சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். கடந்த 13-ம் தேதி திருச்சியில் அவரது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயணம் தொடங்கியது. இதில் அவரை காண பல்லாயிரக்கணக்கானோர் திரண்ட காரணத்தினால் திருச்சி மாநகரம் ஸ்தம்பித்தது. திருச்சி விமான நிலையத்திலிருந்து மரக்கடை எம்ஜிஆர் சிலை வரை 7 கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்கு 5 மணி நேரம் ஆனது. வழி நெடுகிலும் பிரசார வாகனத்தை பல்லாயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டனர். நள்ளிரவு வெகுநேரம் ஆனதால் திருச்சி மற்றும் அரியலூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு சென்னை புறப்பட்டார். பெரம்பலூர் மாவட்ட பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் விஜயின் இரண்டாம் கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெறுகிறது. இதற்காக விஜய் தனி விமானத்தில் காலை திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு காலை 9:25 மணிக்கு வந்தடைந்தார். நாகை வந்தடைந்த விஜய்க்கு த.வெ.க. தொண்டர்கள் வாளை பரிசாக அளித்தனர். அப்போது புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு த.வெ.க. தொண்டர்கள் வழிவிட்டனர். இந்நிலையில் புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் தொண்டர்கள் மத்தியில் த.வெ.க. தலைவர் விஜய் எல்லோருக்கும் வணக்கம், எல்லோரும் எப்படி இருக்கீங்க… தொண்டர்களை நலம் விசாரித்து விட்டு உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது: நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், வேளாங்கண்ணி மாதா அருளோடு பேசுகிறேன். அண்ணா அவர்களுக்கு ஒரு வணக்கம். பெரியார் அவர்களுக்கு ஒரு வணக்கம். என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம். இப்ப நான் எந்த மண்ணில் நின்று கொண்டு இருக்கிறேன் தெரியுமா… எங்கு திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் தான் நாகப்பட்டினம் மாவட்டம். மதவேறுபாடு இல்லாத மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் நாகை மக்களுக்கு சிரம் தாழ்ந்த ஸ்பெஷல் வணக்கம். என்றும் மீனவர்கள் நண்பன் நான். மீன் ஏற்றுமதியில் 2-வது இடம் வகிக்கும் நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் எந்த வசதியும் செய்யப்படவில்லை. மீனவர்களுக்காக குரல் கொடுப்பதும் அவர்களுடன் துணை நிற்பதும் நமது கடமை. இலங்கை கடந்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து நான் பேசியது குற்றமா? மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் சமயத்தில் நம் தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பது கடமை. நாகப்பட்டினத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்திற்கு எங்கள் ஆட்சி தான் புரட்சி என அடுக்குமொழியில் பேசுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
























