நேபாளத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக நேற்று இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, சமூகவலைதளங்களை நேபாள அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை பாதுகாப்புப்படையினர் தடுக்க முற்பட்டதால் கலவரம் வெடித்தது. இந்த கலவரம் நாடு முழுவதும் பரவியது. நாடாளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் 30 பேர் உயிரிழந்தனர். அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்தார். இதன் மூலம் நேபாளத்தில் கே.பி.சர்மா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. ஜனாதிபதி ராம் சந்திரா பவுடலும் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியான நிலையில் ராம் சந்திரா பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிரதமர் ராஜினாமா செய்ததையடுத்து ராணுவம் கட்டுப்பாட்டின்கீழ் நேபாளம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், போராட்டங்களை கைவிடும்படி இளைஞர்களுக்கு ராணுவ தளபதி அழைப்பு விடுத்தார். இந்நிலையில், பிரதமர் கே.பி.சர்மா பதவி விலகி அவரது ஆட்சி கவிழ்ந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் நாட்டின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க அழைப்பு விடுத்தனர். அதன்படி, போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் இணையதளம் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த ஆலோசனையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நேபாளத்தின் இடைக்கால தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டார்.
























