பு.கஜிந்தன்
யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு பூஜை செய்வதற்கு சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் அந்த ஆலயத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று 19ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் பதிவாகியுள்ளது. மானிப்பாய் – சுதுமலை தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் சாருஜன் (வயது 29) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவருக்கு 14ஆம் திகதியில் இருந்து உடல் சுகயீனம் ஏற்பட்டது. இதற்கு மானிப்பாயில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஏழாலை – மயிலங்காடு வைரவர் ஆலயத்தில் குறித்த இளைஞன் பூஜை செய்வதற்காக 19ம் திகதி வெள்ளிக்கிழமையன்று காலை சென்றுள்ளார். இதன்போது அங்கு அவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டதால் அதனை தந்தைக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினார்.
பின்னர் உறவினர்கள் அங்கே சென்று பார்த்தவேளை குறித்த இளைஞன் அசைவற்று காணப்பட்டார். இதன்போது அவரை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். நுரையீரலில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
























