”யாழ்ப்பாணத்திற்கு குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாளே வந்து விட்ட ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் முழுவதும் தங்கி நின்ற போதும்,செம்மணியை வாகனத் தொடரணியாகக் கடந்து பயணித்த போதிலும்,செம்மணி மனித புதைகுழியை சென்று பார்வையிடவில்லை.செம்மணிப் பகுதியில் வாகனத்தை மெதுவாக செலுத்திக் கூட அப்பகுதியை பார்க்க அவர் விரும்பவில்லை” – கே.பாலா

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 1 ஆம் திகதி வடக்கிற்கு இரு நாள் விஜயம் செய்து பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தமை, கச்ச தீவுக்கு அதிரடி விஜயம் மேற்கொண்டமை எந்தளவுக்கு தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருந்ததோ அதற்கும் மேலாக ஜனாதிபதி செம்மணி மனிதப்புதைகுழி அகழ்விடத்திற்கு செல்லாது புறக்கணித்தமை தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1 ஆம் திகதி வடக்கிற்கு இரு நாள் விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார ,யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் 3ஆவது கட்டத்தின் பணிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் யாழ். பிரதேச அலுவலகத் திறப்பு ,யாழ்ப்பாணம், மண்டை தீவு பகுதியில் நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள நவீன கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் ,உலக தென்னை தினத்தை முன்னிட்டு புதுகுடியிருப்பில் ‘கப்துரு சவிய’ தேசிய வேலைத்திட்டம், முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் போன்ற அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
அத்துடன் இலங்கை -இந்திய மீனவர்களினாலும் இலங்கை-தமிழக அரசியல்வாதிகளினாலும் கடும் சர்ச்சைக்குரியதாக்கிவிட்டுள்ள கச்சதீவுக்கும் அதிரடி கண்காணிப்பு விஜயம் செய்து ”இதுஎங்க ஏரியா உள்ளே வராதே”என்ற செய்தியை தமிழக,இந்திய அரசுகளுக்கும் இந்திய மீனவர்களுக்கும் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் செய்தியை கூறியதுடன் அங்கு சென்ற முதல் இலங்கை ஜனாதிபதி என்ற பெயரையும் அநுரகுமார திசாநாயக்க வரலாற்றில் பதிவு செய்து கொண்டார்.
வடக்கிற்கான விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார பங்கேற்கும் நிகழ்வுகள், பயணம் செய்யும் இடங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதில் ஏற்கனவே திட்டமிடப்படாத அல்லது திட்டமிட்டும் வெளிப்படுத்தப்படாத பயணமாக கச்சதீவுக்கான ஜனாதிபதி அநுரகுமாரவின் கடற்பயணம் அமைந்திருந்ததுடன் அந்தப்பயணம் இலங்கையர்களுக்கு குறிப்பாக வடக்கு மீனவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் மகிழ்ச்சியை, நம்பிக்கையை கொடுத்திருந்தது.
அதேநேரம் செப்டம்பர் 1 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு இரு நாள் விஜயம் செய்யவுள்ளதாக அறிவிப்புக்கள் வெளியான நிலையில் இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி நாட்டினதும் சர்வதேசத்தினதும் கவனத்தை ஈர்த்துள்ள செம்மணி மனிதப்புதைகுழி அகழ்விடத்திற்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடமும் தமிழ் அரசியல் தரப்புக்களிடமும் ஏற்பட்டிருந்தது.அதைவிட ஜனாதிபதி செம்மணி மனிதப்புதைகுழி அகழ்விடத்திற்கு வருகைதர வேண்டுமென்ற வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டிருந்தன.
இதற்கு வலுசேர்க்கும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்திற்கு விஜயம் செய்வார் என முன்னதாக, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும்உறுதியளித்திருந்தார்.அதுமட்டுமன்றி அரச தரப்பின் பல்வேறு தரப்பினராலும் உறுதியுமளிக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் வைத்து ஜனாதிபதி உரையாற்றும் போது, ”செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் எவ்வித மாற்றமும் இல்லை. செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணைகளில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாது” என தமிழ் மக்களுக்கு உறுதியளித்த நிலையில் அவர் எப்படியும் செம்மணிக்கு வந்து மனிதப்புதைகுழிகளை பார்வையிடுவார் என்ற நம்பிக்கை எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருந்தது.
ஆனால் யாழ்ப்பாணத்திற்கு குறிப்பிட்ட நாளுக்கு முதல் நாளே வந்து விட்ட ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் முழுவதும் தங்கி நின்ற போதும் செம்மணி வீதியை வாகனத் தொடரணியாக ஜனாதிபதி அநுரகுமார கடந்து பயணித்த போதிலும்,செம்மணி மனித புதைகுழியை சென்று பார்வையிடவில்லை.செம்மணிப் பகுதியில் வாகனத்தை மெதுவாக செலுத்திக் கூட அப்பகுதியை பார்க்க அவர் விரும்பவில்லை. இது தமிழ் மக்களிடம் கடும் ஏமாற்றத்தையும் விசனத்தையும் ஏற்படுத்திவிட்டதுடன் இலங்கை ஜனாதிபதிகள் வரிசையில் ஜனாதிபதி அநுரகுமாரவையும் ஒரு மாற்றமில்லாத ஜனாதிபதியாக அடையாளப்படுத்தியுள்ளது.
ஜே .வி.பி.-தேசியமக்கள் சக்தி அமைச்சர்,எம்.பி.க்கள் ஏற்கனவே செம்மணி மனிதப் புதைகுழியை சென்று பார்வையிட்டுள்ளனர். இலங்கையில் செம்மணி மட்டுமன்றி, கொக்குத்தொடுவாய், மண்டைதீவு, மன்னார், கொழும்பு துறைமுகம் என பல இடங்களில் மனிதப் புதைகுழிகள் உள்ளநிலையில் இந்த புதைகுழிகளின் உரிமையாளர்கள் ரணில் மற்றும் ராஜபக்சக்களே தவிர நாம் அல்ல.இந்த புதைகுழிகள் ,காணலாலாக்கப்பட்டோருடன் தொடர்புடைய சிலர் வடக்கிலும் உள்ளனர். செம்மணி மனிதப் புதைகுழியுடன் தொடர்புடையவர்கள் வடக்கில் உள்ளூராட்சி சபைகளுக்கும் தெரிவாகியுள்ளனர்.இந்த மனிதப்புதைகுழிகள் தொடர்பிலான ,விசாரணைகள் போன்றவற்றுக்கு நாம் போதியளவு நிதியை ஒதுக்கி வசதிகளை செய்து கொடுத்துள்ளோம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க பகிரங்கமாகவே அறிவித்திருந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார செம்மணிக்கு செல்லாதது ஏன்?கச்சதீவுக்கு சென்றது ஏன்?
இதில் முதல் கேள்விக்கு பதில்களைத் தேடினால் முதல் பதில் தமக்கோ, தமது கட்சிக்கோ, தமது அரசுக்கோ தொடர்பில்லாத செம்மணி மனிதப்புதைகுழியை ஜனாதிபதி அநுரகுமார பார்வையிடாததற்கு இனவாத சிந்தனையும் சிங்களவர்களை மட்டும் திருப்திப்படுத்தும் அரசியலுமே பிரதான காரணம். இரண்டாவது பதில் இந்த மனிதப்புதைகுழியுடன் இராணுவத்தினர் குற்றம்சாட்டப்படும் நிலையில் முப்படைகளின் தளபதியாக ஜனாதிபதி அநுரகுமார செம்மணி மனிதப்புதைகுழி அகழ்விடத்திற்கு சென்று பார்வையிட்டு கருத்துக்களைக் கூறி இராணுவத்தின் வெறுப்பை, அதிருப்தியை சம்பாதிக்க விரும்பவில்லை.
ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மனிதபுதைகுழிப் பகுதிக்கும் விஜயம் செய்திருந்தால் இலங்கையில் அகழப்படும் மனிதப் புதைகுழிப் பகுதியை சென்று பார்வையிட்ட முதல் ஜனாதிபதி என்ற வரலாற்று பதிவில் ஜனாதிபதி அநுரகுமார பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். தமிழ் மக்கள் மனங்களிலும் அவர் நீங்கா இடம்பிடித்திருப்பார். ஆனால் சிங்களவர்களினால், சிங்கள படைகளினால் ஏற்படுத்தப்பட்ட மனிதப் புதைகுழியை பார்வையிட்ட முதல் ஜனாதிபதி என சிங்களவர்களினால் அநுரகுமார புறக்கணிக்கப்பட்டிருப்பார், வெறுக்கப்பட்டிருப்பார் விமர்சிக்கப்பட்டிருப்பார். ஆகவே தான் சிங்களவர்களே முதல் விருப்பத் தெரிவு,அவர்களை பகைக்க முடியாது என்ற அடிப்படையில்தான் ஜனாதிபதி அநுரகுமார செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு இடத்திற்கு செல்லவில்லை.
இரண்டாவது கேள்விக்கான பதில்.யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார தனது பயண நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத அல்லது உள்ளடக்கப்பட்டும் இறுதிவரை வெளிப்படுத்தப்படாத கச்சதீவு பயணத்தை மேற்கொண்டுள்ளார் .இந்தப் பயணம் இந்தியாவை கோபப்படுத்தும், இந்தியாவுடன் பகைக்க நேரிடும்,அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும், அரசியல் ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்தும் எனத் தெரிந்தும் தென்பகுதி சிங்களவர்களையும் ,வடக்குத் தமிழர்களை திருப்திப்படுத்த,எமது நிலத்தின் ஒரு அங்குலத்தை யேனும் விட்டுக்கொடுக்க நாம் தயாரில்லையென்பதனை வெளிப்படுத்த,நான் தேசப்பற்றாளன் என்பதனை நிரூபிக்க,எந்தவொரு ஜனாதிபதியும் செய்யாததை அநுரகுமார செய்தார்என பேச வைக்கவென சிங்கள,தமிழ் அரசியல் ஆதாயத்திற்காகவே ஜனாதிபதி கச்சதீவுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு வரலாற்றுப்பதிவை ஏற்படுத்தினார்.
இந்த செம்மணி மனிதப்புதைகுழி புறக்கணிப்பு மூலம் சிவப்பு சட்டைக்காரர்களான ஜே .வி.பி.யினர் இன்னும் இனவாதத்திலிருந்து மாறவில்லை .அவர்கள் ஒருபோதுமே மாறப் போவதில்லை.”மாற்றம்”, ”புதிய திசை”என்பதெல்லாம் வெறும் கோஷம். என்னதான் தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியைப் போட்டு ”மாற்றம்”ஏற்படுத்த வந்தவர்களாக, புதிய திசையில் நாட்டையும் மக்களையும் பயணிக்க வைக்க வந்தவர்களாக தம்மைக் காட்டிக்கொள்ள ஜனாதிபதி அநுர குமார தலைமையிலான ஜே .வி.பி.யினர் மாறு வேடத்தைப் போட்டாலும் ”போக்கிரி”படத்தில் வரும் வடிவேலு போல் ”மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துட்டியே”என்ற கதையாகவே தமது இனவாத சிந்தனையிலிருந்து அவர்கள் மாறவே இல்லை. மாறப்போவதுமில்லை என்பதையே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயமும் செம்மணி மனிதப்புதைகுழி விடயமும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ரோஹண விஜேவீர ,சோமவன்ச அமரசிங்க,தற்போது அநுரகுமார தலைமைவரை ஒரு போதுமே ஜே .வி.பி.யினர் தமிழ் மக்களுக்கு ஆதரவாக ஒரு துரும்பைக்கூட அசைத்தவர்கள் அல்ல. அரசுக்கு எதிராக ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும் ஜே .வி.பி.யினர் ஒன்றும் புனிதமானவர்களோ மாற்றமானவர்களோ அல்ல.அவர்களும் பக்கா இனவாதிகள்தான்.ஜே .வி.பி.யாக பகிரங்கமாக இனவாத முகத்தை காட்டி வந்த அவர்கள் தற்போது தேசிய மக்கள் சக்தியாக போலி முகத்தை தமிழ் மக்களுக்கு சர்வதேசத்துக்கும் காட்டுகின்றார்கள்.
தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை அழிக்க 50000 சிங்கள இளைஞர்களை இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு செய்து கொடுத்தவர்கள்.அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கு மிடையிலான நோர்வே அனுசரணையிலான சமாதான முயற்சிகளை சீர்குலைத்து யுத்தத்துக்கு தூண்டியவர்கள் .அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான சுனாமி பொதுக்கட்டமைப்பை கடுமையாக எதிர்த்து மக்களைத்தூண்டி போராட்டங்களில் ஈடுபட்டவர்கள், இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பயனாக இணைக்கப்பட்ட தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கு மாகாணங்களை வழக்கு தாக்கல் செய்து பிரித்தவர்கள். தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை அழித்தொழிக்க ஆட்சிபீடமேறிய அனைத்து அரசுகளுக்கும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியவர்கள் ஜே .வி.பி.யினர்.
இவ்வாறானவர்கள் ”மாற்றம்”என்ற கோஷத்தோடும் ”புதிய திசை” என்ற வாக்குறுதியுடனும் தேர்தல்களில் களமிறங்கிய போது இவ்வாறானவர்களை தமிழ் மக்கள் நம்பி வாக்களித்தமை ,தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார்கள், தமிழ் மக்களுக்கு புதிய திசையை காட்டுவார்கள் என்று எதிர்பார்த்தமையெல்லாம் ”இறைச்சிக் கடைக்காரனிடம் ஆடு கருணையை எதிர்பார்ப்பதற்கு”ஒப்பானது. ஜனாதிபதி அநுரகுமார அரசின் ”மாற்றம்”தமிழ் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுக்கும் என்பதனை புதிய திசையில் பயணிக்க விரும்பிய தமிழ் இளையோர்கள் இன்னும் சிறிது காலத்தில் புரிந்து கொள்வார்கள்.
























