`அனைத்துலக தமிழர் பேரவை ` அமைப்பின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அழைப்பு
(ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
“நாம் பிறந்து வாழ்ந்து கல்வி கற்று அறிவு பெற்று எமது தாய் மண்ணை விட்டு புலம் பெயர்ந்து வந்தாலும் அந்த மண்ணில் இலட்சக் கணக்கானவர்கள் இன்னும் வாழ்ந்த கொண்டிருக்கின்றார்கள். எனினும் அவர்களால் அங்கு தங்கள் வாழ்வைத் தொடர்வதற்கு உரிய அனைத்து கிடைப்பாதாக இல்லை. வாழ்வதற்கு போதிய சுதந்திரமும் கிடையாது.
இவ்வாறான சூழ்நிலையில் அங்குள்ள எமது உறவுகளையும் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு நாம் எமது ஆதரவையும் ஒத்தாசையையும் வழங்க வேண்டும். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நாம் வழங்க முடியாவிட்டாலும் எம்மால் இயன்றளவிற்கு நாம் உதவிகள் செய்ய வேண்டும். எனவே அதற்கான திட்டங்களையும் நாம் தீட்ட வேண்டும்.
அந்த நோக்கங்களுக்காக ஆரம்பிக்கப்பெற்றதுதான் எமது `அனைத்துலக தமிழர் பேரவை ` என்னும் அமைப்பாகும். இந்த அமைப்பின் மூலம் எமது தாயக மண்ணில் வாழும் உறவுகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நாம் நம்பிக்கைகளை விதைக்க வேண்டும்.`
இவ்வாறு கனடாவைத் தளமாகவும் உலகின் பல நாடுகளிலும் கிளைகளைக் கொண்டு இயங்கிவருவதுமான `அனைத்துலக தமிழர் பேரவை` அமைப்பின் தலைவரும் சமூக செயற்பாட்டாளரும் கணக்காளருமான நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் கடந்த செப்டம்பர் 11ம் திகதி வியாழக்கிழமையன்று மாலை மார்க்கம் நகரில் அமைந்துள்ள கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் CTCC Business Centre,மண்டபத்தில் நடைபெற்ற `அனைத்துலக தமிழர் பேரவை` அமைப்பின் ஊடகவியலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பின் போது அழைப்பு விடுத்தார்.
மேற்படி `அனைத்துலகத் தமிழர் பேரவை` (FGT) அமைப்பானது எதிர்வரும் October 10ம் திகதி 11ம் திகதி மற்றும் 12ம் திகதி 2025 ஆகிய மூன்று நாட்களும் University of Toronto Scarborough. மற்றும் Scarborough கொன்வென்சன் சென்றர் விழா மண்டபம் ஆகியவற்றில் நடைபெறவுள்ள “இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான வாய்ப்புகள் – 2025”, ( “Prospects for Integrated Development of the North and East of Sri Lanka – 2025”, )என்னும் தலைப்பிலான மாநாடு தொடர்பாக ஊடகங்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அறியத் தரும் முகமாக நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
மேற்படி கூட்டத்தில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் சமூகச் செயற்பாட்டாளருமான முரளி மற்றும் பேராசிரியர் சந்திரகாந்தன் மற்றும் பலரும் உரையாற்றி பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அத்துடன் வெளிநாடுகள் பலவற்றிலும் இருந்து பலர் இணையவழி ஊடாகவும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
தொடர்ந்து எதிர்வரும் October 10ம் திகதி 11ம் திகதி மற்றும் 12ம் திகதி ஆகிய மூன்று நாட்களும் University of Toronto Scarborough. மற்றும் Scarborough கொன்வென்சன் சென்றர் விழா மண்டபம் ஆகியவற்றில் நடைபெறவுள்ள “இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான வாய்ப்புகள் – 2025”, என்னும் தலைப்பிலான மாநாடு வெற்றிபெற அனைவரும் சேர்ந்து உழைப்போம் என்ற உறுதிமொழியுடன் கூட்டம் நிறைவுற்றது




























