Dr. புட்பா கிறிட்டி, 647 703 5538, pushpachristy@gmail.com
இரட்டைக் காப்பியம் என்று அழைக்கப்பட்ட சிலப்பதிகாரத்தின் மற்றொரு அங்கமான மணிமேகலை மிகவும் சிறப்பான காப்பியம்.. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையைச் சீத்தலைச் சாத்தனார் தன் எண்ணங்களைப் பிரதியாக்கி இயற்றி நமக்குத் தந்து இருக்கிறார்.
சிலப்பதிகாரம் இல்லறத்தையும், மணிமேகலை துறவறத்தையும் விளக்குவதால் தான். இவை இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகிறன. காப்பியத் தலைவி மணிமேகலை பற்றிய அபரிமிதமான தகவல்கள் உள்ளதால் இந் நூலானது மணிமேகலை என்று அழைக்கப்பட்டது. தமிழில் தோன்றிய நூல்களிலேயே முதல் சமணக் காப்பியம் இந்த மணிமேகலை ஆகும்.
இந்நூலில் பௌத்த மத நீதிக் கருத்துக்கள் அதிக அளவில் கொட்டிக் கிடக்கின்றன. கோவலன், மாதவி தம்பதியின் மகள் மணீமேகலையையும் அவள் கதையையும் விளக்கும் நூல் இந்த மணிமேகலைக் காப்பியம். மிகுந்த நற்பண்புகளைக் கொண்ட மணிமேகலை துறவி ஆக வேண்டும் என்று எண்ணிய போது இவளைத் தொடர்ந்து வந்த சோழ மன்னனை, விடுத்து துணிச்சலுடன் துறவு பூண்ட கதை தான் மணிமேகலை.
மணிமேகலை ஒரு சீர்திருத்தக் காப்பியம் என்பதனால், ஆசிரியர், கொல்லாமை, ஊன் உண்ணாமை, கள் உண்ணாமை ஆகியவற்றை மிக முக்கியமாக எடுத்துக் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அனைத்து உயிர்களிடமும் அன்போடு நடக்க வேண்டும் என்ற உண்மைக் கோட்பாடு உணரும்படி சொல்லப் பட்டுள்ளது. மேலும் சிறைச்சாலைகள் அனைத்தும் அறச்சாலைகளாக மாற்றப்பட வேண்டும் என்றும், அங்குள்ளோர்க்கு அமுதசுரபி கொண்டு மணிமேகலை அவர்களின் பசிப்பிணி தீர்ப்பதும் இக் காப்பியத்தின் தனிச்சிறப்பாகும்.
தொல்காப்பியர் பயன்படுத்திய எட்டு அணிகளுடன், மடக்கணி, சிலேடை அணி ஆகியன இக்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் தனிச் சிறப்பு. இந்த காப்பியத்திற்கு வேறு சில பெயர்களும் உள்ளது. அவை மணிமேகலை துறவு, முதல் சமய காப்பியம், அறக் காப்பியம், சீர்திருத்தக் காப்பியம், புரட்சிக் காப்பியம், பசிப்பிணி மருத்துவக் காப்பியம், பசு போற்றும் காப்பியம், துறவுக் காப்பியம் என்பதாகும்.
இந்நூலில் மொத்தம் 30 காதைகள் உள்ளன. இது நிலைமண்டில ஆசிரியப்பாவை கொண்ட ஒரு பௌத்த சமய நூலாகும். எனினும் நூலில் காண்ட பிரிவுகள் எதுவும் இல்லை.
தமிழில் தோன்றிய முதல் சமய காப்பியமாக இவ் மணிமேகலை காப்பியமே காணப்படுகிறது. மேலும் உலக இன்ப நாட்டத்தினை முழுமையாக வெறுத்து பௌத்த மதத் துறவி தன் பவத்திறம் அறுக என நோற்றுச் சிறப்பு பெற்றதனைச் செந்தமிழ் நலம் சிறக்கச் சீத்தலைச் சாத்தனார் பாடியுள்ளமை சிறப்பிற்குரியதாகும்.
மணிமேகலை காப்பியத்தில் சமுதாய சிந்தனைகள் இயற்கையாகவே அமைந்துள்ளமையினை காணலாம். அதாவது மக்களின் கூட்டுணர்வை வெளிப்படுத்தும் சமுதாய உணர்வை மணிமேகலை காப்பியமானது சிறப்பாக விளக்கியுள்ளது. காலத்தின் பிறப்பால் சாதிகள் அமைத்து சமுதாய உணர்வு தோன்றியதாக காணப்படவில்லை. மாறாக தொழில் அடிப்படையில் ஒன்று சேர்ந்த மனித இனம் சமுதாயமாக கருதப்பட்டு மணிமேகலையில் சமுதாய ஒற்றுமை மிகவும் நேர்த்தியாக காணப்படுகிறது.
மணிமேகலை, தாய் மாதவியால் ஆடலும் பாடலும் கூடிய பரத்தமை வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்பட்டு தவ வாழ்க்கைக்கு உரியவளாகிறாள்.
காப்பியத்தில் மணிமேகலையின் அறிமுகம் அவளின் கண்ணீரோடுதான் தொடங்குகிறது. கண்ணீருக்குக் காரணம் மாதவி, தோழி வயந்தமாலையிடம் சொல்லிய கோவலன் கண்ணகியர் அடைந்த பெருஞ்சோகம் குறித்த விவரிப்பு. தாயின் துயரத்தோடு ஒன்றிக் கண்ணீர் வடிக்கிறாள் மணிமேகலை. ஒரு காப்பியத் தலைவியைக் கண்ணீரோடு அறிமுகம் செய்யும் சாத்தனாரின் உட்குறிப்பு கதையின் ஊடாக மணிமேகலையைத் தொடர்வோருக்கே புலப்படக்கூடியது.
மாலைக் காட்சி என்றால், மனதுக்கு மகிழ்வைத் தரும் காட்சியாகும். முதலில் இங்கு பொதுவான மாலைக் காட்சியை உங்களுக்குத் தருகின்றேன். மாலையில், தன் நிறம் மாறும் சூரியன், தங்கத் தகடு போன்று மாறித் தெரிவான். மதியம் சூடாக இருந்த அந்தப் பொழுது, தன் வெப்பத்தைக் குறைத்து, மெல்லக் குளிர்ச்சி அடைந்து, தன் நிலையை மாற்றிக் கொள்வான். பரபரப்பாக இயங்கிய பகற்பொழுது, மெல்ல மெல்ல அமைதியைத் தேடி நடைபோடும். இங்கு ஆக்டிக், அண்டாட்டிக், கிறின்லான்து போன்ற பகுதிகளிலும், கனடாவில், வடக்குக் கிராமப்புறங்களில், மாலைக் காட்சி, பல வர்ண நிறக்கலவையுடன் கலந்து அழகு காட்டிச் சிறப்புச் செய்யும். அதே போன்று கனடாவில், Yellow knife, என்னும் Union territory. இது, பாண்டிச்சேரி போன்ற தனித்த மாவட்டம். ஒரு வடமாநிலம், மேலும், மனிடோபா, லாபரோர், ஒன்றாடியோ, அல்பேட்டா போன்ற இடங்களிலும் அழகு வர்ண நிறங்கள் தோன்றும்.
அந்த நிறங்கள் பச்சை, மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, நீலம், என ஒரு நிறக்கலவையாகக் கூடி அழகு காட்டும். அதை இங்கு அனைவரும் படமெடுத்து பிறருக்கும் அனுப்பி மகிழ்வர்கள். இந்த அழகிய வர்ணக் கூட்டுக் கலவைகட்கு மத்தியில், செங்கதிரோன், சிவந்த மேனியுடன், அடிவானைத் தொட்டு, மறையத் தொடங்குவான். வானக் கிண்ணத்துக்குள் சூரியன், வட்டப் பந்து போன்று இறங்கி மறைந்து கொள்வான். நான் வசிக்கும் ரொரொன்றோ எனும் இடத்தில், மாலை நேரம் இன்பம் தரும். பனிக்காலத்தில், குறைந்த பகலும், நீண்ட இரவுப்பொழுதும், பாடசாலை முடித்து வீடு வந்த மாணவர்கள். மாலை உணவை முடித்துக் கொண்டு, தாம் விரும்பிய படி விளையாடத் தொடங்குவர்.
சிலர் கணனியில் விளையாடுவார்கள். வேறு சிலர் பெற்றோரின் தொலைபேசியைப் பறித்து வைத்து, அதில் விளையாடி மகிழ்வார்கள். வேறு சிலர், நீச்சல், பியானோ, கராட்டே, கால்பந்து, கூடைப்பந்து, எனப் பல வித விளையாட்டுக்களுக்குப் பெற்றோருடன் கூடிச் செல்வார்கள். இன்னும் சிலர், பரத நாட்டியம், வீணை, தபேலா, மிருதங்கம், வாய்ப்பாட்டு போன்ற நல்ல கலைப்பாட வகுப்புக்களுக்கும் தொடர்ந்து செல்வார்கள். கோடை காலம் நீண்ட பகலையும், குறைந்த இரவையும் கொண்டது. பள்ளி விட்டு வீடு வரும் சிறுவர்கள், சிலர் வீட்டில், ஓடி விளையாடுவார்கள். சைக்கிள் ஓடி மகிழ்வார்கள். அல்லது தம் வீட்டுக்கு முன்னாலேயே கண்ட படி ஓடி ஆடித் திரிவார்கள்.
அதற்கென, நாங்கள் வசிக்கும் எமது குடிமனைப் பகுதிகளில், வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளன. மணித்தியாலத்திற்கு, 30 கிலோ மீற்றர் வேகத்தில் மட்டும் தான் வாகனம் ஓடலாம். அதையும் விட, அங்கங்கே குறிப்புப் பதாதைகள் நடப்பட்டிருக்கும். “இங்கே சிறுவர்கள் விளையாடுகிறார்கள். மெதுவாக வாகனம் ஓட்டவும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். எல்லாரும் அதை மதித்து நடப்பார்கள். காரணம், எல்லோருக்கும் குழந்தைகள் இருப்பதனால், அவர்கள் எல்லோரும் அதனை மதித்து, வேகத்தைக் குறைத்து வாகனத்தை ஓட்டுவார்கள். வேலைக்குச் சென்ற பெரியவர்கள், அவசர அவசரமாக வீட்டை நோக்கி ஓடி வருவார்கள். அவர்கள் கவனம், பிள்ளைகள், இரவு உணவு தயாரிப்பு, மற்றும் மறுநாட்காலை மீண்டும் வேலைக்குச் செல்லும் ஆயத்தங்கள் எனச் செல்லும். சனி, ஞாயிறு தினங்களில், ஒன்று கூடல்கள், களியாட்டங்கள், சுற்றுலா எனக் கழியும்.
இனி இலங்கை, இந்தியா போன்ற எம் நாடுகளில், மாலைக் காட்சிகளைப் பார்க்கலாம். வீட்டிலே பெண்கள் முற்றத்தைக் கூட்டி, வீட்டைப் பெருக்கி, விளக்கேற்றி, மகிழ்வர். தொலைக்காட்சி நாடகங்களில், தம் நேரத்தைச் செலவு செய்வார்கள். எம்மைப் போன்று, இலக்கிய தாகமுள்ளவர்கள், இது போன்ற இலக்கிய நிகழ்வுகளில், தம் நேரத்தைச் செலவு செய்வார்கள். ஆண்கள், தமக்கேயுரிய பாணியில், குளித்து, ஆடைமாற்றி, நண்பர்களைத் தேடிச் செல்வார்கள். சிலர், கொஞ்சம் களியாட்டங்களில் தமது நேரத்தைச் செல்வு செய்து, குடித்து, கும்மாளமடிப்பார்கள். வானொலி கேட்டுப் பாடல்களைப் பாடி மகிழ்வார்கள். தொலைக்காட்சியில், சினிமா பார்ப்பார்கள்.
வேறு சிலர் உழைப்பு உழைப்பு என ஓடி உழைத்து, தம்மை மறந்து, பணத்தை நினைந்து, தம் வாழ்வின் பெரும்பாகத்தை இழந்து கொண்டிருப்பார்கள். இனி கிராமத்துக் காட்சிகளுடன் கூடிய இயற்கை நிகழ்வுகளைக் காணலாம். பச்சைப் பசேலென்ற வயல்வெளிகள், மாலைச் சூரிய ஒளியில், வயலின் பசிய நிறம் கசங்கி அழகு காட்டும். வீசும் மெல்லிய காற்றில், அந்தப் பச்சை வயலின் பசிய கதிர்கள் ஆடி அசைந்து, கடலலை போன்று, அசைந்து அழகு காட்டும். சிட்டுக் குருவிகள், கிளிகள், விளைந்த நெற்கதிரைக் கொத்தி எடுத்துச் சென்று, தம் குஞ்சுகளுக்குத் தீன் கொடுக்கும். வயலில் மீன்கள், தவளைகள், நண்டுகள் குதித்துக் கும்மாளமிட்டுக் கொண்டாட்டம் செய்வார்கள்.
ஒருசில நேரத்தில், பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை, தன்னை விடுவிக்கும் படி, ஈனக்குரலில், குரலெழுப்பி அழும். மரத்தில் கண்காணாது மறைந்திருக்கும் குயிலொன்று, தன் துணையைத் தேடிக் கூ.. கூ. எனக் குடல் கொடுக்கும். அதற்கு எசப்பாட்டாக, வீட்டிலிருக்கும் சிறுவர்கள், தாமும் கூ. கூ எனக் குரல் கொடுப்பார்கள். அது கேட்ட குயில் மேலும் கூ. கூ என ஆவேசமாகக் குரலெழுப்பும். இது அந்த மாலையை மயக்கும் ஒரு சோகச் செயலாகத் தெரியும். மேயச் சென்ற மாடுகளைக் காணவில்லை என்றால், வேப்ப மரம், பிலா மரத்தின் உச்சி மீதேறித் தேடுவோம். அங்கே கயிறின்றி அனுப்பிய மாடுகள், தொலைவில் மேய்வதைக் கண்டு, அந்தத் திசை நோக்கிச் சென்று, அவற்றை மேய்த்து, வீட்டுக்குக் கொண்டு வருவோம்.
மேய்ந்து முடித்த, பசுக்கூட்டங்களுக்கு, மடிமுட்டி விட்டதால், கன்றைத் தேடிக் கதறியபடி ஓடி வரும். இப்படித் தான் ஆட்டுக் கூட்டங்களும் பட்டியைத் தேடி வந்தடையும். காலையில் கவிதை பாடிப் பறந்த பறவைகள், மாலையில், தம் கூட்டைத் தேடி வந்தடையும். கொக்குக் கூட்டங்கள், வயல்களெல்லாம் நிறைந்து, உறு மீன் வரும் வரை காத்திருந்து, அதைப் பிடித்ததும் தம் கூட்டில் வந்தமர்ந்து, குஞ்சுகளுக்கு இரை கொடுத்திடும். அணில்கள், தத், தத் எனக் குரல் கொடுத்து, தம் கூட்டை வந்தடையும். ஒளித்திருந்து வெளியில் நடப்பதை வேடிக்கை பார்த்திருக்கும்.
கோழிகள், பகல் முழுவதும் மேய்ந்து விட்டு, கூட்டுக்குள் வந்து அடைந்து கொள்ளும். பகல் முழுவதும் வேலை செய்த தொளிலாளி களைப்புடன் வீடு திரும்புவான். எங்கள் கிராமத்தில், மாலை வேளையில், குழந்தைகள், குஞ்சுகள், பெரியவர் என அனைவரும், நிறைந்து ஓடும் வாய்க்கால் தண்ணீரில் முங்கிக் குளித்து, தம் உடற்சூட்டைத் தணிப்பர். தோட்டத்தில், துலா மிதித்து, நீர் பாய்ச்சிய ஆச்சி அப்பையா வீடு வந்து களைப்பு ஆறுவர். தேனீர் அருந்தி மகிழ்வர், அதன் பின்னர் இறை வழிபாட்டில் இறங்கி விடுவார்கள். கடற்கரைப் பகுதிகளில், வாழும் அனைவரும் காற்று வாங்கச் செல்வார்கள்.
சில இடங்களில், சிறுவர்கள், கிட்டிப் புள்ளு எனும் ஒருவித விளையாட்டை விளையாடி மகிழ்வார்கள். கடற்கரை மணலில், கோட்டை கட்டுவார்கள். வீடு கட்டி மகிழ்வார்கள். குழி தோண்டி, அந்தக் குழியிலே கடல் நீரை அள்ளிவந்து நிரப்பி மகிழ்வார்கள். சிப்பி, சங்கு என்பனவற்றைத் தேடிப் பொறுக்கி வந்து, அவற்றை வைத்து, தாம் கட்டிய வீட்டுக்கு, கோட்டைக்கு, அலங்காரம் செய்வார்கள். சில இளையவர்கள், நீச்சல் பழகுவார்கள். கடல் நீரில் கால் நனைத்து மகிழ்வார்கள்.
நான் கூட அண்மையில் நியுயோர்க் நகரிலுள்ள கோனியாக் கடற்கரைக்குச் சென்ற போது, பல மக்கள், கொழுத்தும் மாலை வெய்யிலில் குடை நிழலில், இருந்து கொண்டு, இயற்கையை ரசித்தார்கள். சிலர் கடலில் குளித்து விட்டு வந்து, உடலில் எண்ணைய் பூசிக்கொண்டு, சூரியக் குளியலை ரசித்து, வெறும் தரையில் படுத்துக் கண்களை மூடிக் கிடந்தார்கள். நான் கூட, அந்தக் கடற்கரை மணலில், ஒரு தடியால், என் பெயரை எழுதி மகிழ்ந்தேன். இது போன்று, உழைப்புக்காகக் கடலுக்குச் செல்ல மனிதர்கள் தயாராகுவார்கள்.
கடலுக்குச் செல்ல வேண்டியவர்கள், தமது, உணவு என்பவற்றை கையில் எடுத்துக் கொண்டு, அரிக்கன் விளக்குடன், கப்பல் , கட்டுமரத்தில், ஏறி, அந்தக் கட்டுமரத்தைக் கடலுக்குள் செலுத்துவார்கள். கடலுக்குச் செல்ல முனைவார்கள். அவர்கள் மனைவி குழந்தைகள், அங்கு வந்து, அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு, வழிபார்த்து, நிற்பார்கள். அங்கு, அந்த நேரத்தில், அழகான சூரியன், மாலை நேரத்தை முடித்து அடிவானில், தன் உறைவிடம் தேடிச் செல்வான். அந்தச் சூரிய அஸ்தமனம், காண அதிக மக்கள் கூடுவார்கள். படம் எடுத்து மகிழ்வார்கள்.
இவை எல்லாம் நான் ஏன் சொன்னேன்? காரணம், என்னிடம் மாலை பற்றிய விபரம் அதிகம் இல்லை. எனவே கொஞ்சம் மாலையை மனத்திலிருத்தி, மகிழலாம் என்பதாலேயே.
இனி நாம், மணிமேகலையில் வரும் ஒரு மாலைக் காட்சிக்குள் நுழைவோம். மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதையான் 5 ஆம் பகுதியில், 119ஆம் பாடலில் வரும் இப்பகுதி. அந்தி மாலைப் பொழுதினை, ஒரு பெண்ணாக நிறுத்தி, இந்நூலின் ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் பாடியிருக்கும் பகுதி, இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் நன்கு சுவைக்கும் இனிய நலம் பொருந்தியிருப்பதைக் காட்டும் பகுதியாக இருக்கின்றது. வாருங்கள். நாம் அனைவரும், அந்த மாலைக்காட்சியை ரசித்துப் பார்ப்போம்.
இந்தப் பாடலிலே, புகார் நகருக்குள் அந்தி என்னும் பசலை எப்படி வந்தாள் எனக் கூறுகிறார் சீத்தலைச் சாத்தனார். அதனை இங்கு பார்க்கலாம்.
குண திசை மருங்கில் நாள் முதிர் மதியமும்
குட திசை மருங்கில் சென்று வீழ் கதிரும் —————————–05-120
வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடு ஆக
எள் அறு திருமுகம் பொலியப் பெய்தலும்
அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை அடக்க
பூம் பொதி சிதையக் கிழித்துப் பெடை கொண்டு
ஓங்கு இருந் தெங்கின் உயர் மடல் ஏற
அன்றில் பேடை அரிக் குரல் அழைஇ
சென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப
பவளச் செங் கால் பறவைக் கானத்து
குவளை மேய்ந்த குடக் கண் சேதா ——————————-05-130
முலை பொழி தீம் பால் எழு துகள் அவிப்ப
கன்று நினை குரல மன்று வழிப் படர
அந்தி அந்தணர் செந் தீப் பேண
பைந் தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப
யாழோர் மருதத்து இன் நரம்பு உளரக்
கோவலர் முல்லைக் குழல் மேற்கொள்ள
அமரக மருங்கில் கணவனை இழந்து
தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல
கதிர் ஆற்றுப்படுத்த முதிராத் துன்பமோடு
அந்தி என்னும் பசலை மெய்யாட்டி
வந்து இறுத்தனளால் மா நகர் மருங்கு என்
குணதிசை மருங்கின் நாண்முதிர் மதியமும்
1. கிழக்குத் திசையில் நண்பகல் கடந்த உதயமாகும் பூரண சந்திரனும். குடதிசை மருங்கிற் கென்றுவீழ் கதிரும் 120
2. மேற்குத் திசையில் சென்று வீழும் சூரியனும் வெள்ளிவெண் தோட்டொடு பொற்றோ டாக
3. வெள்ளியிலான வெண்மையான தோட்டுடன், பொந்தோடுமாக விளங்கும் எள்ளறு திருமுகம் பொலியப் பெய்தலும்
4. களங்கமற்ற அழகிய திருமுகமும் பொலிவுற்று விளங்கலும் புகார் நகர் புகார் நகர் பெண்ணாக, ஒருபுறம் வெண்தோடும், மறுபுறம் பொன்தோடும்
5. பொலிகிறது. சூரியன் மறைய, சந்திரன் தோன்றுகிறது. அன்னச் சேவல் அயர்ந்துவிளை யாடிய
6. ஆண் அன்னம் தன்னுடைய பெண் அன்னத்துடன் விளையாடுகிறது தன்னுறு பெடையைத் தாமரை யடக்கப்
7. பெண் அன்னம் தாமரை மலரில் சென்று அமரும். மாலையில் தாமரை மலர் இதழ்களை மூடும். பெண் அன்னம் தாமரை மலர்களால் இதழ்களால், மூடப்பட்டு விடும். பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்
8. பூவிதழ்கள் சிதறும்படியாக சிறகடித்து சிதைத்து, தன் பெண் அன்னத்தை மீட்டு டோங்கிருந் தெங்கின் உயர்மட லேற
9. ஓங்கிய தென்னை மரத்தில் ஏறியது. இது என்னவென்றால் மாலையிலே பறவைகள் எல்லாம் மரங்களிலே அடைவதைக் கூறுகின்றது. இது இயறகை நிகழ்வாகும். இங்கு ஒரு குறிப்புப் பொருளும் அடங்கியுள்ளது. என்னவென்றால் மணிமேகலை உவவனம் என்னும் மலர்வனத்துக்கு மலர் கொய்யத் தன் தோழியுடன் வருகிறாள். அவளக் காண வருகிறான் உதய குமாரன். அவன் மணிமேகலை வரும்வரை காத்திருக்கிறான். அவள் வரவில்லை. காம நோயுடன் அவன் திரும்புகிறான். அந்த வேளை அங்கு வந்த மணிமேகலை, காதல் வயப்பட்டாலும், அந்தக் காதல் கெட்டு ஒழிக என வேண்டுகிறாள். இவ்வேளை அங்கு வந்த மணிமேகலா தெய்வம், வந்து அவளை மீட்டுக் கொண்டு போகிறது. இதனை, குறிப்பாக காட்டுகின்றார் ஆசிரியர். அதாவது, ஆண் அன்னம், தன் பேடையை மீட்பது போல், உதயகுமாரனை எண்ணி, காதல் வயப்பட்டாலும், மணிமேகலை காதல் கெட்டு ஒழிக என்பதை அறியும் மணிமேகலா தெய்வம் அவளை மீட்டுச் செல்கிறது. அன்றிற் பேடை அரிக்குர லழைஇச்
10. அன்றில் பேடை தன் மெல்லிய குரலால், ஆண் பறவையை சென்றுவீழ் பொழுது சேவற் கிசைப்பப்
11. அழைத்து சென்று வீழ்கின்ற மாலைப்பொழுதுச் செய்தியைக் கூறுகின்றது. பவளச் செங்காற் பறவைக் கானத்துக்
12. பவளம் போன்ற சிவந்த கால்களையுடைய பறவை நிறந்த காட்டிலே குவளை மேய்ந்த குடக்கட் சேதா
13. குவளை மலர்களை மேய்ந்த திரட்சியான சிவந்த கண்களை உடைய பசுக்கள் மேய்கின்றன. முலைபொழி தீம்பால் எழுதுக ளவிப்பக்
14. பசுக்கள் மேய்ந்து விட்டுச் செல்ல அவற்றின் முலைகளிலிருந்து பொழிகின்ற தீம்பால், புகார் நிலத்துப் புழுதியை அடக்கிச் செழிப்படையச் செய்கின்றன. இங்கு நாட்டு வளம் பேசப்படுகின்றது. கன்றுநினை குரல மன்றுவழிப் படர
15. அவை தன் கன்றுகளை நினைத்துக் குரலெழுப்பியவாறு தன் தொழுவம் நோக்கி நடக்கின்றன. மாலைவேளையில் பசுக்கள் தொழுவம் நோக்கி நடப்பதும் இயற்கையின் செயற்பாடு. அந்தி யந்தனர் செந்தீப் பேணப்
16. அந்தி மாலை வேளையில் அந்தணர்கள், யாகத்துக்குரிய செந்தீயை வளர்ப்பர் பைந்தொடி மகளிர் பலர்விளக் கெடுப்ப
17. பசுமையான வளையல்கள் அணிந்த பெண்கள் பலரும் வீடுகள் தோறும் விளக்குகளை ஏற்றி வைக்கிறார்கள். யாழோர் மருதத் தின்னரம் புளரக்
18. யாழ் வாசிக்கும் பாணர்கள், யாழின் நரம்புகளை வருடி, மருதப் பண்ணை இசைக்க கோவலர் முல்லை குழன்மேற் கொள்ள
19. இடையர் புல்லாங்க்குழலால், முல்லைப் பண் இசைக்கின்றனர். இந்த நிலையில் தான் புகார் நகரில் மாலைப்பொழுது வருகின்றது. அமரக மருங்கிற் கணவனை யிழந்து தமரகம் புகூஉம் ஒருமகள் போலக்
20. போர்க்களத்தில் கணவனை இழந்து தமது உறவினர் வீட்டுக்குச் செல்லும் ஒரு பெண்மகள் போல மாலைப்பொழுது வருகிறது. கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமோ
21. சூரியனை வழியனுப்பி வைக்க முதிராத நீங்காத துன்பமொடு டந்தி யென்னும் பசலைமெய் யாட்டி
22. அந்தி எனும் பசலை தழுவப்பெற்ற மேனியொடு வந்திறுத் தன்னால் மாநகர் மருங்கின்
23. புகார் என்னும் மாநகரகை மாலை வந்தடைந்தாள் காலை வந்தது. இன்பம் தந்தது, மதியம் இன்னும் சிறப்பாகச் சிரித்து வந்தது. மாலை மட்டும் மங்கலாக வந்தது. காலை வெளிச்சமாக இருந்து, மதியம் சிரித்து வந்தது, அந்தி என்னும் பசலை கொண்ட மேனியுடன் காதலனான சூரியன் பிரிந்த துயருடன் மாலை வந்தது. அது தன் காதலனை வழியனுப்பி வைத்து விட்டு, மாலை மங்கலாக வருகிறது. இயற்கை நிகழ்வாக, மானிட நடத்தையாக, பறவை விலங்கு பற்றிய செயலாக்க காட்டப்படுகிறது. சூரியன் சென்று மறைகிறது. சந்திரன் உதிக்கிறது. இப்படி பல நிகழ்வுகளாக புகார் நகர மாலைக்காட்சி உருவகிக்கப் பட்டுள்ளது. உவமை அணி, அமரகமருங்கில், தற்குறிப்பேற்ற அணி, மாலை மங்கலாக வருவது, காதலனை வழியனுப்பி வைத்த துயருடன் வருகிறது.
புகார் நகரின் சிறப்பு.
சூரிய சந்திரன் ஒளியால், வனப்பு மிக்கதாக, பறவை விலங்கின் அன்புணர்வுடன், பெண்கள் வீடுகளில் விளக்கேற்ற, பாணர் மருதப் பண்ணிசைக்க, கோவலர் புல்லாங்குழல் இசைக்க, அந்தணர் யாகத்துக்குரிய செந்தீ வளர்க்கின்றனர். இப்படி பலப் பல இயற்கைக் காட்சிகளைக் கோர்த்துச் சொல்கிறார் ஆசிரியர்.
இந்திரவிழாக் காண வந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையை வான்வழியே எடுத்துச் செல்கிறது. மணிபல்லவத் தீவில் அவளுக்குப் பழம்பிறப்பை உணர்த்துகிறது. தீவதிலகை என்பவள் அறிவுரைப்படி மணிமேகலை அமுதசுரபி என்னும் அற்புதப் பாத்திரத்தைப் பெற்று மீண்டும் புகார் நகருக்கு வருகிறாள். தன் தாயுடனும், சுதமதியுடனும் அறவண அடிகளைச் சந்திக்கிறாள். அவர் அவளுக்கு ஆபுத்திரன் கதையை எடுத்துரைக்கிறார். பசிப்பிணி நீக்கும் அறத்தைச் செய்யுமாறு அறிவுறுத்துகின்றார். காயசண்டிகை என்பாள் அறிவுரைப்படி ஆதிரையிடம் முதற் பிச்சை பெறுகிறாள்.
ஆதரவு அற்றவர்களுக்கும், காலில்லார், கண்ணில்லார், காது கேளாதார் முதலியோர்க்கும் உணவளிக்கும் அறப்பணியைத் தொடர்கிறாள். உலக அறவி என்ற இடத்திற்கு அவள் சென்றபொழுது, உதயகுமரன் அவளைத் தொடர்கிறான். தன் மந்திர வலிமையால் காயசண்டிகை வடிவத்தை அவள் மேற்கொள்கின்றாள். சிறைச்சாலைக் கைதிகட்கு உணவூட்டுகிறாள். அரசன் இவள் அறிவுரை கேட்டுச் சிறையை அறச்சாலை ஆக்குகிறான்.
காயசண்டிகை வடிவில் இருப்பவள் மணிமேகலையே என்று உணர்ந்த உதயகுமரன் அவளை மீண்டும் காணப் போனபோது, அவள் அவனுக்கு அறிவுரை கூறுகிறாள். அப்போது காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் என்பவன் கைவாளால் உதயகுமரன் இறக்கிறான். மணிமேலை சிறை செய்யப்பட்டு பல துன்பங்கட்கு ஆளாக்கப்படுகிறாள். அரசமாதேவி செய்த தீமைகளையெல்லாம் தன் தவ வலிமையால் வென்று அவளுக்கு அறிவுரை கூறுகின்றாள். எல்லா உயிர்க்கும் அன்பு செய்யுமாறு அவளுக்கு அறிவுறுத்துகின்றாள்.
பின்னர் ஆபுத்திரன் அரசனாக ஆளும் நாகபுரம் செல்கிறாள். அவனுடன் மணிபல்லவத்திற்கு வருகிறாள். ஓர் ஆண் வடிவம் தாங்குகின்றாள். பல சமயவாதிகளிடம் அவரவர் சமயத் தத்துவங்களையும் கேட்டறிகின்றாள். கச்சி மாநகரில் இருந்த அறவண அடிகளைத் தன் தாயுடன் அடைகிறாள்; அவரை வணங்குகின்றாள். அவர் அவளுக்குப் புத்த தருமத்தைப் போதித்தார். இறுதியாகத் தவ நெறியை மேற்கொண்டு, தன் பிறவிப் பிணி நீங்குமாறு முயல்கின்றாள்.
இக்காவியத்தில் மேலும் ஆதிரை, ஆபுத்திரன், சுதமதி, விசாகை, மருதி முதலானோர் பற்றிய கிளைக்கதைகளும் உள்ளன. இவை மூலக்கதையோடு தொடர்புற்றுக் கதைக்குச் சுவையூட்டுகின்றன.
நூற்பட்டியல்:
மணிமேகலை, புலியூர்க்கேசிகன் தெளிவுரையுடன்., பாரி நிலையம், 184 பிராட்வே., சென்னை 108. மறுபதிப்பு 2011.
























