”ஒரு பொய்யை உண்மை என நம்ப வைக்கும் வரை அதைப்பற்றி திரும்ப திரும்ப உரத்த குரலில் பேச வேண்டும் என்பது தான் கோயபல்ஸின் தத்துவம்.ஒரு பொய்யை உணர்வு பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை என்பதுதான் இதுவரையான முடிவு. மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழியான கோயபல்ஸுக்கே அப்பனாக தற்போது வந்திருப்பவர்தான் தான் இந்த அர்ச்சுனா இராமநாதன் எம்.பி.”
–கே.பாலா

தமிழ் தேசிய அரசியலில் தமிழ் தேசியவாதிகள்,நேர்மையான அரசியல்வாதிகள், எதிரிகள், துரோகிகள், குழிபறிப்போர் ,கழுத்தறுப்போர்,காட்டிக் கொடுப்போர், தலைக்கனம் பிடித்தோர், தலையில் ஒன்றும் இல்லாதவர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கடந்த 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரை இருந்துள்ளார்கள். ஆனால் அதுவரை இல்லாத ஒரு புதுவரவாக, புதிய வகை அரசியல்வாதியாக ”அண்டப்புளுகன் ஆகாசப் புளுகனாக ” பொய்யும் புரட்டும் நிறைந்த அரசியல்வாதியாக உருவெடுத்து இன்று தமிழ் தேசிய அரசியலையே நாறடித்துக்கொண்டும் தமிழினத்தையே தலைகுனிய வைத்துகொண்டுமிருக்கின்றார் சுயேட்சைக்குழு 17 இன் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி. யுமான டொக்டர் அர்ச்சுனா இராமநாதன்.
ஒரு பொய்யை உணர்வு பூர்வமாக எடுத்துரைத்து அதை உண்மை என நம்பவைப்பதில் உலகத்தில் கோயபல்ஸை மிஞ்சிய ஆள் இல்லை. மதிமயக்கும் தனது பேச்சாற்றலால் கற்பனைக்கும் எட்டாத பல பொய்களை உண்மை என நம்ப வைத்த ஏமாற்றுப் பேர்வழி தான் இந்த கோயபல்ஸ். ஜெர்மனில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயை திறந்தாலே வண்டி வண்டியாக பொய்மூட்டைகளை அவிழ்த்து விடக்கூடியவர். ஒரு பொய்யை உண்மை என நம்பவைக்கும் வரை அதைப்பற்றி திரும்ப திரும்ப உரத்த குரலில் பேச வேண்டும் என்பது தான் கோயபல்ஸின் தத்துவம். இதைத் தான் ஹிட்லருக்காக செய்து வந்தார் அவர். தனது தந்திரமான பேச்சால் மக்களை ஏமாற்றியவர். தாம் சொல்வது வடிகட்டிய பொய் தான் என்றாலும் அதை நயமாக எடுத்துரைத்து திரும்ப திரும்ப அதைப்பற்றி பேசி அதைக்கேட்டவர்கள் அனைவரையும் ”அட உண்மைதாம்பா” என நினைக்க வைத்துவிடுவார். மக்களிடம் எந்த மாதிரி பேசினால் அவர்களுக்குள் தனது பொய்யை உண்மை என விதைக்க முடியும் என்ற வித்தையை கற்று வைத்திருந்தார் கோயபல்ஸ்.அவ்வாறான கோயபல்ஸுக்கே அப்பனாக இருப்பவர்தான் இந்த அர்ச்சுனா இராமநாதன் எம்.பி.
அர்ச்சுனா இராமநாதன் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய நிலையில் 2024 ஜூலை மாதம் , சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இடம்பெற்ற முறைகேடுகளையும் ஒழுங்கீனங்களையும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் அம்பலப்படுத்தி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார். அதன்பின்னர் மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பிலும் தலையிட்டு மக்கள் மனம் வென்றார். இதன் மூலம் அர்ச்சுனா ஒரு பிரபலமான நபராக அடையாளப்படுத்தப்பட்டார்.இதன் விளைவாக அவர் அரசியலுக்குள் நுழைந்தார்.
ஆனால் ஒரு மருத்துவராக நேர்மையானவராக இருந்த அர்ச்சுனாவால் ஒரு அரசியல்வாதியாக அப்படி இருக்க முடியவில்லை.மிகவும் கீழ்த்தரமான ,தமிழ் மக்களை அடி முட்டாள்களாக நினைத்துக்கொண்டும் ,புலம்பெயர்ந்தவர்களின் ஈழ தேசம் மீதான ஈடுபாட்டை,அர்ப்பணிப்பை தனது மூலதனமாக்கி அவர்களை பணம் காய்க்கும் மரங்களாக பயன்படுத்திக்கொண்டும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தனது ”தெய்வம்”எனகூறிக்கொண்டும் தமிழினத்தையும் தமிழினத்திற்குரிய தன்மானத்தையும் விற்றுப்பிழைக்கும் அசிங்க அரசியலில் ஈடுபடுகின்றார். அதற்கான சில உதாரணங்கள் .
2024 நவம்பரில் சுயேச்சைக் குழு 17 என்ற அரசியல் குழு ஒன்றை அமைத்து, அதன் மூலம் 2024பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு 27,855 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார். அவ்வாறு தெரிவாவதற்கு முன்னரே அர்ச்சுனா தேசிய மக்கள் சக்தியின் வடக்கிற்கு பொறுப்பான ஒருங்கிணைப்பாளரான பெண் ஒருவருடன் தேசிய மக்கள் சக்திக்கு தான் ஆதரவளிக்க விரும்புவதாக பேரம்பேசினார்,ஆனால் அந்த ஒருங்கிணைப்பாளர்”முதலில் நீங்கள் உங்களை மூளையை பரிசோதியுங்கள்”எனக்கூறி நிராகரித்தார். இது தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவும் வெளியானது.
இதனையடுத்து சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாகக் கூறி அழையா விருந்தாளியாக ஐக்கிய மக்கள் சக்தியின் கிண்ணியா பிரசாரக் கூட்டத்தில் அர்ச்சுனா மேடையேறிய போது சஜித் பிரேமதாசாவினால் மேடையிலிருந்து இறக்கப்பட்டார். அதனையடுத்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதாகக்கூறி அதன் ஆடையையும் அணிந்து கொண்டு திரிந்தார். ஆனால் அவர்களும் ஏற்க மறுக்கவேதான் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடடார். தேர்தலில் போட்டியிட முன்னரே இவ்வளவு பேரம் பேசுதல்களையும் அர்ச்சகனா செய்தபோதும் அவர் மீது நம்பிக்கை வைத்தே தமிழ் மக்கள் குறிப்பாக தென்மராட்சி மக்கள் அவரை தேர்தலில் வெற்றி பெற வைத்தனர்.
பாராளுமன்றத்தேர்தல் நடந்து முதன் முதலாக பாராளுமன்றம் கூடிய போது எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசாவின் ஆசனத்தில் அமர்ந்து தனது கோமாளித்தன அரசியலை ஆரம்பித்தார். ”பாராளுமன்றம் கூடும் முதல் நாள் என்றாலும் ஜனாதிபதி, பிரதமர் எதிர்கட்சித் தலைவருக்கு எனக் குறிப்பிட்டு ஆசனங்கள் ஒதுக்கப்படும் அதில் நீங்கள் அமர முடியாது”என பாராளுமன்ற உதவியாளர்கள் எவ்வளவோ கூறியபோதும் அந்த ஆசனத்திலிருந்து எழுந்திருக்க அர்ச்சுனா எம்.பி. மறுத்தார். இது மறு நாள் ஊடகங்களில் அர்ச்சுனா எம்.பி.யின் கோமாளித்தனம் என்றவாறாக செய்திகளில் இடம்பிடித்தது.
இந்நிலையில் எதிர்கட்சித்தலைவரின் ஆசனத்தில் அமர்ந்தது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விளக்கமளித்த அர்ச்சுனா எம்.பி, ”நான் ஒன்றும் பாராளுமன்ற விதி முறை தெரியாமல் எதிர்கட்சித்தலைவரின் ஆசனத்தில் அமரவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் கிண்ணியா பிரசாரக்கூட்ட மேடையில் நான் ஏறியபோது இந்த சஜித் பிரேமதாசா என்னை மேடையின் ஆசனத்தில் அமரவிடாது பலவந்தமாக இறக்கினார். அதற்கு பழி வாங்கவே பாராளுமன்ற முதல் நாளில் அவரை அவரது ஆசனத்தில் அமரவிடாது பழி வாங்கினேன், நான் தலைவர் வளர்ப்பிடா தமிழன்டா”என்று கூறியிருந்தார். இது தமிழ் மக்களை கொஞ்சம் மகிழ்ச்சிப்படுத்தியது அர்ச்சுனாவின் செயலையும் தமிழ் மக்கள் நியாயப்படுத்தினர்
ஆனால் எதிர்கட்சித்தலைவரின் ஆசனத்தில் அர்ச்சுனா எம்.பி, அமர்ந்து எழுந்திருக்க மறுத்தமை எதிர்கட்சியினால் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டபோது ”நான் புதிய எம்.பி., பாராளுமன்ற விதி முறைகள் தெரியாமல் அமர்ந்து விட்டேன்.எனக்கு அதனை யாராவது தெரிவித்திருந்தால் அமர்ந்திருக்க மாட்டேன். நான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோருகின்றேன்” என அந்தர் பல்டி அடித்து பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இதன்மூலம் தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும் தென்னிலங்கைக்கு ஒரு முகத்தையும் காட்டி தனது பித்தலாட்ட அரசியலையும் ஆரம்பித்தார்,
இதேபோன்று அர்ச்சுனா எம்.பி முன்னுக்கு பின் முரணாக தெரிவித்த சில விடயங்கள்.
எனது தந்தை விடுதலைப்புலிகளின் காவல்துறை அதிகாரி. ஜெர்மனியிலிருந்து நாடு திரும்பி தமிழ் மக்களுக்காக விடுதலைப்புலிகளின் காவல்துறையில் இணைந்து இறுதியில் வீரமரணம் அடைந்தார். இது தேர்தலுக்கு முன்னர் அர்ச்சுனா தமிழ் மக்களுக்கு கூறிய தகவல் .அதனைத்தொடர்ந்து சிங்கள சமூக ஊடகமொன்றுக்கு பேட்டி வழங்குகையில், ”நாம் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம் . சோற்றுக்கே வழியில்லாமல்தான் எனது தந்தை விருப்பமின்றி விடுதலைப்புலிகளின் காவல்துறையில் இணைந்தார் ”.என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையான யானபோது அது தொடர்பில் கேள்வி எழுப்பிய தமிழ் சமூக ஊடகவியலாளருக்கு ”ரணில் சொல்லித்தான் நான் அப்படி சொன்னேன்”எனக் கூறி இருந்தார்.
தனது தந்தை தொடர்பில் பல இடங்களிலும் பல முரண்பட்ட கதைகளையே அர்ச்சுனா எம்.பி கூறி வருகின்றார். இறுதியாக அவர் கூறிய விடயம் ”எனது தந்தை இறுதி யுத்தத்தில் காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக தலைவர் கப்பலில் புல் மோட்டைக்கு அனுப்பி வைத்தார். அவர் சிகிச்சைக்கு சென்ற இடத்தில்தான் காணாமல் போனார். அவர் உயிருடன் இருப்பார் என்றே நம்புகின்றேன். காணாமல் போனவர்களில் எனது தந்தையும் ஒருவர்”என்பது.ஆனால் அர்ச்சுனாவின் தந்தை தொடர்பில் விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர்கள் சிலரிடம் வினவியபோது அவர்கள் கூறிய விடயம் அதிர்ச்சிகரமானது. அர்ச்சுனா விடும் புலுடாக்களுக்கு நேர் விரோதமானது. அதனை இங்கு குறிப்பிட்டு இறந்த ஒருவரை அசிங்கப்படுத்த விரும்பவில்லை.
கார் திருத்த காசு இல்லை. கொழும்பில் தங்கியிருக்க வாடகை கொடுக்க காசு இல்லை. .கார் சாரதிக்கு சம்பளம் கொடுக்க காசு இல்லை.எனது வழக்குகளுக்கு வாதாட காசு இல்லை . பாராளுமன்றத்திற்கு வந்து போக எரிபொருளுக்கு கூட காசில்லை எனக்கூறி புலம்பெயர் உறவுகளிடம் நிதிகளைப் பெறும் அர்ச்சுனா எம்.பி ,சோற்றுக்கே வழியில்லாமல் விடுதலைப்புலிகளின் காவல்துறையில் தனது தந்தை இணைந்ததாக சிங்கள ஊடகத்திற்கு பேட்டியளித்த அர்ச்சுனா எம்.பி கூறிய இன்னொரு விடயம் இது.”யாழ்ப்பாணத்தில் எமது குடும்பமே பணக்கார குடும்பம்.எம்மிடம் 150பஸ்கள் இருந்தன.10 திரையரங்குகள் வைத்திருந்தோம். யாழ்ப்பாணத்திலே முதன் முதலாக ‘அற்றாஜ் பாத்ரூம்” உள்ள வீட்டைக் கட்டியவர்கள் எமது குடும்பம்தான்”என்றார். அதன்பின்னர் பாராளுமன்றத்தில் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான விவாதம் ஒன்றில் பேசுகையில் ” நானும் ஒரு ஏற்றுமதியாளன். அமெரிக்காவிற்கு மில்லியன் டொலர்களில் ஏற்றுமதி செய்கின்றேன்” என்றார். எம்.பி.க்கள் தமது சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனக்கூறியபோது என்னிடம் 15 கோடி ரூபா சொத்துக்கள் உள்ளன என்கின்றார் .
அதுமட்டுமல்ல நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் கட்டுப்பணம் செலுத்தவென புலம்பெயர் உறவுகளிடம் இலட்சக்கணக்கில் நிதி சேகரித்த அர்ச்சுனா எம்.பி எத்தனை பேருக்கு கட்டுப்பணம் செலுத்தினார்?எத்தனைபேர் போட்டியிட்டனர்?ஒரு இடமும் கட்டுப்பணம் செலுத்தப்படவில்லை. ஒருவர் கூட போட்டியிடவில்லை.கட்டுப்பணம் செலுத்தவென புலம்பெயர் உறவுகளிடம் சேகரித்த பணம் எங்கே?ஒரு கட்டத்தில் நிதிஉதவி செய்த புலம் பெயர் உறவுகள் சிலர் கணக்கு கேட்டபோது அவர்களுடன் அர்ச்சுனா முரண்பட்டார். தனது கார் திருத்த 36 இலட்சம் ரூபா செலவானதாக கணக்கு காட்டினார். அது மட்டுமல்ல பிரபாகரன் எனது தெய்வம் எனும் அர்ச்சுனா பாராளுமன்றத்திலேயே பல தடவைகள் இராணுவத்திற்கு நன்றி தெரிவித்து கருத்துக்களை முன்வைத்துள்ளார். தேசிய மக்கள் சக்திக்கு 156 எம்.பிக்கள் அல்ல. என்னுடன் சேர்த்து 157 எம்.பி.க்கள் என்றும் அறிவித்திருந்தார்.
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் பங்கேற்று எந்த ஆதாரங்களுமின்றி வாய்க்கு வந்தபடி புள்ளி விபரங்களை அள்ளிவிட்டு ஆக்ரோஷமாக பேசி அரச அதிகாரிகளுக்கு சேறடித்து தமிழ் அரசியல்வாதிகளை எள்ளிநகையாடி இறுதியில் அந்தக்கூட்டங்களில் எந்த முடிவுகளையும் எடுக்கவிடாது தடுத்ததே அர்ச்சுனா செய்த மக்கள் சேவை ,ஆனால் சமூக வலைத்தளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு சமூக ஊடகத்தினர் போடும் நடந்ததற்கும் தலைப்புக்கும் கொஞ்சமேனும் தொடர்பில்லாத அதிரடித் தலைப்புக்கள் அர்ச்சுனாவை ஹீரோவாக மக்களைப் பார்க்க வைத்தது. அதனால்தான் இறுதியில் அர்ச்சுனாவே சமூக ஊடகம் ஒன்றை நடத்தி அதன் மூலமும் டொலர்களில் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளதுடன் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றியும் வருகின்றார்.
பாராளுமன்றத்தில் அடிக்கடி எழுந்து அர்ச்சுனா எம்.பி. பொருத்தமற்ற விடயங்களை பேசுவதற்கு காரணம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற வருகை,சபைக்குள் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் தர வரிசைப்படுத்தும் மந்திரி.எல்கே.என்ற இணையத் தளத்தில் முதலிடம் பிடிப்பதற்கேயாகும் .அதில் தற்போது அர்ச்சுனா 5 ஆவது இடத்தில் உள்ளார். எனவே அவர் மக்களுக்காக பாராளுமன்றத்தில் அடிக்கடி எழுந்து குரல் கொடுக்கவில்லை. மந்திரி.எல்கே.இணையத் தளத்தில் முதலிடம் பிடித்து அதனையும் தனது பிரசாரத்துக்கு பயன்படுத்தவே அடிக்கடி எழுந்து பொருத்தமற்ற விடயங்களை பேசுவதுடன் தேவையற்ற குறுக்கீடுகளையும் செய்கின்றார்.
அதுமட்டுமல்ல தன்னுடன் தோளோடு தோள் நின்றவர்களுக்கு கூட துரோகம் செய்து அவர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தன்னை ஒருவர் எதிர்த்துவிட்டால் அல்லது சமூக வலைத்தளங்களில் எதிராக ஒரு கருத்தை பதிவு செய்து விட்டால் அவரதும் அவரின் குடும்பத்தினரதும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் விமர்சிப்பதும் அர்ச்சுனாவின் மிகவும் இழிவான குணம்.பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக்கட்சியின் பெண் வேட்பாளர் ஹோட்டல் ஒன்றில் உணவருந்திக்கொண்டிருந்த அர்ச்சுனாவிடம் கொடுத்த தனது தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரத்தை அவருக்கு முன்பாகவே அந்த துண்டுப்பிரசுரத்தினால் தனது வாயை, கையைத் துடைத்து அவமானப்படுத்திய அடிப்படை அரசியல் நாகரிகம் கூடத் தெரியாத ஒருவர். சில பெண்கள்,பெண் சட்டத்தரணி ஆகியவர்களைப் பற்றி பாராளுமன்றத்திலேயே தனது சிறப்புரிமையை பயன் படுத்தி அவதூறுக் கருத்துகளை கூறிய ஒருவர்.
இவ்வாறாக வாய்க்கு வந்தபடி பொய்களை கூறியும் பித்தலாட்டங்களை செய்தும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் தனது சமூக ஊடகத்தையும் வைத்து தமிழ் மக்களை முட்டாள்களாக்கி ஏமாற்றி வரும் அர்ச்சுனா எம்.பி. இப்போது அணி சேர்ந்துள்ளது நாமல் ராஜபக்சவுடன். இதனை பாராளுமன்றத்தில் ஒரு தடவை உரையாற்றும் போது ” நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் நான் அவரை ஆதரிப்பேன்.அதனை வருடம் நேரடியாகவே கூறினேன்.உங்கள் தந்தை சித்தப்பா தமிழ் மக்களுக்கு செய்த வேலைகளை செய்ய வேண்டாம். என்று அவரிடம் கூறியுள்ளேன். அவரும் அதற்கு இணங்கியுள்ளார்” என்று கூறியதன் மூலம் நாமல்ராஜபக்ஸவுடன் தனக்குள்ள தொடர்பை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் பாராளுமன்றத்தில் பல தடவைகள் நாமலுக்கு ஆதரவாகவும் ராஜபக்சக்களுக்கு ஆதரவாகவும் அர்ச்சுனா குரல் கொடுத்து வருகின்றார்.
தற்போது பாராளுமன்ற அமர்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதினால் அதனை நீங்கள் பார்த்தால் பொதுஜன பெரமுனாவை சேர்ந்த நாமல் ராஜபக்ச ,சானக எம்.பி.க்கள் உரையாற்றும் போது அவர்களுக்கு பின்னாலுள்ள ஆசனத்திற்கு சென்று அர்ச்சுனா அமர்ந்திருப்பத்தை பார்க்க முடியும் .அர்ச்சுனாவிற்கு முன் வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்தான் நாம பேசும்போது எழுந்தோடிச்சென்று அவர் நாமலுக்கு பின்னல் அமர்ந்து கொள்வார். அதுமட்டுமல்ல தற்போது கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பில் ராஜபக்சக்கள் சிக்கியுள்ள நிலையில் அந்த கொள்கலன்களில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கூறி அந்தக்கொள்கலன்கள் தொடர்பில் ராஜபக்சக்களை பாதுகாக்கும் நோக்கில் பொய்த் தகவலை பரப்பியவரும் இந்த அர்ச்சுனாதான்.
ராஜபக்சக்களுடனான அர்ச்சுனா எம்.பி. யின் டீலை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் போக்குவரத்து விதிமுறை மீறல் குற்றத்தில் அர்ச்சுனா எம்.பி கைதானபோது பிணை எடுத்தவர் நாமல்ராஜபக்ச. இதன்போது அர்ச்சுனா எம்.பி கருத்துக்கூறுகையில், எனது கடவுள் பிரபாகரன் என்பதை அச்சமின்றிகூறுகின்றேன். ஆனால் சிங்கள மக்கள் தமக்காகச் சேவையாற்றிய மஹிந்த ராஜபக்சவை காட்டிக் கொடுத்துள்ளனர். எனக்காக உயிர் நீத்தவர்களுக்காக நான் முன்னிற்கின்றேன். ஆனால் இந்நாட்டு மக்கள் தமக்காக உயிர் நீத்தஇராணுவ வீரர்களுக்காக முன்னின்ற தமது தலைவரைக்காட்டிக் கொடுத்துள்ளனர். மஹிந்த ஷ தமிழ் மக்களின் தலைவர் அல்லர்.ஆனால் அவர் சிங்கள மக்களின் தலைவராவார். ஆனால் அவர்கள் மஹிந்தவைக் காட்டிக் கொடுத்துள்ளனர். நாமல் உள்ளிட்டோர் கள்வர்கள் எனக் கூறிய போதுநானும் அவற்றை நம்பினேன். முழு நாடும் அதை நம்பியது. பொய் கூறியவர்களை மேலாக பாரிய பொய்களைக்கூறுபவர்கள் வந்ததும் அனைவரும் அவர்களை நம்பினர்.ஆனால் இறுதியில் அவர்களது பொய்கள் அனைத்தும்தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.எனக்காக முன்னிலையானமைக்காக நாமலுக்கு மதிப்பளிக்கின்றேன்”என்றார்.
மீண்டும் நாட்டில் மீண்டெழும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ராஜபக்சக்கள் தற்போது இந்த அண்டப்புளுகன் ஆகாசபுளுகனான அர்ச்சுனாவை தேர்ந்தெடுத்து பிரபாகரன் புகழ் பாட வைத்து அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள இனவாதத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கின்றார்கள். அதற்காகவே 2024 ஜூலை மாதம் வரையில் விடுதலைப்புலிகளின் தலைவரைப் பற்றியோ விடுதலைப்புலிகளைப்பற்றியோ எங்கும் எப்போதும் ஒரு வார்த்தைகூடப் பேசாத,தமிழ் மக்களின் எந்த வித வெகுஜனப் போராட்டங்களிலும் பங்கேற்காத, தமிழ் மனைவியை கைவிட்டு சிங்கள மனைவியுடன் குடும்பம் நடத்தும் இந்த அர்ச்சுனா என்ற அரசியல் பித்தலாட்டக்காரர் இன்று ”பிரபாகரன் எனது தெய்வம்”என்பதும் ”தமிழ் மக்களுக்காகவே நான் முன்நிற்கின்றேன்” என்றும் முழங்கி சிங்கள இனத்தை உசுப்பேத்தி வருகின்றார் , தமிழ் மக்களுக்காக பேசுவதாக நடிக்க புலம்பெயர்ந்தவர்களிடம் பணமும் ராஜபக்சக்களுக்கு ஆதரவளிக்க ராஜபக்சக்களிடமிருந்து உதவிகளும் பெறும் இந்த ‘ மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் காட்டும் அர்ச்சுனா எனும் ”விலாங்கு மீன் ”நிச்சயம் ஒரு நாள் வலையில் சிக்கத்தான் போகின்றது.
























