நாட்டில் திலீபனின் நினைவு நாட்களை உரிமை கோரவோ அல்லது நினைவுத் தூபிக்கு யார் வரவேண்டும் வரக்கூடாது என்று தடுப்பதற்கோ ஆட்கள் உண்டு. ஆனால் திலீபனைப்போல உணவின்றி நீரின்றி உண்ணாவிரதம் இருப்பதற்கு எத்தனை பேர் உண்டு? அப்படி ஒரு கொஞ்சம் பேர் இருந்திருந்தாலே கடந்த 16 ஆண்டுகளில் தமிழ் அரசியல் இவ்வளவு மோசமாகத் தேங்கி நிற்கும் ஒரு நிலைமை வந்திருக்காது.
இந்திய அமைதி காக்கும் படை வெளியேறிய பின்,1990 ஆம் ஆண்டு மூத்த நாடகவியலாளரும் தமிழரசுக் கட்சியின் செயற்பாட்டாளரும் ஆகிய அரசையாவோடு ஒரு நாள் கதைத்துக் கொண்டிருந்தேன். அரசையா யார் என்றால் 1956 ஆம் ஆண்டு நடந்த சத்யாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர். அவரிடம் நான் கேட்டேன் “இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த போராட்டம் தொடர்பாக ஒரு சத்தியாகிரகியாக உங்களுடைய பார்வை என்ன?” என்று. அவர் சொன்னார், “அந்நாட்களில் நாங்கள் சத்தியாகிரகம் செய்தோம். ஆனால் யாருமே சாகத் தயாராக இருக்கவில்லை. நாங்கள் சத்யாக்கிரகம் என்பதனை சாகாமல் போராடும் ஒரு வழிமுறையாகதான் பார்த்தோம். ஆனால் திலீபன் அதனை சாகும் வரையிலுமான ஒரு போராட்டமாகப் போராடிக் காட்டியிருக்கிறார். திலீபனைப் போல 500 பேர் அப்பொழுது எங்களிடம் இருந்திருந்தால் நாங்கள் அப்பொழுதே போராடி முடித்திருப்போம். ஒரு இளைய தலைமுறை ஆயுதம் ஏந்தும் நிலைமை வந்திருக்காது” என்று.
திலீபனுக்கு முன்பு மட்டுமல்ல திலீபனுக்குப் பின்பும் அதாவது 2009க்கு பின்பும் நிலைமை அதுதான். திலீபனைப்போல தியாகம் செய்ய யார் தயாராக இருக்கிறார்கள் என்பது உயிரைக் கொடுக்க வேண்டும் என்ற பொருளில் அல்ல. தமது இலட்சியத்துக்காக கடைசிவரை விட்டுக் கொடுப்பில்லாமல் அர்ப்பணிப்போடு போராடுவதற்காக எத்தனை பேர் தயார் ?
கடந்த 16 ஆண்டுகளிலும் குறிப்பிட்ட சிலர் அவ்வாறு போராடி இருக்கிறார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய முதிய பெற்றோர் போராடி இருக்கிறார்கள். அரசியல் கைதிகள் சிறைகளில் போராடி இருக்கிறார்கள். லண்டனில் ஒரு பெண் போராடினார். இப்படி ஆங்காங்கே போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் இந்த உண்ணாவிரதிகளில் யாரும் இறக்கவில்லை.
அவர்களை இறக்க விடவும் முடியாது. குறிப்பாக அரசியல் கைதிகளின் போராட்டத்தில் கைதிகளே கைதிகளுக்காகப் போராட வேண்டியிருப்பது என்பது ஒரு வகையில் தமிழரசியலின் சீரழிந்த போக்குத்தான். அதுபோலவே தங்கள் பிள்ளைகளை அல்லது கணவன்மார்களை காணாமல் போகக் கொடுத்த முதிய பெற்றோரே சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வேண்டியிருப்பது என்பது தமிழரசியலின் இயலாதத்தனம்தான். இந்த இயலாதனம் இப்பொழுதும் உண்டு. இந்த இயலாத்தனத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள்தான் திலீபனை யார் தத்தெடுப்பது? அவருக்கு அஞ்சலி செலுத்த யாருக்கு உரிமை அதிகம்? என்று கேட்டு மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக மணிவண்ணன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் இருந்து விலகிய பின் அந்தக் கட்சிக்குள் ஏற்பட்ட அந்த மோதலானது திலீபனின் நினைவு நாட்களிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த முறையும் அப்படித்தான். கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின் மணிவண்ணன் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்னால் உள்ள ஒரு சிறிய வளவில் திலீபனின் நினைவுகள் அடங்கிய ஆவணக் காட்சியகம் ஒன்றை உருவாக்கி வருகிறார்.
அந்த ஆவணக் காட்சிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. அது திலீபனின் வாழ்க்கை வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நினைவூட்ட உதவும். நினைவுகளை தலைமுறைகள் தோறும் கடத்த உதவும் என்ற ஒரு முக்கியத்துவம் உண்டு. அதைவிட திலீபனின் நினைவுகளை மக்கள் மயப்படுத்தவும் அது உதவும்.
ஆனால் இம்முறை அந்த வளவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு யாழ் மாநகர சபையிடம் பதிவு செய்து விட்டதாக ஒரு தகவல் வந்தது. அது மணிவண்ணன் அணியின் ஆவணக் காப்பகத்தை அங்கே அமைப்பதைத் தடுக்கும் நோக்கிலானது என்று மணிவண்ணன் தரப்பு குற்றம் சாட்டியது. விவகாரம் ஊடகச் சந்திப்புகளை நடத்தி மோதும் ஒரு நிலைமைவரை போனது. எனினும் பின்னர் அது தீர்க்கப்பட்டு விட்டது. முடிவில் மணிவண்ணன் அணியினர் அங்கே ஆவணக் காட்சியகத்தை நிறுவினார்கள்.அங்கு சுமந்திரன் வந்திருந்தார். பார்வையாளர் பதிவேட்டில் தனது குறிப்பையும் எழுதி விட்டுச் சென்றிருந்தார்.
அங்கே திலீபனின் மார்பளவு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.அந்த சிலை திலீபனைப் போல தத்ரூபமாக இல்லை. அந்தச் சிலை மட்டுமல்ல தமிழ்ப் பகுதிகளில் அவ்வாறு உருவாக்கப்படுகின்ற பல உருவச் சிலைகள் குறிப்பிட்ட நபரின் தோற்றத்தை தத்ரூபமாகப் பிரதிபலிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் உண்டு. மனிதர்களின் சிலைகளை மட்டுமல்ல, தியாகிகளின் சிலைகளை மட்டுமல்ல, கடவுளர்களின் சிலைகளைக்கூட ஒழுங்காக அளவுப் பிரமாணத்தோடு உருவாக்கத்தக்க சிற்பிகள் நாட்டில் மிகக் குறைவாகவே உண்டு. அதனால் தமிழ்ப் பகுதிகளில் நிறுவப்படும் பெரும்பாலான சிற்பங்கள் தொடர்பாக விமர்சனங்கள் உண்டு. ஏற்கனவே அது பற்றி நான் எழுதியுள்ளேன்.
நல்லூரில் திலீபனின் மார்பளவு சிலை தொடர்பாகவும் முகநூலில் விமர்சனங்கள் வந்தன. அந்த விமர்சனத்தில் ஒரு தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் எழுதுகிறார்…. சுமந்திரன் சொன்னபடியால்தான் அந்தச் சிலை அவ்வாறு வேறு யாரையோ போல உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற பொருள்பட.சிலைக்குள் அரசியல் இருக்கும். ஆனால் சிலையின் கலைத்துவம் பிழைத்தமைக்குள் அரசியல் இருக்குமா? எப்படியெல்லாம் விபரீதமாகச் சிந்திக்கிறார்கள்? இதற்கு எந்த மருத்துவத்திலாவது மருந்து உண்டா?
நினைவு நாட்களும் நினைவுகளும் தியாகிகளும் தியாகிகளின் சிலைகளும் கட்சிச் சண்டைகளுக்குள் சிக்கும் ஒரு நிலை. இப்படி நினைவு நாட்களை வைத்து ஆளுக்கு ஆள் மோதிக் கொள்ளும் கட்சிகள் அல்லது நினைவுகளுக்கு உரிமை கொண்டாடும் கட்சிகள் அல்லது யார் அந்த நினைவுகளை வைத்து வெற்றிகரமாக கட்சி அரசியலை முன்னெடுக்கலாம் என்று போட்டி போடும் கட்சிகளைக் கொண்ட அரசியல் சூழலில், இக்கட்டுரையில் தொடக்கத்தில் அரசையா கூறியதுபோல திலீபனைப்போல தியாகம் செய்ய எத்தனை பேர் உண்டு ?
இம்முறை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வழமை போல வாகன ஊர்தியை எடுத்துக்கொண்டு வடக்கு கிழக்காகப் பயணம் செய்தது. அதுபோலவே ஆங்காங்கே கட்சி சார்ந்தவர்களும் கட்சி சாராதவர்களும் குருதிக்கொடை முகாம்களை, மருத்துவ முகாம்களை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள். திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக ஓவியப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. முல்லைத் தீவில் ஒரு ஞாபகார்த்த உதைப்பந்தாட்டப் போட்டி ஒழுங்கமைக்கப்பட்டது. இவை யாவும் நல்ல விடயங்கள். திலீபனை மட்டுமல்ல தமிழ் மக்களுக்காக தியாகம் செய்தவர்களின் நினைவுகளைக் காவவும் கடத்தவும் பரவலாக்கவும் இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம்.
ஆனால் அதனை கட்சி அரசியலுக்குள் பங்கு போடாமல் கட்சி கடந்த ஓர் அரசியலாக முன்னெடுக்க வேண்டும். ஏற்கனவே கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பொதுவான நினைவு கூர்தலுக்கான ஏற்பாட்டுக் குழுவை உருவாக்க முடியவில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய ஒவ்வொரு இயக்கமும் தனக்கு தனக்கென்று தனித்தனியாக நினைவு நாட்களை வைத்திருக்கிறது. நினைவு நாட்களை ஒன்றாக்க முடியவில்லை. அல்லது தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய எல்லாருக்குமான ஒரு பொது நினைவு நாளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள் ஒரு இயக்கத்தின் நினைவு நாட்களை அனுஷ்டிக்கும் விடயத்திலேயே கட்சிகள் அல்லது அரசியல் செயற்பாட்டாளர்கள் போட்டி போடும் ஒரு நிலைமை அண்மை ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட மோதல்களின் விளைவாகத்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தியானது ஏழு ஆசனங்களை பெற்றது. அதை தமிழ் மக்கள் தனக்கு வழங்கிய ஆணையாக அரசாங்கம் ஐநாவில் வைத்துக் கூறுகிறது. சுவிற்சலாந்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் கூட்டத்திலும் அதனை ஓர் அடைவாகக் கூறியிருக்கிறது. எனவே தமிழ்க் கட்சிகள் தியாகிகளின் நினைவுகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும். அரசையா கூறியதுபோல உண்மையாகத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். தியாகிகளை நினைவு கூர்வது என்பது அந்தத் தியாகத்துக்கு உண்மையாக இருப்பது. அந்தத் தியாகி போல வாழ்வது. அப்படி வாழும் தலைவர்கள், தொண்டர்களின் தொகை அதிகரித்தால்தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தற்செயலானது என்று நிரூபிக்கலாம்.
























