– நியூசிலாந்து நூல் வெளியீட்டில் ஆசிரியர் திரு. சண் வேலுப்பிள்ளை தெரிவிப்பு
புலம்பெயர் மண்ணில் தமிழின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது என்றும், எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் எழுத்துப்பணி இதற்கு உறுதுணையாக உள்ளதாக இலக்கிய ஆர்வலர், ஆசிரியர் திரு. சண் வேலுப்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து, ஓக்லாண்ட் மாநகரில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. சிறப்புற நடைபெற்ற இந்நூல்கள் வெளியீட்டு விழாவில் பெருந்திரளான நியூசிலாந்து வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
ஓக்லாண்ட் மாநகரில் உள்ள மவுண்ட் ரோஸ்கில் போர் நினைவு மண்டபத்தில்
கடந்த ஆகஸ்ட் 31ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு
நூல்களின் வெளியீடு சிறப்புற
நடைபெற்றது.
இந்த நூல் வெளியீட்டு விழாவின் தலைமை உரையில் அவர் பேசுகையில் கூறியதாவது, புத்தகம் வாசிப்பு என்பது மிக முக்கியம் ஆகும். புத்தகங்கள் நம்மை சரியான திசையில் அழைத்து செல்லும். படிக்க, படிக்க சிந்தனைகள் விரிவாக்கும். புத்தகம் படிப்பதனால் நமது எதிர்கால தலைமுறையினர் சரியான திசையில் அழைத்து செல்லப்படுவார்கள் என நம்பலாம்.
எழுத்தாளர்களின் எழுத்துக்கள் சமூக சிந்தனையை மேம்படுத்துகிறது. அத்துடன் சமூக மக்களின் நலனுக்காக எழுத்தாளர்கள் எழுத வேண்டிய கடமையும் உள்ளது என்றும் எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நூல்கள் சர்வதேச விவகாரங்களை ஆவணப்படுத்துகின்றன என்றும் திரு. சண் வேலுப்பிள்ளை அவர்கள் தெரிவித்தார்.
புலம்பெயர் மண்ணில் தமிழை மீட்டெடுக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். நமது மொழி, கலாசாரம் அழிந்து போய் விடக்கூடாது. அதற்கு எழுத்தாளர்களின் பங்களிப்பு அவசியம்.
நமது ஈழத்து இலக்கியம், கருத்தாளமிக்க படைப்புக்கள் தமிழின் பெருமையை வெளிக்காட்டுகின்றன. அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்கு உள்ளது என இந்நிகழ்வில் எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரா தனது ஏற்புரையில் பேசினார்.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வு திரு. சண் வேலுப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வெளியீட்டு விழாவில் அறிமுக உரையை திரு. ரமேஷ் செல்வகுமார் அவர்கள் உரையாற்றினார். அத்துடன் தமிழ் வாழ்த்துப் பாடலை ஓக்லாண்ட் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் சிறப்புற பாடினர்.
அத்துடன் ஆறு நூல்களின் ஆய்வுரைகளை திரு. சிவசரவணபன் சர்வேஸ்வரன், திரு. பூபாலசிங்கம் பிரதீபன், திரு. கௌரிசங்கர் சுதந்திரபாலன், திரு. பிரேம்குமார் கந்தசாமி, திருமதி. வித்தியா நந்தகுமார் மற்றும் திருமதி. தமிழினி வாமதேவன்
ஆகியோர் வழங்கினர்.
அத்துடன் இந்நிகழ்வில் சிறப்புரையை திரு. மேவின் கொன்ஸ்ரன்ரைன் அவர்களும் உரையாற்றினார். நிகழ்வின் இறுதியில் ஏற்புரையை நூலாசிரியர் திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா நிகழ்த்தினார்.
























