”மஹிந்த ராஜபக்ச,மைத்ரி -ரணில் நல்லாட்சி,கோத்தபாய ராஜபக்ச , ரணில் அரசு போன்றவற்றினால் ஜெனீவாவில் சாதிக்க முடியாத விடயத்தை தமிழ் மக்களின் பேராதரவோடு ஆட்சிபீடம் ஏறிய அநுரகுமார அரசு அந்த தமிழ் மக்களின் ஆதரவைக் காரணம் காட்டியே தனக்கு சாதகமாக சாதித்து தமிழர் தரப்புக்களை ஜெனீவா தீர்மானத்தில் மண் கவ்வ வைத்துள்ளது”
கே.பாலா
எதிரிகளை மன்னித்தாலும் துரோகிகளை மன்னிக்கக் கூடாது என்பது போரியல் மரபு.அது அரசியலுக்கும் சாதாரண வாழ்க்கைகவும் கூட நன்கு பொருந்தும்.ஏனெனில் எதிரிகள் நேரில் மோதுவார்கள்,துரோகிகள் கூட இருந்தே குழிபறிப்பார்கள் ,நம்பிக்கைத் துரோகம் செய்வார்கள். அவ்வாறான ஒரு நம்பிக்கைத் துரோகத்தைத்தான் தமிழ் மக்களின் பேராதரவு பெற்று ஆட்சிபீடம் ஏறிய தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசியமக்கள் சக்தி அரசும் தமிழ் மக்களுக்கு செய்யத் தொடங்கியுள்ளது.
மனித உரிமை மீறல்கள்,ஆக்கிரமிப்புகள்,அபிவிருத்திகள் அதாவது பொறுப்புக்கூறல்,நல்லிணக்கம் ,பொருளாதாரம் தொடர்பில் இந்த அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசியமக்கள் சக்தி கூட்டணி நியாயமாக செயற்படுமென வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நம்பியே தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரையும் புறக்கணித்து அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாக்களித்து வரலாற்று வெற்றியை பெற்றுக்கொடுத்ததுடன் பாராளுமன்றத் தேர்தலிலும் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலிருந்து 7 தமிழ் மக்கள் பிரதிநிதிகளையும் பெற்றுக் கொடுத்தனர்.
ஆனால் அநுரகுமார அரசு மனித உரிமை மீறல்கள் விடயத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மூடி மறைத்து ஜெனீவாவில் தமிழ் மக்களை, அவர்களின் நீதி கோரலை தோற்கடித்து ஜெனீவா தீர்மானத்தை வலுவிழக்க வைத்து நிறைவேற்றி கடந்த அரசுகளை விடவும் தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அடுத்ததாக ஆக்கிரமிப்பு விடயத்தில் மன்னாரில் காற்றாலை மின் திட்டத்தை அமைத்தே தீருவது என்பதில் விடாப்பிடியாக நிற்பதுடன் மக்களின் பெரும் போராட்டங்களையும் பொலிஸ் காட்டு மிராண்டித்தனத்தால் அடக்கி, தாக்கி தனது இனவாத முகத்தைவெளிப்படுத்தியுள்ளது .அடுத்ததாக அபிவிருத்தி விடயத்தில் வடக்கில் பெரும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுவதாக காட்டிக்கொண்டு பிரதான அபிவிருத்திகளை செய்ய முடியாதென அரசு பகிரங்கமாகவே அறிவித்து .தமிழர் தேசத்தை அபிவிருத்தியில் முடக்கியுள்ளது.புறக்கணித்துள்ளது.
இதில் பொறுப்புக்கூறல் விடயத்தில் கடந்த எந்த அரசுகளும் ஜெனீவாவில் பெறாத வெற்றியை இம்முறை அநுரகுமார அரசு பெற்றுள்ளது என்றே கூற வேண்டும்.ஏனெனில் ஜெனீவாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை தொடர்பில் 2012 இல் இருந்து இதுவரை நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானங்கள் அனைத்தையும் விட மிகவும் மோசமான, பலவீனமான ஒரு தீர்மானமாகவேயுள்ளது.இந்த ஜெனீவாத் தீர்மானம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. செய்கின்ற அடிப்படை துரோகமாக உள்ள நிலையில் அநுரகுமார அரசு சர்வதேச ரீதியில் பெற்ற பெரு வெற்றியாகவும் உள்ளது.
அதுமட்டுமன்றி இலங்கை தொடர்பான பிரேரணையில் ”இனப்பிரச்சினை”என்ற பதம் நீக்கப்பட்டுள்ளது தமிழர்களுக்கு விழுந்த பேரிடியாகவும் சிங்களதேசத்திற்கு பெரு வெற்றியாகவும் உள்ளது.அநுரகுமார அரசின் வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த ”இனப்பிரச்சினை ”என்ற பதம் நீக்கப்பட்டுள்ளது என்பது தான் இங்கு முக்கியம். ”இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கைக்கு ஆதரவான ஏனைய சில நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைவாகவே ‘இனப்பிரச்சினை’ எனும் சொல்லுக்குப் பதிலாக ‘மோதல்’ எனும் பதம் சேர்க்கப்பட்டது” என இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமை வகிக்கும் பிரிட்டன் விளக்கமளித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டம்பர் 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் முதலாவது வரைவு கடந்த மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
அதனையடுத்து அப்பிரேரணை தொடர்பில் கடந்த மாத நடுப்பகுதியில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர், தமது மாற்று அபிப்பிராயங்களை முன்வைத்தனர். அதன் பிரகாரம் இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை முதலாம் கட்ட மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, திருத்தங்கள் உள்வாங்கப்பட்ட பிரேரணை கடந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டது.அத்திருத்தப் பிரேரணையில் ‘மோதல்கள்’ எனும் சொல்லின் மூலம் ‘இனப்பிரச்சினை’ என்ற சொற்பதம் பதிலீடு செய்யப்பட்டிருந்ததுடன், சர்வதேச மனிதாபிமானச்சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்யேக நீதித்துறைப் பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்த விடயம் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் மற்றும் ஜெனிவாவில் உள்ள பிரித்தானிய பிரதிநிதிகளிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கேட்ட போது அதற்குப் பதிலளித்த அப்பிரதிநிதிகள் பிரேரணையில் ‘இனப்பிரச்சினை’ எனும் சொல்லுக்குப் பதிலாக ‘மோதல்கள்’ என்ற பதத்தைப் பயன்படுத்துமாறு இலங்கை அரசாங்கமும், இலங்கைக்கு ஆதரவான வேறு சில நாடுகளும் தம்மிடம் கோரியிருந்ததாகத் தெரிவித்துள்ளனர். அத்தோடு பிரேரணையில் சொற்பதங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பினும், அவை பிரதிபலிக்கும் பொருளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
ஆக கடந்த மஹிந்த ராஜபக்ச அரசு,மைத்ரி -ரணில் நல்லாட்சி அரசு,கோத்தபாய ராஜபக்ச அரசு, ரணில் அரசு போன்றவற்றினால் சாதிக்க முடியாத இந்த விடயத்தை தமிழ் மக்களின் பேராதரவோடு ஆட்சிபீடம் ஏறிய அநுரகுமார அரசு அந்த தமிழ் மக்களின் ஆதரவைக் காரணம் காட்டியே தனக்கு சாதகமாக சாதித்து தமிழர் தரப்புக்களை ஜெனீவாவில் மண் கவ்வ வைத்துள்ளமை ,ஜெனீவா தீர்மானத்தை நீர்த்துப்போக வைத்தமை என்பது தமிழ் மக்கள் அநுரகுமார அரசிடம் பொல்லுக்கொடுத்து அடி வாங்கியது போன்றும் தமிழர்களின் விரலை வைத்தே அரசு அவர்களின் கண்களை குத்தியது போன்றுமே உள்ளது.
அடுத்தது மன்னார் காற்றாலை மின்திட்ட பிரச்சினை. கடந்த அரசினால் இந்திய அதானி நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்திற்கு எதிராக மன்னார் மாவட்ட மக்கள் தொடர்ந்தும் போராடி வரும் நிலையில் அந்த மக்களின் கடும் எதிர்ப்புக்களையும் மீறி போராட்டங்களையும் கவனத்தில் எடுக்காது போராடியோர் மீது பொலிஸாரைக் கொண்டு கடும் தாக்குதல்களை மேற்கொண்டும் போராட்டக்காரர்களை கைது செய்தும் நீதிமன்றங்களுக்கு அழைத்தும் அச்சுறுத்தி அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் அநுரகுமார அரசு தீவிரமாகவுள்ளது.தமிழர் பகுதிகளில் எந்த வித ஆக்கிரமிப்புக்களும் ,தமிழர்கள் விரும்பாத எந்தவொரு அபிவிருத்திகளும் இடமபெறாது என அநுரகுமார அரசு கொடுத்த வாக்குறுதிகளை மீறி முன்னெடுக்கப்படும் ஒரு நம்பிக்கைத் துரோக நடவடிக்கையாகவே இது உள்ளது.
அடுத்ததாக அபிவிருத்தி.எந்த மாகாணத்தையும் விட போரினால் மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதிலேயே முனைப்புக்காட்டுவதாகவும் அதற்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு படம் காட்டினாலும் அங்கு சிறு சிறு அபிவிருத்திகள் மட்டுமே முன்னெடுக்கப்படுவதுடன் கண்டிப்பாக அபிவிருத்தி செய்ய வேண்டிய இடங்களை அபிவிருத்தி செய்ய முடியாதென இந்த அரசு வெளிப்படையாகவே கூறி தமிழர் எந்த தேவைக்கும் தென்னிலங்கையையே நம்பியிருக்க வேண்டும் என்ற பேரினவாத சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளது.
பலாலி விமான நிலையம்,காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி ஆகிய இரண்டையும்- நான்கு மாதத்திற்குள் நிறைவு செய்துகாட்டுவோம் என்று அன்று அறிவித்த அரசு இன்று இவை இரண்டையும் அபிவிருத்தி செய்ய மாட்டோம் என அறிவித்துள்ளது .அண்மையில் யாழ்ப்பாணம் சென்ற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவே அங்கு இந்த பகிரங்க அறிவிப்பை விடுத்தார். அதனை பின்னர் அவர் பாராளுமன்றத்திலும் அதனை உறுதிப்படுத்தினார்
இது தொடர்பில் அவர் பாராளுமன்றத்தில் கூறுகையில் ”காங்கேசன்துறை துறைமுகத்தை அண்மித்த கடற்பகுதி 10 மீற்றர்- 12 மீற்றர் வரை ஆழ பரப்பைக் கொண்டுள்ளதுடன் அந்த ஆழத்தை மேலும் அதிகரிப்பதற்கு அதிக நிதியை செலவிட வேண்டும்.இந்த துறைமுகத்துக்கான எதிர்கால கேள்வி மற்றும் எதிர்பார்க்கப்பட்ட இலக்கு ஆகியவற்றை கவனத்திற் கொள்ளும் போது காங்கேசன்துறை துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்றியமைப்பது பொருளாதாரத்துக்கு வினைத்திறனானதாக அமையாது”என்கிறார். இந்தக் காங்கேசன்துறை துறைமுகத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கு இந்திய அரசாங்கம் 63 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கியும் கூட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர் பிமல் ரத்நாயக்கா இதனை நிராகரித்திருக்கின்றார்.தற்போது காங்கேசன்துறை துறைமுகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதற்கான அடிப்படை விடயங்களைக் கூட செய்வதற்கு அமைச்சர் மறுக்கின்றார்.
அத்துடன் ”நிபுணத்துவ திட்டமிடலுக்கு அமைய பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுமே தவிர அரசியல்வாதிகளின் நோக்கங்களுக்காக அல்ல” என்றும் கூறினார் . அதாவது இந்திய உதவி திட்டங்களுடன் வடக்கை அபிவிருத்தி செய்து சர்வதேசத்திற்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் – இலங்கைக்கும் இடையிலான போக்குவரத்து மையமாக வடக்கைமாற்றுவதற்கு அரசு விரும்பவில்லை என்பதுதான் அமைச்சர் பிமல் ரத்நாயக்காவின் இந்த அறிவிப்பின் அடிப்படை அர்த்தம். பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தால் அது கட்டுநாயக்காவுக்கு நிகரான ஒன்றாக மாறிவிடும் அதனால் வடக்கின் பொருளாதாரம் மேம்படும். அதேபோல காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்தால் யாழ்ப்பாணம் மேம்பட்டு விடும் உற்பத்திப் போக்குவரத்துக்கு அது மையமாகிவிடும் தமிழர் பிரதேசம் அபிவிருத்தியடைந்து விடும் என்ற பேரினவாத சிந்தனைதான் அமைச்சரின் இந்த அறிவிப்பு
வடக்கு, கிழக்கிலே எவ்வித பொருளாதார மேம்பாட்டு விடயங்களும் கட்டியெழுப்பப் படக்கூடாது, வடக்கு, கிழக்கு மக்கள் அனைத்து விடயங்களுக்கும் தென்னிலங்கையை நம்பி, தென்னிலங்கை அரசை மாத்திரம் நம்பி வாழ வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு இனவாதமான மனநிலையிலேயே இந்த அரசாங்கமும் செயற்படுகின்றது .ஐ. நா.மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக் கூறல் விடயத்திலும் நல்லிணக்கம் சம்பந்தமான விடயத்திலும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விடயத்திலும் தமிழ் மக்களுக்கு இந்த அநுரகுமார அரசாங்கம் துரோகமே செய்துள்ளது என்பதற்கான 3 உதாரணங்களே இவை.
இலங்கையில் ஒரு அரசியல் ”மாற்றம்”வேண்டுமென எதிர்பார்த்து ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி,ஜே .வி.பி.ஆகியவற்றின் தலைவரான அநுரகுமார திசாநாயக்காவுக்கு 56,34,915 வாக்குகளை வழங்கி ஜனாதிபதியாக்கி பெருமைப்பட்டதுடன் அவரது கட்சி நாட்டை ஆழ பாராளுமன்றத்துக்கான தேர்தலில் 68,63,186 வாக்குகள் மூலம் 159 பாராளுமன்ற ஆசனங்களை வழங்கி அழகுபார்த்த மக்களில் வழக்கத்தை விட இம்முறை அதிக பங்களிப்பு செய்த சிறுபான்மையினத்தவர்களான தமிழ் மக்கள் ,நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி மக்களுக்கு புதிய திசைகாட்ட வந்த அநுரகுமார அரசால் ஏமாற்றப்படும் துரோகம் செய்யப்படும் நடவடிக்கைகளே ”தமிழ் மக்களின் ஆதரவு”என்ற முகமூடியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
























