமூகங்களோடு இணைந்து அந்தக் கடிதத்தைத் தயாரித்தது.அந்தக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கையெழுத்துப் போடவில்லை.அந்த முடிவைப் பெரும்பாலும் சுமந்திரனே எடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது.அவர் சொன்னதைச் சிவஞானம் திரும்பிச் சொல்கிறார் என்றுதான் எல்லாரும் நம்புகிறார்கள். எனவே இந்த விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்கு சுமந்திரன் தயாராக இருக்கவில்லை. அந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளோடு இணைந்து முடிவெடுத்திருந்திருந்தால் இன்றைக்கு கடையடைப்பை அல்லது அதுபோன்ற ஏதோ ஒரு போராட்டத்தை எல்லாருமாகச் சேர்ந்து தரமாகச் செய்திருக்கலாம்.அதற்குத் தமிழரசுக் கட்சியின் ஈகோ இடம் கொடுக்கவில்லை.
ஆனால் அதற்கு சுமந்திரன் ஒவ்வொரு நாளும் காணொளியில் வந்து விளக்கம் கொடுக்கிறார். அவர் தரும் விளக்கங்களில் முக்கியமானது, நாங்களே பெரிய கட்சி நாங்களே முதன்மைக் கட்சி எனவே நீங்கள் கடிதத்தை எழுதிவிட்டு எங்களை அதில் கையெழுத்துப் போடுமாறு கேட்க முடியாது என்ற பொருள்பட அமைந்துள்ள விளக்கங்கள்தான். அதில் ஒரு பகுதி உண்மை. அவர்கள்தான் பெரிய கட்சி அவர்கள்தான் முதன்மைக் கட்சி. அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால், கடந்த 16 ஆண்டுகளாக அவர்களே முதன்மைக் கட்சியாகவும் முடிவெடுக்கும் கட்சியாகவும் இருந்து தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன? கடந்த 16 ஆண்டுகாலத் தமிழரசியலில் ஏற்பட்ட தேக்கங்கள்,தோல்விகள், பின்னடைவுகள் போன்ற எல்லாவற்றிற்கும் அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். அது மட்டுமல்ல அனைத்துலக அளவில் குறிப்பாக ஐநாவில் தமிழ் மக்களின் விவகாரம் மேலும் நீர்த்துப்போகக்கூடிய ஆபத்து தெரிகிறது. அதற்கும் தமிழரசுக் கட்சிதான் பொறுப்பேற்க வேண்டும் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஐக்கிய அமைப்பு ஒன்று இருந்தது. அது உடைந்து போனதுக்கும் தமிழரசுக் கட்சிதான் பொறுப்புக் கூற வேண்டும். எனவே கடந்த 16 ஆண்டுகளிலும் தங்களைப் பெரிய கட்சி, தலைமைக் கட்சி என்றெல்லாம் கூறிக்கொள்ளும் அவர்கள் கடந்த 16 ஆண்டு காலத் தோல்விகளுக்கும் பொறுப்பேற்பார்களா?
























