“நாங்கள் கேட்டது சர்வதேச விசாரணையை. அனுர தருவது சர்வதேச விளையாட்டு மைதானத்தை“. என்று முகநூலில் ஒரு பதிவு காணப்பட்டது. தமிழ் மக்கள் இறந்த காலத்துக்கு பொறுப்புக் கூறுவதற்காக அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் அரசாங்கமோ “இதோ உங்களுக்கு விளையாட்டு மைதானம்; இதோ உங்களுக்கு மயிலிட்டித் துறைமுகம்; இதோ உங்களுக்கு வட்டு வாகல் பாலம்” என்றிவ்வாறாக அபிவிருத்தித் திட்டங்களை முன்வைக்கின்றது .
அனுரகுமார ஆட்சிக்கு வந்து இந்த மாதத்தோடு ஒரு வருடம் ஆகிறது. இந்த ஒரு வருட காலப் பகுதிக்குள் வடக்கு கிழக்குக்கு அதிகமாக வந்த ஒரு ஜனாதிபதி அவர்.அவருடைய அமைச்சர்களும் அவ்வாறு அதிகதடவைவந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வந்த இடத்தில் கச்சதீவுக்கு போன முதலாவது ஜனாதிபதியும் அவர்தான். தமிழக நடிகர் விஜய் தனது கட்சி மேடையில் வைத்து கச்சதீவைப்பற்றிப் பேசிய பின்னர் ஜனாதிபதி அங்கே போயிருக்கிறார். விஜயை சீரியஸாக எடுத்து அவர் கச்சதீவுக்கு போனாரா? அல்லது கச்ச தீவை நாங்கள் இழப்பதற்குத் தயாரில்லை என்ற செய்தியை தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் உணர்த்துவதற்காக அவர் போனாரா ?
இந்த வாரம் ஜனாதிபதியும் அமைச்சர்களும் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களை தொடக்கி வைத்திருக்கிறார்கள்.யாழ்பாணத்தில் மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்தி, மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம், யாழ்.கச்சேரியில் கடவுச்சீட்டு அலுவலகம் முல்லைத்தீவில் புதிய வட்டு வாகல் பாலம், இவற்றுடன் வடக்கிற்கான தெங்கு முக்கோணத் திட்டம் என்பனவற்றை தொடக்கி வைத்துள்ளார்கள்.இந்த வருடத்தில் மாத்திரம் அரசாங்கம் வடமாகாணத்திற்கு 1250 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது என்று அனுரகுமார முல்லைத் தீவில் வைத்து கூறினார்.
நல்ல விடயம்.அபிவிருத்தி வேண்டும். சந்தேகமே இல்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர் தொடர்ந்தும் அந்தப் பாதிப்பில் இருந்து மீளாத ஒரு வாழ்க்கைக்குள் காணப்படுகிறார்கள். எனவே அபிவிருத்தி வேண்டும். அதில் யாருக்கும் சந்தேகமில்லை. ஆனால் அந்த அபிவிருத்தி எந்த நோக்கு நிலையில் இருந்து என்பதுதான் இங்கு முக்கியமான கேள்வி.
அபிவிருத்தி என்பது ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டு உரிமைகளின் அடிப்படையிலானது. எதை அபிவிருத்தி செய்வது? எப்படி அபிவிருத்தி செய்வது? எப்பொழுது செய்வது? எந்த அளவு செய்வது? யாரை வைத்து செய்வது? போன்று எல்லாவற்றையும் தீர்மானிப்பதற்கு அந்த மக்கள் கூட்டத்திற்கு உரிமை இருக்க வேண்டும். ஆனால் தமிழ் மக்களுக்குரிய அப்படிப்பட்ட கூட்டு உரிமைகளை அதாவது அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் இனப்பிரச்சினைக்கான தீர்வு எதுவும் எட்டப்படாத ஒரு வெற்றிடத்தில், அரசாங்கம் அபிவிருத்தியை ஒரு தந்திரமாக முன்னெடுக்கின்றதா?
இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்படும் வரையிலும் அபிவிருத்தியை நிறுத்தக்கூடாது என்பதையும் இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது.ஆனால் எங்கே அபிவிருத்தியை சந்தேகிக்க வேண்டி வருகிறது என்றால், இனப் பிரச்சினையை ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக வியாக்கியானப்படுத்தி தமிழ் மக்களின் பொருளாதார வாழ்வை மேம்படுத்தினால் அவர்கள் இனரீதியாக போராட மாட்டார்கள் என்ற வியூகத்தின் கருவியாக அபிவிருத்தி முன்னெடுக்கப்படும் போதுதான் அதைத்தமிழ் மக்கள் சந்தேகிக்க வேண்டி வருகிறது.
இனப் பிரச்சினை ஒரு பொருளாதாரப் பிரச்சினையல்ல, தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதனால் இனப்பிரச்சினை இல்லாமல் போய்விடாது.தமிழ் மக்கள் அபிவிருத்தியக்காக போராடுகிறார்கள் என்று கூறுவதை விடவும் அபிவிருத்தி செய்வதற்கான உரிமைக்காகப் போராடுகிறார்கள் என்பதுதான் பொருத்தமானது.
தமது அபிவிருத்தியைத் தாமே திட்டமிடுவதற்கு வேண்டிய கூட்டு உரிமைகளைக் கொண்டிராத ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் அரசாங்கம் இனப் பிரச்சினையை ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக வியாக்கியானப்படுத்தும் விதத்தில் அபிவிருத்தியை முன்னெடுப்பதுதான் இங்கு பிரச்சனை.
இங்கு ஒரு உதாரணத்தைச் சுட்டிக் காட்டலாம். கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வந்த ஜனாதிபதி மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்தியை தொடக்கி வைத்திருக்கிறார். மயிலிட்டி துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. மயிலிட்டி துறைமுகமானது 1980 களில் வடக்கின் மிகப்பெரிய முக்கிய மீன்பிடித் துறைமுகமாக விளங்கியது. வடக்கின் மொத்த கடலுணவு உற்பத்தியில் ஆகக் கூடுதலான தொகை இங்குதான் உற்பத்தி செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 45 விகிதம் என்று ஒரு புள்ளி விவரம் உண்டு. வடக்கில் மட்டுமில்ல முழு இலங்கைத் தீவிலும் ஒப்பீட்டளவில் முன்னணி கடல் வாணிபத் துறைமுகமாக மயிலிட்டி காணப்பட்டது. ஆனால் இப்பொழுது அது சோபை
யிழந்துவிட்டது. யுத்தம் அதைத் தின்று விட்டது. யுத்த காலத்தில் அது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற பின் அது வடக்குப் படைக் கட்டளை மையத்தின் ஒரு பகுதியாக மாறியது. இப்பொழுதும் அது படைத்தரப்பின் நிழலில்தான் காணப்படுகிறது. அது மட்டுமல்ல சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரையும் அந்த பகுதிக்குள்தான் காணப்படுகிறது. அதாவது கடந்த 16 ஆண்டுகளில் திட்டமிட்டு சிங்களமயப்படுத்தப்படும் ஒரு பிரதேசத்துக்குள் அந்த துறைமுகம் அமைந்திருக்கிறது.
எனவே அதை அபிவிருத்தி செய்வது என்பது முதலில் அந்த பகுதியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடந்து கொண்டிருக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலை நிறுத்த வேண்டும். அதைவிட முக்கியமாக அதற்கு முதலில் அந்த பகுதியை முழுமையாக ராணுவ மய நீக்கம் செய்ய வேண்டும்.
ஆனால் அநுர யாழ்ப்பாணம் வந்த பொழுது என்ன செய்தார்? ஒருபுறம் மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திக்கான வேலைகளைத் தொடக்கி வைத்தார். இன்னொரு புறம் தையிட்டி விஹாராதிபதியிடம் ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார். மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தியும் தையிட்டி விகாரைக்கான அங்கீகாரமும் ஒன்றுக்கொன்று முரணானவை. இங்கேதான் தமிழ் மக்கள் சந்தேகப்படுகிறார்கள்.
தமிழ் மக்கள் நீண்ட கடல் எல்லையை கொண்ட ஒரு மக்கள் கூட்டம். அந்த நீண்ட கடல் எல்லை இப்பொழுது பெருமளவுக்கு இலங்கை அரச படைகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றது. கடற்கரைகள் நீட்டுக்கும் பயணம் செய்யும் ஒருவர் வடக்கு கிழக்குக் கடற்கரைகள் எந்தளவுக்கு கடற் படையினரின் கண்காணிப்புக்குள் உள்ளன என்பதனைக் கண்டுபிடிக்கலாம். எனவே தமிழ் கடல் தமிழ் மக்களுக்கு உரியது என்ற அடிப்படையில்தான் கடல் சார்ந்த எந்த ஒரு அபிவிருத்தியையும் முன்னெடுக்கலாம்.
ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களின் கடல் உரிமை, நில உரிமை போன்ற அடிப்படைக் கூட்டு உரிமைகள் விடயத்தில் எதையும் கதைப்பதில்லை. அதாவது கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் தமிழ் மக்களை ஒரு தேசிய இனம் என்றும் சுயநிர்ணைய உரிமையைக் கொண்ட தேசிய இனம் என்றும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் அவர்கள் இப்பொழுதும் இல்லை. மாறாக இன முரண்பாடுகளுக்கு காரணம் முன்னைய அரசாங்கங்கள் என்பது போலவும் இப்பொழுது இன முரண்பாடுகள் இல்லை என்பது போலவும் அவர்கள் காட்டிக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
இனங்களுக்கு இடையிலான மோதல் எனப்படுவது தாங்கள் பொறுப்பேற்கத் தேவையில்லாத ஒரு இறந்த காலம் என்று பேசிய மக்கள் சக்தி தட்டிக்கழித்து விட்டுப் போக முடியாது. பொறுப்புக் கூறல் என்று வரும் பொழுது இப்பொழுது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்ற அடிப்படையில் அவர்கள் இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூற வேண்டும். ஏனென்றால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பே பொறுப்பு. தேசிய மக்கள் சக்தியானது அதே சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்புக்குத்தான் தலைமை தாங்கின்றது. அதனால்தான் சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரையின் விகாரதிபதியிடம் அனுர ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.
எனவே அனுர தெரிவு செய்யப்பட்டு கடந்த ஓராண்டு காலப்பகுதிக்குள் அவர் தலைமையிலான அரசாங்கம் வடக்கு கிழக்கில் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ் மக்களிடம் ஆழமான சந்தேகங்கள் உண்டு. அதிலும் குறிப்பாக தமிழ் பகுதிகளில் வடக்கைத்தான் அவர் அதிகம் குவி மையப்படுத்துவதாகத் தெரிகிறது.கிழக்கு அதைவிட குறைந்த அளவே குவிமயப்படுத்தப்படுகிறது. இதிலும் வடக்குக் கிழக்கைப் பிரித்துக் கையாளும் ஒர் உத்தி தெரிகிறது.வடக்கைச் சமாளித்தால் கிழக்கு பெரிய பிரச்சினையாக இருக்காது என்று அவர்கள் கருதுவது போலவும் தெரிகிறது. அதாவது தமிழர் தாயகத்தை அவர்கள் வெவ்வேறு பிராந்தியங்களாகப் பிரித்துக் கையாள முற்படுகிறார்கள். இந்த இடத்தில் ஒரு பழைய கதையைச் சுட்டிக்காட்ட வேண்டும். வடக்கையும் கிழக்கையும் சட்டரீதியாகப் பிரித்தது ஜேவிபிதான். அவ்வாறு பிரித்ததைக் குறித்து இன்று வரை அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை. அது மன்னிப்புக் கேட்க வேண்டிய ஒரு விடயமும் அல்ல என்று அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகம் என்ற அடிப்படை விடயத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் இருப்பதைக் கண்டு ஒரு பகுதி தமிழர்கள் புளுகமடைகிறார்கள்.புதுக்குடியிருப்பில் ஒரு வீட்டின் முன் விறாந்தையில் அனுர ஒரு குழந்தையைத் தூக்கி விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து ஒரு பகுதி தமிழர்கள் பரவசம் அடைகிறார்கள்.எது எதற்கெல்லாம் சந்தோஷப்பட வேண்டும்; எதையெல்லாம் கொண்டாட வேண்டும் என்று விவஸ்த்தையே இல்லாமல் போய்விட்டது. ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் நிற்கும் போது மட்டும் கிட்டத்தட்ட ஏழு எலும்புக்கூடுகள் செம்மணியில் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
செம்மணியும் உட்பட எல்லாப் புதைகுழிகளின் விடயத்திலும் விசாரணைகள் வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடக்கும் என்று அரசாங்கம் திரும்பத் திரும்ப கூறி வருகிறது. ஆனால் இந்த விசாரணைகளின் முடிவில் குற்றம் சாட்டப்படும் படைத்தரப்பு தண்டிக்கப்படுமா என்பதுதான் இங்குள்ள கேள்வி.ஏற்கனவே சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிற நாவற் குழி வழக்கில் -24 பேர் ஒரு சுற்றி வளைப்பின் பின் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் – தீர்ப்பு எப்படி அமையும் என்பதனை தமிழ் மக்கள் எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேட்கவில்லை. உண்மையைக் கண்டுபிடிக்கத்தான் அவர்கள் விரும்புகிறார்கள் என்று ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே அனுர கூறியிருக்கிறார். அவர் இப்பொழுதும் அதே நிலைப்பாட்டோடுதான் காணப்படுகிறாரா என்பதனை செம்மணி நாவற்குழி வழக்குகள் வெளியே கொண்டு வரும். அப்பொழுது கடந்த ஓராண்டு காலத்துக்குள் நிகழ்ந்த அபிவிருத்திகளுக்குப் பின்னால் இருக்கும் உள்நோக்கங்களைத் தமிழ் மக்கள் கண்டுபிடிக்கக் கூடும்.
























