‘’ நாட்டிற்குள் அல்லது வெளியே இருந்து யாராவது ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதித் திட்டம் தீட்டினால் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என ஜனாதிபதி அநுரகுமார சூளுரைத்து முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வீடு பறிப்பு என்ற அதிரடிகள் அரங்கேறும் நிலையில்,எனது அரசியல் பயணம் தொடரும்.நாட்டில் மீண்டும் மஹிந்த சூறாவளி வீசும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் பதிலுக்கு சூளுரைத்துள்ளார்”
கே.பாலா

இலங்கையிலே குடும்ப அரசியல் ஆதிக்கம் என்பது பெருமளவுக்கு பண்டாரநாயக்க குடும்பத்துடனேயே அடையாளப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்துவந்தது. சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை மகிந்த ராஜபக்ஷ கைப்பற்றியதையடுத்து கட்சிக்குள்ளும் ஆட்சியதிகாரத்திலும் அவரது குடும்பத்தவர்களின் அரசியல் செல்வாக்கு முன்னைய அரசியல் ஆதிக்கக் குடும்பங்கள் காட்டியிராத அளவுக்கு முனைப்புப் பெற்றது. 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற உடனடியாகவே மகிந்த ராஜபக்ச தனது குடும்ப அரசியலை பலப்படுத்தினார்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எப்படி பண்டாரநாயக்க குடும்பத்துக்கு சொந்தமானதாகவிருந்ததோ ஐக்கிய தேசியக்கட்சி எப்படி சேனநாயக்கவின் குடும்பத்துக்கு சொந்தமானதாகவிருந்ததோ அதேபோன்றே ராஜபக்ச குடும்பத்துக்காகவே தாமரை மொட்டு சின்னத்தைக்கொண்ட பொதுஜன பெரமுன கட்சி மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்டது.இந்த குடும்ப ஆட்சி 2005 ஆம் ஆண்டும் முதல் 2022 ஆம் ஆண்டுவரை இலங்கையை தமது குடும்ப சொத்தாகவே பயன்படுத்தியது.
அண்ணன் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி, அதன்பின்னர் தம்பி கோத்தபாய ஜனாதிபதி,அண்ணன் மகிந்த பிரதமர்,அடுத்த அண்ணன் சமல் ராஜபக்ச சபாநாயகர்,அடுத்த தம்பி பசில் ராஜபக்ச அமைச்சர்,பிரதமர் மகிந்தவின் மகன் நாமல் ராஜபக்ச அமைச்சர் .சபாநாயகரின் சமல் ராஜபக்சவின் மகன் சஷீந்திர ராஜபக்ச அமைச்சர் என ஒரு குடும்பமே நாட்டை ஆட்சி செய்து கபளீகரம் செய்த நிலையில் மக்கள் புரட்சியின் மூலம் ராஜபக்ச குடும்ப அரசில் ஒழிக்கப்பட்டது .”மாற்றம்”என்ற பெயரில் சிவப்பு சட்டைக்காரர்களான ஜே .வி.பி.-தேசியமக்கள் சக்தி ஆட்சி மலர்ந்தது.
இப்போது இந்த பழைய வரலாறு ஏன் என்ற கேள்வி எழலாம் . அதற்கு காரணம் உண்டு. கிட்டத்தட்ட 18 வருடங்களாக நாட்டை சூறையாடிய , தமிழ் தேசிய இனத்தை நடைபிணமாக்கி அதன் தேசிய போராட்டத்தை அழித்த, ராஜபக்ச குடும்ப ஆட்சியாளர்களாக ,இனவாதிகளாக , நாட்டின் தேசிய வீரர்களாக தம்மை இனம்காட்டுவதில் பெருமையும் கர்வமும் கொண்ட அதே ”ராஜபக்ச”குடும்பத்தின் ‘ தாமரை மொட்டு”ஆட்சி மீண்டும் துளிர் விடக்கூடிய அரசியல் சூழ்நிலைகள் நாட்டில் ஏற்பட்டு வருவதனால்தான் இந்த ராஜபக்ச குடும்ப ஆட்சி தொடர்பான சிறு முன்னோட்டம்.
தமது 18 வருட குடும்ப ஆட்சியினால் நாட்டை சூறையாடி தமது குடும்பத்தை வளப்படுத்தியதனால் மக்கள் மனதில் கருகிப்போன ராஜபக்சக்களின் ”தாமரை மொட்டு ”ஆட்சி மீண்டும் மலருமா? அதன் மூலம் மீண்டும் ராஜபக்ச குடும்பம் நாட்டில் கோலோச்சுமா? என்ற கேள்விகளே இன்று இலங்கை அரசியலில் அதிகமாகவுள்ளன.அந்தளவுக்கு அநுரகுமார அரசின் ”கிளீன் எதிரிகள்” வேட்டை தீவிரமடைந்துள்ள நிலையில் ரணில், ராஜபக்ச அனுதாப அலைகளும் மேலெழத்தொடங்கியுள்ளன.
இவ்வாறான ஒரு நிலையில்தான் அண்மைய பாராளுமன்ற அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒரு ஆக்ரோஷமான உரையை நிகழ்த்தி எதிர்கட்சிகளை கடுமையாக சாடியிருந்தார். ஜனாதிபதியின் இந்த ஆக்ரோஷமான உரைக்கு எதிர்க்கட்சிகள் தனது ஆட்சிக்கு கொடுக்கும் குடைச்சல்கள், முன்னெடுக்கும் பிரசாரங்கள் மட்டும் காரணமின்றி ராஜபக்சக்களின் ” தாமரை மொட்டு”க்கு நாட்டில் மீண்டும் அதிகரித்துவரும் மக்கள் ஆதரவும் அது தொடர்பில் அரசுத்தரப்புக்கு கிடைத்துள்ள புலனாய்வு எச்சரிக்கைகளுமே பின்னணியில் இருந்தன
அதனால்தான் ” நாட்டிற்குள் அல்லதுவெளியே இருந்து யாராவது இந்த நாட்டை கட்டியெழுப்பும் பயணத்தை சதித்திட்டங்கள்மூலம் நாசப்படுத்த முயன்றால், அவர்களை தோற்கடிக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுப்போம்.எனவே, ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் தீட்டும் எண்ணம் வந்தாலும், அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.பொருளாதார சரிவில் விழுவதன் மூலம் இந்த நாடு வீழ்ச்சி அடையும் என்று எதிர்க்கட்சிநினைத்தால், அது நடக்காது. சமீபத்திய காலங்களில் பொருளாதாரத்தின் மீதான அழுத்தம்காரணமாக பொருளாதாரம் சரிந்தது. பின்னர், அரசியல் நெருக்கடிகள் காரணமாகஅரசாங்கங்கள் வீழ்ச்சி அடைந்தன. பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடிஅரசாங்கங்கள் வீழ்ச்சி அடைந்தன.தேர்தல்கள் மூலம் அரசாங்கங்கள் வீழ்ச்சி அடைந்தன. இந்த அரசாங்கம் அந்த மூன்றுவழிகளில், எதிலும் வீழ்ச்சி அடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்”எனப் பேச வைத்ததுடன் ”கிளீன் எதிரிகள்” வேட்டையையும் தீவிரப்படுத்த வைத்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார இவ்வாறு பேசுவதற்கு அவர் மீதும் அவரின் அரசு மீதும் மக்கள் வைத்த நம்பிக்கை வீணடிக்கப்பட்டதும் ஒரு காரணம். அதாவது ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான ஜே .வி.பி.- தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் ஜே .வி.பி.யின் கை ஓங்கி தேசிய மக்கள் சக்தியின் ”திசைகாட்டி” சரியான திசை நோக்கி செயற்படத் தவறியதால் இவர்களின் ”மாற்றம்”என்ற கோஷம் மீது மக்கள் வைத்த எதிர்பார்ப்பு,நம்பிக்கை வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.அதுமட்டுமன்றி ராஜபக்சக்களின் குடும்பம் மீது குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் அவரது குடும்பத்தையும் இலக்கு வைத்து அரச வீட்டைப் பறித்து மெதமுலானாவுக்கு விரட்டியமையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமையும் அநுரகுமார அரசு முன்னெடுத்து வரும் விசாரணை,கைது, விளக்கமறியல்,வழக்குகள் போன்ற விடயங்களும் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாது ஊழல்.மோசடி எனக் கூறிக்கொண்டு அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதுமே அநுரகுமார அரசை வீழ்ச்சிப்பாதைக்கும் ராஜபக்சக்களை மீண்டும் எழுச்சிப் பாதைக்கும் கொண்டு வரத் தொடங்கியுள்ளது.
அது மட்டுமன்றி மஹிந்த ராஜபக்சவை அவரின் உத்தியோகபூர்வ அரச மாளிகையிலிருந்து வெளியேற்ற அநுரகுமார அரசு மேற்கொண்ட நடவடிக்கை .அதற்காக ராஜபக்ச குடும்பம் மீது அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட அவதூறான பிரசாரங்கள் கூட ராஜபக்ச குடும்பம் மீதான ஒரு அனுதாப அலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டுள்ளது. ஏனெனில் எந்தவொரு ஆட்சியாளர்களை விடவும் ராஜபக்சக்கள் குறிப்பாக மஹிந்த ராஜபக்சவும் அவரது புதல்வர்களும் மக்களுடன் (சிங்கள மக்கள் )மிகவும் நெருக்கமானவர்கள். மக்களுடன் மக்களாக பழகுபவர்கள். இன்றும் மஹிந்த ராஜபக்சவுக்குள்ள மக்கள் மரியாதையை பொது இடங்களில் காண முடியும். கொழும்பிலுள்ள அரச வீட்டிலிருந்து மஹிந்த ராஜபக்ச வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் தனது சொந்த ஊரான மெதமுலானாவுக்கு சென்றபோது அவரை வரவேற்க வீதி வீதியாக திரண்ட மக்கள் வெள்ளம் அநுரகுமார அரசை ஆட்டம் காண வைத்துள்ளது. இவ்வாறான அநுரகுமார அரசின் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ராஜபக்ச குடும்பத்திற்கான ஆதரவாக மக்கள் மத்தியில் மாறி வருகின்றது.
இவ்வாறான நிலையில் தான் ”இலங்கையில் உள்ள பல வெளிநாட்டுத் தூதரகங்கள் நாமல் ராஜபக்சவை நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக அடையாளம் கண்டுள்ளன. சமீபத்திய தூதரக விஜயங்களின் போது நாம் சந்தித்த பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள், ராஜபக்சக்களின் அரசியல் எதிர்காலம் குறித்து இதேபோன்ற எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தினர். பல்வேறு நாடுகளின் தலைவர்கள் நாமல் ராஜபக்ஸ உங்கள் தலைவர் , அடுத்த ஜனாதிபதி என்று எம்மிடம் கூறினர். அதுமட்டுமன்றி பொதுமக்களுடனான கலந்துரையாடல்களில் , குறிப்பாக கிராம மட்டத்தில், ராஜபக்ச க்களுக்கு குறிப்பாக நாமல் ராஜபக்ச வுக்குஆதரவு அதிகரித்து வருகின்றது என்று ராஜபக்சக்களின் ”ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன”வின் முன்னாள் அமைச்சரும் முக்கிய உறுப்பினரும் ராஜபக்ச குடும்ப விசுவாசியுமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
ஒரு கட்சியாக, நாமல் ராஜபக்சவின் பயணம் சிறப்பாக முன்னேறி வருவதாக நாங்கள் நம்புகிறோம். அடுத்த ஜனாதிபதியாக அவர் வருவதைப் பற்றி கிராம மக்கள் ஏற்கனவே பேசத் தொடங்கிவிட்டனர்.நாமல் ராஜபக்ஸவின் அதிகரித்து வரும் செல்வாக்கு குறித்த அச்சம் காரணமாகவே, தற்போதைய அரசாங்கம் பொய்க் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி ராஜபக்சவினரை அவமதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.அவர்களுக்கு பயமாக இருக்கும்போது, அவர்கள் வழக்குகளைத் தாக்கல் செய்து அவரை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். நாமல் ராஜபக்ச வருகிறார் என்பது அவர்களுக்குத் தெரியும். இது குறித்து புலனாய்வுப் பிரிவுகள் ஏற்கனவே தமது அறிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளன,” என்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
ஆட்சி மாற்றத்துக்காக 2029 ஆம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னர்கூட ஜனநாயக வழியில் அது நடக்கலாம். அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்ச என்பது மக்களின் கருத்து என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பேச்சாளரான முன்னாள் எம்.பி. சஜ்ஜீவ எதிரிமான்ன கூறுகின்றார். ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன என்பது உச்சபட்ச கால எல்லை . எனினும், அதற்கு முன்னர் ஆட்சியை மாற்றலாம். இலங்கையில் இதற்கு முன்னர் அப்படி நடந்தும் உள்ளது. பதவி காலம் முடியும்வரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிக்கும் என்பதற்குரிய அறிகுறிகள் இல்லை. அரசியலமைப்பு ரீதியாகக்கூட ஆட்சி மாற்றம் இடம்பெறலாம். ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் நிகழக்கூடும் எனவும் அவர் கூறுகின்றார்.
இவ்வாறான சூழலில் தமிழ் தரப்பில் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி.யும் ”நாமல் ராஜபக்சவே அடுத்த ஜனாதிபதி. அவர் ஜனாதிபதியாக நான் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன்.இதனை நான் அவரிடம் நேரிலும் தெரிவித்துள்ளேன் .அவரின் தந்தை, சித்தப்பா மார் தமிழ் மக்களுக்கு செய்த வேலைகளை அவர் தமிழ் மக்களுக்கு செய்யக்கூடாது என்றும் நேரடியாக கூறியுள்ளேன்.அதற்கான உத்தரவாதத்தை அவர் எனக்கு வழங்கியுள்ளார்” என சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்து ”அடுத்த ஜனாதிபதி நாமல்” என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளதுடன் அதற்கான சந்திப்புக்களில் ராஜபக்சக்கள் ஈடுபட்டுள்ளதனையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் ‘கொழும்பிலுள்ள அரச வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் தனது சொந்த ஊரான மெதமுலானாவுக்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் ‘ராஜபக்சக்களை மட்டும் அல்ல தமக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அத்தனை பேரையும் ஆட்சியாளர்கள் பழிவாங்குகின்றனர். ஆனால் எனது அரசியல் பயணம் தொடரும்.நாட்டில் மீண்டும் மஹிந்த சூறாவளி வீசும் என சூளுரைத்துள்ளார். அத்துடன் அது வேறு சூறாவளியாகவும் இருக்கலாம் என நாமல், ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் மறைமுகமாக குறிப்பிட்டும் கூறியுள்ளார்
எனவே அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நண்பனும் இல்லை பகைவனும் இல்லை இன்றைய ஆட்சியாளர்கள் நாளைய எதிர்க்கட்சியினர். இன்றைய எதிர்க்கட்சியினர் நாளைய ஆட்சியாளர்கள்.இதுதான் அரசியல். எனவே ரணிலின் ”யானை”எழும்பி நடக்க முடியாத நிலையில் இருந்த நிலையில் அநுரகுமார அரசு அதனை எழுந்து ஓட வைத்துள்ளதாலும் சஜித் பிரேமதாசாவின் ”தொலைபேசி ”க்கு சிக்னல் கிடைக்காத நிலையில் அதற்கு சிக்னல் கிடைக்க வைத்துள்ளதாலும் வாடிப்போயிருந்த ராஜபக்சக்களின் தாமரை மொட்டை புத்துணர்ச்சி கொடுத்து மலரும் நிலைக்கு கொண்டுவந்துள்ளதாலும் மீண்டும் ராஜபக்சக்களின் ”தாமரை மொட்டு ”ஆட்சி மலர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதனை தடுக்க ராஜபக்ச குடும்பத்தின் முக்கிய தூண்களை அநுரகுமார அரசு உள்ளே தூக்கி வைத்தாலும் அது அதிசயமல்ல
























