நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து பிணை எடுத்த ஒருவருக்கு இப்பொழுது பிணை கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற பொருள்பட ஓர் அரசியல் செயற்பாட்டாளர் முகநூலில் பதிந்திருந்தார். ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டார் என்று கூறப்படுவதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் உண்டு. ரணில் விக்கிரமசிங்க ஒரு லிபரல் என்று கூறப்படுவதை பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர் லிபரல் முகமூடி அணிந்த ஒரு இனவாதி என்றுதான் தமிழர்கள் நம்புகிறார்கள். அவரை அன்ரன் பாலசிங்கம் நரி என்று சொன்னார். பாலசிங்கம் சொன்ன பல விடயங்களை தமிழர்கள் மறந்து விட்டார்கள். ஆனால் ரணிலைப்பற்றி அவர் சொன்னதை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
இலங்கைத் தீவின் முன்னாள் ஜனாதிபதிகளில் யாருமே எந்த ஒரு குற்றச்சாட்டுக்காகவும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததில்லை. ரணில்தான் அவ்வாறு முதன்முதலாக கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதுவரை காலமும் முன்னாள் ஜனாதிபதிகள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதில்லை என்ற மரபை உடைத்து தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் ஒரு புதிய மரபை உருவாக்குமா?
தமிழ்த் தேசிய அரசியல் நோக்கு நிலையில் இருந்து தேசிய மக்கள் சக்தி மீது விமர்சனங்கள் ஆயிரம் உண்டு. ஆனால் சிங்கள மக்களைப் பொறுத்தவரையிலும் அது சில மாற்றங்களைக் காட்டுகிறது என்பதைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டு தானாக வேண்டும். குறிப்பாக ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை பொறுத்தவரை இதுவரை 63க்கும் குறையாதவர்கள் கைது செய்யப்பட்டு விட்டார்கள். இவர்களில் அரசியல்வாதிகள்,உயர் நிர்வாகிகள் ,போலீஸ் அதிகாரிகள் படைப்பிரதானிகள் போன்றவர்கள் அடங்கும்.
இந்த விடயத்தில் தேசிய மக்கள் சக்தியானது திருப்பிச் செல்ல முடியாத ஒரு இடத்துக்கு வந்திருக்கிறது என்று சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறுகிறார். அவர் ஆங்கிலத்தில் “Crossing the Rubicon” என்ற சொற்றொடரைப் பாவித்துள்ளார். அது ஜூலியஸ் சீசரின் துணிகரமான, ஆனால் திரும்பி வர முடியாத ஒரு யுத்த நகர்வைக் குறிக்கும் சொற்றொடர். திரும்பி வர முடியாத ஒரு இடத்துக்கு என்பி பி முன்நகர்ந்திருக்கிறது என்று பொருள்.
அதில் உண்மை உண்டு. ஏனென்றால் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்த பின் அதிலிருந்து பின் வாங்கினால், இப்பொழுது சீண்டப்பட்டிருக்கும், தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் சிங்கள மேட்டுக்குடி பழிவாங்கும் உணர்ச்சியோடு அனுரமீது பாயும். எனவே என்பிபி திரும்பிப் போக முடியாது. அப்படிப் போனால் அது எல்லாவிதத்திலும் தோல்வி. அதனால் ரணிலை தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய தலைகளை கைது செய்வதன்மூலம் சிங்கள பௌத்த மேட்டுக்குடியை ஒருவித அச்சச் சூழலில், தற்காப்பு நிலையில் வைத்திருக்கலாம்.
ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதோடு சிங்கள பௌத்த உயர் குழாம் ஒன்று திரண்டு விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் பின்வருமாறு கூறினார்…” கட்சி பேதமின்றி நாம் ஒன்றிணைக வேண்டும்.இவை அனைத்தும் இணைந்து இறுதியில் எமது வீட்டுக் கதவைத் தட்டும். நாம் தற்பொழுது ஒன்றிணைந்து எதிர்கொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்“
இது சிங்கள பௌத்த உயர் குழாத்தின் அச்சத்தை பிரதிபலிக்கும் கருத்தாகும். ரணிலைக் கைது செய்வதன்மூலம் சிங்கள பௌத்த உயர் குழாமும் எதிர்க்கட்சிகளும் உஷார் ஆகிவிட்டன. இந்த அரசாங்கம் இப்படியே தொடர்ந்து முன் சென்றால் தங்கள் எல்லாரிலும் கைவைக்கக் கூடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்று திரளும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
இது ஒரு ஒத்திகைதான்.இப்போதுள்ள சிங்கள பௌத்த உயர் குழாத்தில் ஒப்பீட்டளவில் மென் இலக்காக ரணில்தான் காணப்படுகிறார். அவருடைய தாய்க் கட்சி உடைந்து விட்டது. அவர் ஒரு பலமான அணியாக இல்லை. உள்நாட்டில் அவர் அனேகமாக பலவீனமான ஒரு தலைவர்தான். ஏனென்றால் அவர் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் தீவிரப் போக்கை பிரதிபலிபவர் அல்ல.ராஜபக்சக்களைப் போல சிங்களபௌத்த பொது உளவியலைக் கவரக்கூடிய ஆடை அணிகலங்களோடு தோன்றுபவரும் அல்ல. தண்டுசமத்தாக,மிடுக்காக நிமிர்ந்து காட்சி தருபவர் அல்ல.தன்னை ஜனவசியம் மிக்க ஒரு தலைவராகக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதற்காக சிங்கள பௌத்த இனவாதத்தின் தீவிர நிலைகளுக்கு தலைமை தாங்குபவர் அல்ல. அல்லது சிங்கள பௌத்த கூட்டு உளவியலைக் கவரும் விதத்தில் ஆடை அணிகலன்கள் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர் அல்ல. மாறாக அவர் தன் அரசியல் வாழ்க்கை முழுவதிலும் மேற்கத்திய உடுப்புகளோடுதான் காணப்பட்டார். மேற்கத்திய அறிவுவாதத்தின் வாரிசாகவும் தன்னை காட்டிக் கொள்ள முற்பட்டார். ராஜபக்சக்களை போலன்றி ஏன் அனுரவை போலன்றி எல்லா பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்திருக்கக் கூடிய தந்திரசாலியாகவும் கெட்டிக்காரராகவும் அவர் காணப்பட்டார்.
ஆனால் அவருடைய கெட்டித்தனங்கள் சிங்கள மக்களைக் கவரவில்லை. சிங்கள மக்களைக் கவர்வதற்கு ராஜபக்சக்களிடம் நிறைய இருந்தது. ரணிலிடம் குறைவாகவே இருந்தது. அதனால்தான் அவர் அநேகமாக தேர்தல்களில் தோற்கடிக்கப்படும் ஒரு தலைவராக காணப்பட்டார். எனினும் உள்நாட்டில் அவர் பலவீனமாக தலைவராக இருந்த பொழுதும், அனைத்துலக அளவில் அவர் ஒரு பலமான ஒரு பிம்பத்தை கட்டியெழுப்பி வைத்திருந்தார். மேற்கத்திய தலைநகரங்களிலும் சரி ஐநா, ஐஎம்எஃப் போன்ற உலகப் பொது நிறுவனங்களிலும் சரி அவருக்கு கவர்ச்சி அதிகம்.
இவ்வாறு உள்நாட்டில் கவர்ச்சி குறைந்த ஒருவரை ஒரு மென் இலக்கை முதலில் கைது செய்ததன் மூலம் அனுர ஒத்திகை ஒன்றை செய்திருக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இது எதிர்காலத்தில் நிகழப்போகும் கைது நடவடிக்கைகளுக்கான ஒத்திகை. அதேசமயம், ஏற்கனவே இளைய ராஜபக்சவாகிய சஷீந்திர ராஜபக்ச கைது செய்யப்பட்டிருக்கிறார். எனினும் மூத்த ராஜபக்சங்களில் கையை வைத்தால் எதிர்ப்பு பலமாக இருக்கலாம் என்று தேசிய மக்கள் சக்தி சிந்திக்கின்றது.ராஜபக்ஷக்களில் கை வைத்தால் அது இனவாதத்தை மேலும் முன்னிலைக்கு கொண்டு வரும்.அதனால்தான் பரீட்ச்சார்த்தமாக ரணிலில் கை வைத்திருக்கிறார்கள்.
அது இன்னொரு வகையில் பழைய பகையை, கணக்கைத் தீர்ப்பது. அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வந்த அமைச்சர் பிமல் ரட்டநாயக்க கூறினார் ரணிலை 40 ஆண்டுகளுக்கு முன்னரே கைது செய்து இருந்திருக்க வேண்டும் என்று. அது 40 ஆண்டுகளுக்கு முந்திய ஜேவிபியின் கணக்கு. ஜேவிபியின் இரண்டாவது போராட்டத்தை கொடூரமாக நசுக்கியது யுஎன்பி. அப்பொழுது ரணில் அரசாங்கத்தில் ஒரு பிரதானி. எனவே அந்தக் கணக்கைத் தீர்க்க வேண்டிய தேவை ஜேவிபிக்கு இருந்தது.
ஆனால் இந்த இடத்தில் மேலும் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். ஜேவிபிக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்படவில்லை. அது ஒரு குற்றச்சாட்டாக இல்லை. பிமல் ரட்டநாயக்க யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டிக் காட்டிய, தமிழ் மக்களுக்கு எதிரான நூலக எதிர்ப்பு போன்ற குற்றங்களுக்காகவும் அவர் கைது செய்யப்படவில்லை.அரச வளங்களை தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தியதற்காகத்தான் அவர் மீது வழக்கு. போர்க்குற்ற வழக்கு அல்ல.
அவரைக் கைது செய்வதன் மூலம் எதிர்காலத்தில் அவரைப் போன்ற முன்னாள் ஜனாதிபதிகளும் உட்பட ஏனையவர்களைக் கைது செய்வதற்கான ஒரு பரிசோதனையை என்பிபி செய்து பார்த்தது என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த பரிசோதனைக்குள் இதுவரை போர் குற்றங்கள் அடங்கவில்லை.
உள்நாட்டில் ரணில் தேர்தல் கவர்ச்சி குறைந்த தலைவராக இருந்த காரணத்தால் அவரை ஒரு மென் இலக்கு என்று தீர்மானித்து கைது செய்திருக்கலாம். ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டுவிட்டன. சிங்கள பௌத்த உயர்குழாம் மீண்டும் ஒன்று திரளுகிறது.” தேசிய மக்கள் சக்தியை வீட்டுக்கு அனுப்புவதற்கான பலமான கூட்டணியை உருவாக்குவதற்கு அரசாங்கமே அடிக்கல் நாட்டியிருக்கிறது” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.
சாலிய பீரிஸ் கூறியதுபோல திரும்பிவர முடியாத ஒரு இடத்துக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வந்திருக்கின்றது. எனவே அவர்கள் தொடர்ந்தும் துணிச்சலாக ரிஸ்க் எடுத்து ஊழலுக்கு எதிராக முன்னுரினால் மட்டும்தான் தமையும் காத்துக் கொள்ளலாம் எதிர்த்தரப்பையும் பலவீனப்படுத்தலாம்.
அதேசமயம் இந்த கைது நடவடிக்கையால் தமிழ் தரப்புக்கு ஏற்பட்டிருக்கும் சாதக பாதக விளைவுகள் என்ன?
ரணில் கைது செய்யப்பட்ட காலம் எதுவென்று பார்க்க வேண்டும்.அடுத்த ஜெனீவா கூட்டத்துடருக்கு சில கிழமைகளுக்கு முன் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒரு முன்னாள் ஜனாதிபதியைக் கைது செய்யும் அளவுக்கு இலங்கைத்தீவின் உள்நாட்டு நீதி பலமாக உள்ளது என்று அனைத்துலக அரங்கில் எடுத்துக் கூறுவதற்கு அது அனுரவுக்கு உதவும்.
ரணில் மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் அதிகம் இசைவானவர். இலங்கைத் தீவில் மேற்கு நாடுகளின் அனுசரணையோடு முன்னெடுக்கப்பட்ட இரண்டு சமாதான முயற்சிகளில் அவர்தான் அரச பங்காளி. முதலாவது சமாதான முயற்சி நோர்வையின் அனுசரணையோடு கூடிய சமாதான முயற்சிகள். இரண்டாவது சமாதான முயற்சி, 2015ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். இந்த இரண்டிலும் ரணில்தான் சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவருடைய காலத்தில்தான் மேற்கின் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக சமாதான முயற்சிகள் அல்லது நல்லிணக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே மேற்கு நாடுகளுக்கும் ஐநாவுக்கும் வாலாயமான ஒரு கருவியாகக் காணப்பட்ட ஒரு தலைவரை சில நாட்கள் தூக்கிச் சிறையில் போட்டதன்மூலம் அனுர அரசு உள்நாட்டு நீதி தொடர்பில் ஒரு புதிய தோற்றப்பாட்டை கட்டி எழுப்ப முற்படுகின்றது.
ஏற்கனவே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்து திரும்பிச் சென்ற பொழுது உள்நாட்டு நிதியை வெளிநாட்டு உதவிகளோடு பலப்படுத்துவது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். அதன்பின் அவர் வெளியிட்ட திருத்தப்படாத அறிக்கையிலும் அதே கருத்தை பிரதிபலித்திருந்தார். ஐநா புதிய அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்கலாம் என்று தெரிகிறது. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில், உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு ரணில் கைது அரசாங்கத்துக்கு உதவும். இது தமிழ் தரப்பின் நிலைமையை ஐநாவில் மேலும் பலவீனப்படுத்தும்.
ஐநாவின் பொறுப்புக்கூறல் செய்முறையின் பங்காளியாக இருந்த ஒருவரே கைது செய்யப்படும் அளவுக்கு இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதி பலமாக உள்ளது என்று அரசாங்கம் ஜெனிவாவில் கூறப்போகிறது.
எனவே கூட்டி கழித்துப் பார்த்தால் ரணிலைக் கைது செய்தமை என்பது சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை பலப்படுத்துகிறது. உலக அளவிலும் உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு அது உதவக் கூடும். இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்று திரளும் சிங்கள பௌத்த உயர் குழாம் எப்படிப்பட்ட சவால்களை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப் போகிறது என்பதுதான் நாட்டின் எதிர்காலத்தையும் தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலத்தையும் ஐநாவில் தமிழர் விவகாரம் நீர்த்துப் போவதற்கான வாய்ப்புகளையும் தீர்மானிக்கும்.
























